வேலூரில் வசித்துவரும் திருநங்கையான ஜெயஸ்ரீ, தனக்கான அடையாளத்தை உருவாக்கப் போராடிவருகிறார். குறைந்த கட்டணத்தில் திருமணங்களுக்கு மணப்பெண் அலங்காரம் செய்துவரும் அவருக்கு இருக்கும் ஓர் ஆசை பெண்களுக்கான அழகு நிலையம் தொடங்க வேண்டும் என்பதுதான்.
வேலூர் சாயிநாதபுரத்தில் சாதாரணக் குடும்பத்தில் குமாரசாமி - சித்ரா தம்பதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்நாதன் பிறந்தார். வீட்டுக்கு மூத்த மகனாகப் பிறந்த சந்தோஷம் குடும்பத்தில் இருந்தாலும் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர். தங்கைகளுடன் சேர்ந்து வளர்ந்த ஜெகன்நாதன் பள்ளிக்குச் சென்றபோது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணத்தைக் காலம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தன்னிடம் பெண்தன்மை அதிகமாக இருந்ததால் பெண்ணாகவே மாறத் தொடங்கினார்.
ஏற்றுக்கொண்ட குடும்பம்: ஆரம்பத்தில் தங்கள் மகன் ஜெகன்நாதனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பெற்றோர் விரும்பவில்லை. ஜெகன்நாதனுக்குப் பிறகு பிறந்த இரண்டு மகள்களின் வாழ்க்கையை நினைத்து அவர்கள் கவலைப்பட்டதால் மகனின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மகனின் உடல் ரீதியான - மன ரீதியான மாற்றங்களுக்குத் தடைவிதிக்க முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தனர். பிறகு, ஜெகன்நாதன் ஜெயஸ்ரீயாக மாறினார்.
ஜெயஸ்ரீ தன்னைப் பற்றிக் கூறும்போது, “பள்ளிக் காலத்தில் எனக்குப் பெண்களைவிட ஆண்களிடம் பழகுவதுதான் பிடித்திருந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கைகளின் உடைகளை அணிந்துகொண்டு, பொட்டு வைத்து கண்ணாடி முன் நின்றபோது நானும் ஒரு பெண் என்கிற இனம் புரியாத சந்தோஷம் வந்தது. சிறிது நேரத்தில் அதையெல்லாம் களைந்துவிட்டு வழக்கம்போல் பேன்ட் - சட்டை அணிந்து பள்ளிக்குப் புறப்படுவேன். பிளஸ் 2 முடித்துத் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சேர்ந்தவரைக்கும் இதே நிலைதான். படிக்கச் சென்ற இடத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை முழுமையாக உடைத்துவிட்டது” எனச் சற்று நிறுத்தினார்.
திசை மாறிய பயணம்: சில நொடிகள் அமைதி காத்தவர் மீண்டும் தொடர்ந்தார். “என் கல்லூரிப் படிப்பு தொடர்பாக டிரெய்னிங் சென்ற இடத்தில் என்னிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். ஒரு பக்கம் குடும்பச் சூழல், மறுபக்கம் என் பாலினம் சார்ந்த மன அழுத்தம் என என்னை நான் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டிய நிலை இருந்தது. நான் ஆசைப்பட்டுச் சேர்ந்த படிப்பை வேறு வழியின்றிப் பாதியில் கைவிட வேண்டிய நிலை வந்தது. திருநங்கையர் குழுவினரோடு இணைந்து செயல்படத் தொடங்கினேன்” என்றார்.
அழகுக்கலை மீதான ஆர்வம் எப்படி வந்தது என்கிற கேள்விக்கு, “என்னைப் போன்றவர்களுக்குச் சென்னையில் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் குறுகிய காலப் பயிற்சியை அளித்து வருகின்றனர். அங்கு, பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சியை முடித்த பிறகு வேலை கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் மீண்டும் வேலூர் திரும்பி பணம் இல்லாமல் சுற்றினேன். அந்த நேரத்தில் எங்கள் குழுவில் இருப்பவர்களுக்கு நடக்கும் சடங்குகளில் அலங்காரம் செய்ய என்னை அழைத்தனர். நான் அவர்களுக்குச் செய்த அலங்காரம் சிறப்பாக இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள். வாய்ப்புகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கின. இப்போது மாதத்துக்கு ஒருமுறையாவது வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. என்னிடம் இருக்கும் நடனத் திறமையையும் வளர்த்துக்கொண்டு வருகிறேன்” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஜெயஸ்ரீ.
தொழில் தொடங்க விருப்பம்: பால் புதுமையரை இந்தச் சமூகம் புறக்கணிப்பது குறித்த தன் வருத்தத்தையும் ஜெயஸ்ரீ பதிவுசெய்கிறார். “சமுதாயத்தில் எங்களைப் புறக்கணிப்பவர்களே அதிகம். எங்களுக்கெல்லாம் குருவாக இருக்கும் கங்கா ஆயாவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு திமுகவினர் வாய்ப்பு கொடுத்து வெற்றிபெற வைத்தனர். அவரும் தன்னால் முடிந்த உதவிகளை இந்த மக்களுக்குச் செய்துவருகிறார். எங்களைப் போன்றவர்களை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். மற்றபடி என்னைப் போன்றவர்களை உங்கள் வீட்டுப் பெண்களாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். இந்தச் சமூகத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் எப்படி அனைவரும் சேர்ந்து கேள்வி கேட்கிறார்களோ, அதே மாதிரி எங்களுக்காகவும் கேள்வி கேட்க முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் எங்களை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால், ஆண்கள்தான் இன்னும் மாறவில்லை. மற்றவர்களைப் போலவே எனக்கான ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அதை இந்தச் சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். திருநங்கைகள் இந்தச் சமூகத்தின் ஒரு பகுதியாகப் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகின்றனர். இனியும் வாழத்தான் போகிறார்கள். எங்கள் வருங்காலச் சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். பத்துக்குப் பத்தடி இடத்தில் நான் சொந்தமாகப் பெண்கள் அழகு நிலையத்தைத் தொடங்கி, எனக்குப் பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன்” எனப் படபடவென கொட்டித்தீர்க்கிறார்.
சமூகம் அங்கீகரிக்க வேண்டும்: அரசு உங்களுக்குக் கொடுக்கிற வேலை
வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறலாமே என்றதும், “வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அதற்கான சட்டங்கள் நிறைய உள்ளன. இந்த அரசு எங்களையும் அங்கீகரித்து வாய்ப்புகளை வழங்குவது மகிழ்ச்சியாக இருந்தாலும், வேலை செய்யும் இடங்களில் எங்கள் மீதான பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. நாங்கள் தவறே செய்யாவிட்டாலும் குற்றவாளி ஆக்கப்படுகிறோம். இந்தச் சமூகத்துக்கு எங்களை வேலையில் சேர்த்துக்கொள்ள தயக்கம் இருக்கிறது. நாங்கள் இப்படி மாறியது யாருடைய பிழை? இதை நாங்களாக விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறபோது இது யாருடைய பிழை? எங்களுக்கு வேலை கொடுப்பதைவிடத் தொழில் முனைவோராக மாற்றுங்கள். எங்களை நாங்கள் முன்னேற்றிக் கொள்கிறோம்” என நம்பிக்கையுடன் கூறினார்.
“நான் திருநங்கையாக மாறியபோது, ‘உன் தங்கைகளின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப்பார்’ என என் அப்பா கோபத்துடன் கூறினார். ஒருகட்டத்தில் என் அப்பாவும் அம்மாவும் என்னைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டனர். எனக்கு இப்போது 30 வயதாகிறது. என் தங்கைகள் இருவருக்கும் திருமணம் முடித்துவிட்டோம். அவர்கள் குடும்பத்தினரும் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். நானும் ஒரு பெண்ணாக வாழ ஆசைப்படுகிறேன். என் தங்கைகளின் உடைகளை அணிந்து அழகுபார்த்த நான் இன்று எனக்கான உடைகளைக் கடைகளுக்குச் சென்று வாங்குகிறேன். இந்தச் சமூகத்தில் எங்களைப் புறக்கணித்து ஒதுக்கும் நிலை மாறி எங்களைக் கைகொடுத்து தூக்கிவிடும் நிலை வந்தால் எங்களில் யாரும் வீதிகளில் கையேந்தி நிற்க மாட்டார்கள்” என்கிற கோரிக்கையோடு விடைபெற்றார் ஜெயஸ்ரீ.