இளம்பெண் ஒருவர் தன் காதலனைக் கொலை செய்த வழக்கில் கேரள நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் இந்த வாரம் பரபரப்பான ஒன்றாகப் பல்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. காதல் என்கிற ஒற்றை வார்த்தை இறுதியில் மரணத்தில் முடிவடைந்து இருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. காதல் என்பதை என்னவாக இந்தச் சமூகம் புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றது என்பது முதல் கேள்வி. வெகு நாள்கள் கழித்து கேரளத்தில் இளம்பெண் ஒருவருக்கு மரண தண்டனை அளித்திருக்கும் தீர்ப்பு நியாயமானதா என்பது அடுத்த கேள்வி.
விட்டு விலகுவது நல்லது: கிரீஷ்மா என்னும் அந்த இளம்பெண், மரணம் அடைந்த ஷரோன் ராஜைக் காதலித்தது உண்மைதான். ஆனால், அதற்குப் பிறகு கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை முன்வைத்து கிரீஷ்மா, ஷரோன் ராஜை விட்டு விலக முன்வந்தபோது ரேடியாலஜி மாணவரான அவர் கிரீஷ்மாவை விட்டு விலகச் சம்மதிக்கவில்லை. தன் வாழ்க்கையிலிருந்து ராஜ் விலக வேண்டுமெனில் அவரைக் கொல்ல வேண்டும் என்று கிரீஷ்மா திட்டமிட்ட நிமிடம்தான் இந்தச் சமூகம் உற்றுப்பார்க்க வேண்டிய மிக முக்கியமான கட்டம். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் வருவது போல அந்தப் பெண்ணை உபயோகித்தே அந்தக் குடும்பத்தினர் அந்தப் பையனைச் சாகடித்திருக்கக்கூடும் என்கிற ஊகமும் இந்தக் கொலை வழக்கில் இருக்கிறது.
ஒருவரைக் காதலித்துவிட்டுப் பின் அவரை விட்டு விலகும்போது சம்பந்தப்பட்ட நபர் விலகிப்போக சம்மதிக்காதபோது அவரை அந்த உறவில் இருந்து விலகிப்போகச் செய்ய பல்வேறு வழிகள் உண்டு. என்றாலும், ஏன் கிரீஷ்மா விஷம் என்னும் ஆயுதத்தைத் தன் கையில் எடுத்தார் என்பது மிகப்பெரிய கேள்வி.
ஷரோன் ராஜுக்குக் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் கிரீஷ்மா. அதன் கசப்புத்தன்மையை முன் வைத்து ஷரோன் அதைக் குடிக்க மறுத்துப் பிறகு குடித்திருக்கிறார். விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்த அந்த நொடி அவருடைய மனம் நிச்சயமாக கிரீஷ்மாவை நம்பியிருக்கும். அப்படி நம்பி, தான் கொடுக்கும் உணவை உண்ணும் ஒருவரைத் தீர்த்துக்கட்டும் எண்ணம் கொண்ட கிரீஷ்மா மிக மோசமான வன்முறையாளர். எந்த மன்னிப்பாலும் சமன் செய்யா முடியாத அவரது கொடூரச் செயலுக்கு அவர் சிறையிலேயேதான் தன் ஆயுள் முழுவதையும் கழிக்க வேண்டும்.
குற்றத்துக்குத் தண்டனை அவசியம்: தன்னிச்சையான கோபத்தில் நிகழக்கூடிய கொலை வழக்குக்கும் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை வழக்குக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பெண் என்பதாலேயே கிரீஷ்மாவுக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்கப்படக் கூடாது. திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் சிறைக் கைதிகள் நடத்தும் ஒரு பெட்ரோல் பங்க் உண்டு. அங்கு அவர்கள் செயல்படும் விதத்தை நான் பல நாள்கள் பார்த்திருக்கிறேன். அங்கு பணிபுரியும் கைதிகள் எல்லாருமே மிக மிக இனிமையானவர்கள் - பழகுவதற்கு மிக இயல்பானவர்கள். அவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்று நாம் ஒரு கணம்கூட ஊகித்துவிட முடியாது. என்றாலும், அவர்களுடைய குற்றம் என்ன, அந்தக் குற்றத்தை எதனால் அவர்கள் செய்தார்கள் என்று நாம் அறிந்துகொள்ள மாட்டோம்.
தான் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே மகள் என்பதாலும், தான் படித்துவந்த படிப்பை முன்னிறுத்தியும் நீதிமன்றத்தில் கிரீஷ்மா தரப்பில் சலுகைகளைக் கேட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருக்கு இந்த வழக்கில் மரண தண்டனை கொடுத்ததுகூட இந்த வழக்கு மிகப் பிரபலமாக ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் இருக்குமோ என்று எனக்கு ஒரு சிறு சந்தேகம் உண்டு.
எச்சரிக்கும் தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கின் தீர்ப்பை எடுத்துச் சென்றால் அங்கு அவர்கள் நிச்சயமாக மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துவிடுவார்கள். மரண தண்டனை இன்று இந்தியாவில் மரணித்து வருகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அது நியாயமும் ஆகும். என்றாலும் வேறு எந்தப் பெண்ணோ ஆணோ இந்தக் காதல் விளையாட்டில் திட்டமிட்டுக் கொலை செய்யும் அளவிற்குப் போய்விடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை தீர்ப்பாக மட்டுமே நாம் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கும்போது அவர்கள் தாங்கள் காதலித்தவர்களைக் கைவிட்டு விட்டு வசதியான மாப்பிள்ளைகளுக்குத் தலையாட்டிவிடுகிறார்கள். பெற்றோர் தங்கள் பெண்கள் காதலித்தால் அந்தக் காதலை விசாரியுங்கள். விவாதியுங்கள். இது அவர்கள் வாழ்க்கை. உங்களுடையது அல்ல. உங்களின் வீம்பு கிரீஷ்மாக்களை உருவாக்காமல் இருக்கட்டும்.
(உரையாடுவோம்)
தொடர்புக்கு: dhamayanthihfm@gmail.com