பார்வை: குற்றங்களை இயல்பானதாக்குவதும் குற்றமே

By ச.கோபாலகிருஷ்ணன்

இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கினின் பேச்சும் சில நாட்களுக்கு முன் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படமும் திரைத் துறையினர் பெண்களை எப்படி நடத்துகின்றனர்/சித்தரிக்கின்றனர் என்பதற்கான சமீபத்திய உதாரணங்கள்.

இவை இரண்டும் பெண்களுக்கு எதிரான இரண்டு குற்றங்களை மிகச் சாதாரணமானவையாகச் சித்தரிக்கின்றன.

ஜூலை 15 அன்று சென்னையில் ‘பேரன்பு’ திரைப்படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தில் மம்முட்டியின் நடிப்பு, திரை ஆளுமை ஆகியவற்றைப் பாராட்டிப் பேசினார் மிஷ்கின். பிறகு ஒரு படி மேலே போய், “நானொரு இளம் பெண்ணாக இருந்திருந்தால் மம்முட்டியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருப்பேன்” என்றார். அவர் இப்படிக் கூறியதும் அரங்கில் பலத்த கைதட்டல் கிடைத்ததும் பாலியல் வல்லுறவு குறித்து அங்கு இருந்தவர்களின் பார்வையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இது விளையாட்டல்ல

இதை வெறும் விளையாட்டாகவோ உணர்ச்சிவயப்பட்ட தருணத்தின் வெளிப்பாடாகவோ நடிகரின் மீதான உச்சபட்ச ஆராதனையாகவோ கடந்து செல்ல முடியாது. காரணம் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நம் நாட்டில் இதுபோன்ற பேச்சுகள் குற்றத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தவே செய்யும்.  பாலியல் வல்லுறவு, பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் உச்சபட்ச வன்முறை என்ற தெளிவு இருந்திருந்தால் “உன்னை வல்லுறவுக்கு ஆளாக்குவேன்” என்று விளையாட்டாகக்கூட ஒருவரைப் பார்த்து சொல்லத் தோன்றாது.

எந்தப் பாலினம் என்றாலும் குற்றம்தான்

‘பாலியல் பலாத்காரத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தாம். மிஷ்கின் தன்னை ஒரு பெண்ணாக வரித்துக்கொண்டுதானே அப்படிப் பேசினார். இது எப்படிப் பெண்களுக்கு எதிரானதாக இருக்க முடியும்’ என்று சிலர் வாதாடுகின்றனர். அவர்கள் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துப் பாலினங்களின் மீதான பாலியல் குற்றங்களையும் சமமான தீவிரத்துடன்தான் எதிர்க்க வேண்டும்.

குற்றம் செய்தவர் எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சமமான வகையில் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக எல்லா வயதுப் பெண்களும் எல்லா வயது ஆண்களாலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் ஆபத்து நிலவும் நம் சமூகத்தில், பொதுத்தளத்தில் எந்த நோக்கிலும் ‘வல்லுறவு’ என்ற சொல்லைச் சாதாரணமானதுபோல் சித்தரிப்பது பெண்களுக்கு எதிரான செயல்தான்.

மேலும், ‘நானொரு பெண்ணாக இருந்திருந்தால்’ என்று சொல்லும் அளவுக்குக் கவனமாக இருக்கத் தெரிந்த மிஷ்கினுக்கு, மேடையில்  ‘வல்லுறவு’ என்ற சொல்லைப் போகிற போக்கில் இயல்பானதாகச் சொல்லக் கூடாது என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

மிஷ்கினின் பேச்சு இப்படி என்றால், பாண்டிராஜ் இயக்கி, கார்த்தி நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் ஒருவர் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை இயல்பான விஷயம் ஆக்குகிறது. ஆணவக் கொலை, உறவின் பெயரால் முதிய ஆண்களுக்கு இளம் பெண்களைத் திருமணம் செய்துவைப்பது, ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துவைப்பதில் நம் குடும்பங்கள் அக்கறை இல்லாமல் இருப்பது போன்றவற்றை இந்தப் படம் விமர்சிக்கிறது.

அவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டிய இந்தப் படத்தில் நாயகனின் தந்தையும் ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான சத்யராஜ் ஆண் குழந்தைக்காக அக்காள், தங்கை இருவரையும் மணக்கிறார். இரண்டாவது மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்க, மூன்றாவது திருமணம் செய்ய முற்படுகையில் முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துவிடுகிறது. அதுவும் முதல் மனைவியே தன் தங்கையைக் கணவனுக்குத் திருமணம் செய்துவைப்பதை, ‘அவரது பெரிய மனது’ என்று வர்ணிக்கும் வசனமும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இயல்பாக்கப்படும் இழிவு

குழந்தையின்மைக்காக ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் அவலம் இந்தியச் சமூகத்தில் இன்றும் தொடர்கிறது. ஆனால், ஒரு பெண்ணை விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணை மணந்துகொள்வது சட்டப்படியும் அறத்தின்படியும் குற்றம். ஆண் மையச் சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பெண்கள் இதைப் பொறுத்துக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்த இழிவை இயல்பானதாகச் சித்தரிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. படத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்வது குறித்த சிறு விமர்சனம்கூட இடம்பெறவில்லை. இரண்டாவது மனைவியாக வரும் பானுப்ரியா மட்டும் அதுவும் தன் பேத்திக்கு தான் கனவு கண்ட வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும் நிலையில் வெறும் புலம்பலாக மட்டுமே வெளிப்படுகிறது.

ஏதோ மிஷ்கினும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினரும் மட்டும் இதைச் செய்யவில்லை. நாயகன் தன் ‘ஆண்மை’யை நிரூபிக்கப் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் ‘வரலாறு’ உட்பட பல தமிழ்ப் படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. ‘ரெட்டை வால் குருவி’, ‘வீரா’ போன்ற பல படங்களில் நாயகன் இரண்டு பெண்களை மணந்துகொள்வது இயல்பானதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்கின்றன. அனைவரும் இதுபோன்ற குற்றங்களின் தீவிரத்தன்மையை முழுமையாக உணர்வதுதான் இதற்கான தீர்வின் தொடக்கமாக இருக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்