எசப்பாட்டு 45: பெண் தனக்காக வாழ்வது எப்போது?

By ச.தமிழ்ச்செல்வன்

என் மகள்களில் ஒருத்தியின் நெருங்கிய தோழி, ஒருவரைக் காதலிக்கிறாள். இருவரும் சிறு வயதிலிருந்தே தோழிகள் என்பதால் தன் காதல் சங்கதி உட்பட எல்லாவற்றையும் என் மகளிடம் அவள் பகிர்ந்துகொள்வாள். அவள் பகிர்வதையெல்லாம் மகள் என்னிடம் சொல்வதில்லை.

ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்துகொண்டாள். காதலிக்கத் தொடங்கிய பிறகு, அவளுடைய உடையிலும் உணவுப் பழக்கத்திலும் நிறைய மாறுதல்கள். ஐஸ்கிரீமை விரும்பிச் சாப்பிடுபவள் இப்போது ஐஸ்கிரீம் பக்கமே போவதில்லை. கேட்டால் அவருக்குப் பிடிக்காது என்கிறாள். அவருக்குப் பிடிக்கலைன்னா அவர் சாப்பிடாம இருக்கட்டும்; அதுக்காக நீ ஏன் சாப்பிட மாடேங்கிறே என்று கேட்டிருக்கிறாள்.

அதற்கு அவள், “இல்லையில்லை அவருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் ஆனா நான் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. நான் குண்டாகிவிடுவேனாம். அதனால விட்டுட்டேன்” என்று சொல்லியிருக்கிறாள். ரொம்ப மாடர்னாக உடை அணிவது அவளுக்குப் பிடிக்கும். இப்போது அதையும் மாற்றிக்கொண்டுவிட்டாள். ஏன்னா அவருக்குப் பிடிக்காதாம். லெக்கிங்ஸ் போடாதே எனக்குப் பிடிக்காது. அப்படியே போட்டாலும் வெள்ளை கலர் லெக்கிங்ஸ் போடாதே. ஸ்லீவ்லெஸ் வேண்டாம். அது எனக்குப் பிடிக்காது.

காதலிக்கிற அந்தப் பையன் கல்யாணத்துக்கு முன்னாடியே தன் விருப்பத்துக்கேற்ப அந்தப் பெண்ணைச் செதுக்கிக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. உயிருக்கு உயிரான ஐஸ்கிரீமைக் காதலுக்காக அவள் தத்தம் செய்துவிட்டாள். இழப்புகளின் கணக்கு இப்போதே அவளுக்குத் தொடங்கிவிட்டதான உணர்வு என்னைத் தாக்கியது. சிகரெட்டைத் தவிர வேறு எதையும் விடச்சொல்லி அவனை அவள் வற்புறுத்தவில்லை. சமத்துவமின்மை காதலிக்கும் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.

திருத்தியமைக்கும் சமூகம்

படித்திருந்தாலும் நவீன யுகத்துப் பெண்களாக இருந்தாலும் அன்பு, காதல் ஆகியவற்றின் பேரால் தாம் இழப்பது என்னவென்பதை அறியாமல், ஆணின் ருசிக்கேற்ப தாம் மறுவடிவமைப்புச் செய்யப்படுகிறோம் என்பதை அறியாமல்தான் இன்றைக்கும் பெரும்பாலான பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். காதல் கைகூடும் நாள்வரை ஆண், பெண்ணிடம் சரணாகதியடைவதாகக் காட்டுவதும் காதல் கைகூடியதும் அவளைத் தனக்கானவளாகத் திருத்தி வடிவமைக்கத் தொடங்குவதும் சத்தமில்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றன.

திணிக்கப்படும் மாற்றம்

காதல் என்ற ஒரு காட்சி இல்லாமலே வாழும் பெண் தெருவில் இறங்கி நடக்கையில் மொய்க்கும் பார்வைகள் திருத்தமாக்கிவிடுகின்றன. சேலையை இப்படி இழுத்து விடு; துப்பட்டாவை இன்னும் கீழே இறக்கிப் போடு; இப்ப சரியா இருக்கு நீ போகலாம். இது ஊரார் திருத்தும் கணக்கு.

மணப்பெண் என்று ஆகிவிட்டால் நிச்சயித்த நாள் முதல் மணநாள்வரை அவள் வீட்டைவிட்டு வெளியில் இறங்க முடியாது என்று குடும்பம் திருத்துகிறது. இன்னும் சில குடும்பங்களில் மாப்பிள்ளை வீட்டாரிடம் போன் பண்ணிக் கேட்ட பிறகுதான் தங்கள் பெண்ணையே கடைக்கு அழைத்துச் செல்கிறார்கள் பெற்றோர். ஏனெனில் நிச்சயம் செய்துவிட்டால் அவள் அடுத்த வீட்டுக்கு உடைமையாகிவிடுகிறாளாம். அவங்க பொருளைப் பத்திரமாப் பாதுகாத்து அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டுமாம்.

கருவுற்ற நாள் முதல் அவளுடைய உணவுப் பழக்கம், உறங்கும் பழக்கம், உட்காரும் நிலை என எல்லாவற்றையும் வயிற்றிலிருக்கும் சிசு மாற்றியமைக்கிறது. குழந்தை பிறந்து பால்குடி மறக்கும்வரை அவள் குழந்தையின் நலம் சார்ந்து மட்டும்தான் உண்டுறங்க வேண்டியிருக்கிறது. இதைக்கூட இயற்கை சார்ந்தது, உடலியல் சார்ந்தது என விட்டுவிடலாம். ஆனால், மற்றவையெல்லாம் பண்பாடு சார்ந்து திணிக்கப்படுபவை அல்லவா?

கைகூடாத கனவு

எங்களுக்குத் திருமணமான புதிதில் என் இணையருக்கு ஜிமிக்கி போட்டுக்கொள்ளும் ஆசை இருந்தது. என்னிடம் கேட்டார். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியருக்கு ஜிமிக்கி பொருத்தமாக இருக்காதே என்று என் கருத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் அவர் அதை வற்புறுத்தவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு அது பற்றி ஒருமுறை அவர் பெருமூச்சுடன் நினைவுகூர்ந்தபோது மிகுந்த குற்ற உணர்வுக்கு ஆளானேன். “சிறு வயதில் ஜிமிக்கி போட ஆசைப்பட்டபோது அப்பா வாங்கித் தரவில்லை.

பெரியவளாகி கைநிறைய சம்பளம் வாங்கின பிறகு நீங்கள் மறுத்துவிட்டீர்கள்” என்று இழப்பின் வலியுடன் சிரித்தார். ஒரு தலைமுறை தாண்டியும் நிறைவேறாக் கனவுகளின் பட்டியலில் ஜிமிக்கியும் சேர்ந்துவிட்டது. என் தவறை நான் உணர்ந்து திருத்திக்கொள்ளும் காலம் வந்தபோது முதுமை வந்துவிட்டது. அக்கனவும் இப்போது கரைந்து போய்விட்டது. சொல்லக்கூடியது இது. சொல்ல முடியாதது எத்தனையோ.

சிலம்பை ஏந்திய கண்ணகி

பிரளயனின் ‘வஞ்சியர் காண்டம்’ என்ற முழுநீள நாடகத்தில் ஒரு காட்சி வரும். நாடகம் கண்ணகியின் கதையை செவிலித்தாய் சொல்வதாக அமைந்திருக்கும். கடைசிக் காட்சியில், கணவனை இழந்து வாழ்வில் தோற்றுப்போனவளாக, தன்னந்தனியளாகக் கண்ணகி சோர்ந்துபோய் மலையை நோக்கி நடந்து மறைவாள். அவள் வாழ்நாளெல்லாம் மாதவியிடமிருந்து கணவன் வரமாட்டானா என்று ஏங்கிக் காத்திருந்தாள்.

அவன் திரும்பி வந்ததும் புதிய வாழ்வுக்கான கனவுகளுடன் மதுரைக்குப் போய் அங்கே பாண்டிய மன்னனால் கணவனை இழக்கிறாள். அவள் கதையைக் கேள்விப்பட்ட ஊரார் அவளுக்குச் சிலை வடிக்கிற காட்சிதான் நாடகத்தின் நிறைவுக் காட்சி. வாழ்விழந்த துக்க பாவத்துடன் கைகள் சோர்ந்து தொங்கப்போட்டிருக்கும் பெண்ணாகச் சிலையை வடிப்பார் சிற்பி.

இல்லை இல்லை இப்படி வடிச்சா சரியா இருக்காது என்று மக்கள் ஆட்சேபிப்பார்கள். வேறு மாதிரி வடிக்க வேண்டும் என்பார்கள். கை கூப்பியது போலவும் கைகளை விரித்தது போலவும் என வெவ்வேறு கோலத்தில் கண்ணகியை மாற்றி மாற்றி வடித்துக் கடைசியில் சிலம்பைக் கையில் கொடுத்து உயரத் தூக்கிப் பிடித்து நீதி கேட்கும் பாவத்துடன் வடித்து முடிப்பார்கள். ம்... இதுதான் ஒரு சக்தியாக இருக்கிறது; இதுதான் சரி என்று வடித்த மக்கள் திருப்தியடைவார்கள்.

தன்னைச் செதுக்கும் பெண்

நாம் காணும் வெவ்வேறு புராண, இதிகாச, காப்பியப் பெண்மணிகள் எல்லோருமே இப்படித் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவர்கள்தாம். கற்பைத் தீக்குளித்து நிரூபித்த சீதையின் தீக்குளிக் காட்சிதான் மிகவும் பிரசித்தம். கணவனைத் தலையில் தூக்கிக்கொண்டு பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் வீட்டுக்குச் செல்லும் நளாயினியின் சித்திரம்தான் அதிகமாக வரையப்படும். மீரா, ராதை என்றால் கண்ணனுக்காக உருகி இசை மீட்டும் காட்சிதான். ஜான்சி ராணி என்றால் முதுகில் குழந்தையுடன் குதிரையில் வாளேந்தி நிற்கும் கோலம். அவள் கடந்துவந்த துயர் மிகுந்த வாழ்வை மறக்கடித்துத் தங்களுக்குத் தேவையான வீரப்பெண்மணி வேடத்தையே அவளுக்குச் சமூகம் கொடுத்தது.

இப்படிக் காலம் காலமாக இதிகாசப் பெண்கள் சமூகத்தால்/காலத்தால் வடிவமைக்கப்பட்டார்கள். நாமும் நம் பங்குக்கு அவரவர் அளவில் நம் வீட்டுப் பெண்களைச் செதுக்கி நம் (ஆண்களின்) கண்களுக்கு உறுத்தாத கோலத்தில் திருத்தி வடித்து உலவவிட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அவர்களாக இருப்பதும் அவர்களே தம்மை வடித்துக்கொள்வதும் எப்போது?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்