பெண்கள் ண்கள் இன்றைக்குப் பொறியியல் படிப்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால், கல்வி என்பதே பெண்ணுக்கு எட்டாக் கனியாக இருந்தபோது சாதனையின் சுடரை ஏந்திச் சென்றவர்கள் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்களான ஏ. லலிதா, பி.கே. த்ரேசியா, லீலாம்மா ஜார்ஜ் ஆகியோர்.
பிற்போக்குத்தனமான கற்பிதங்களால் முடங்கிவிடாமல் பொறியியல் துறையில் சாதனை படைத்த பெண்கள் பலர். அவர்களில் முன்னோடிகளாகத் திகழ்ந்த 29 பெண்கள் குறித்தும் அவர்கள் கடந்துவந்த பாதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு Roots and Wings என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சாந்தா மோகன். இவர், சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவி. கிண்டி பொறியியல் கல்லூரி 225-வது ஆண்டுவிழாவைக் காணும் இவ்வேளையில் சாந்தாவின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.
சாந்தா, அன்றைய தமிழக - கேரள எல்லையான தென்மலைப் பகுதியில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்துவருகிறார். கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கிறார்.
தேடலுக்குக் கிடைத்த வெற்றி
“தென்மலையில் இருந்த ரப்பர் எஸ்டேட்டில் என் அப்பா டாக்டரா இருந்தார். நான் மதுரையில் வளர்ந்தேன். அப்பா டாக்டரா இருந்தாலும் அவருக்கு இன்ஜினீயரிங் மேலதான் ஆசை. அவரோட ஆசையை நிறைவேற்ற 1966-ல் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்” என்கிறார் சாந்தா. அங்கு அவர் மின்பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார்.
தான் கல்லூரியில் சேர்ந்த காலத்தில்கூட, ‘பெண்கள் ஏன் பொறியியல் படிக்க வர்றீங்க?’, ‘ஒரு மாணவனுக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பெண்கள் அபகரிக்கிறார்கள்’ என்பன போன்ற பேச்சுகள் அடிபட்டதாகச் சொல்கிறார். அப்போது கல்லூரி வளாகத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் விடுதி இருந்தது. பெண்கள், பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.
“நான் 1971-ல் இன்ஜினீயரிங் முடித்தேன். என்னதான் ஆண் – பெண் பாகுபாடு அப்ப இருந்தாலும் எங்க பேராசிரியர்களும் உடன் படிச்ச மாணவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தாங்க” என்று சொல்லும் சாந்தாவின் வாழ்க்கை, படிப்புக்குப் பிறகு வேலை, திருமணம், குடும்பம் என்ற பாதையில் பயணித்தது. அவருடைய கணவருக்கு அமெரிக்காவில் முனைவர் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்க, குழந்தையுடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே கணினித் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்நிலையில் இந்திய வார இதழ் ஒன்றில் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்களில் ஒருவரான ஏ.லலிதாவைப் பற்றி சாந்தா படித்திருக்கிறார். லலிதா கடந்துவந்த பாதை அவரை வியக்கவைத்தது. லலிதாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைத்தார். “என் தேடலுக்குப் பலன் கிடைச்சது. லலிதாவோட மகள் சியாமளா, அமெரிக்காவில்தான் வசிக்கிறாங்க. உடனே அவருக்கு மெயில் அனுப்பி லலிதாம்மா பத்தின செய்திகளைச் சேகரித்தேன். லலிதாம்மா கடந்துவந்த பாதை கடினமானது.
15 வயதில் திருமணம். ரெண்டே வருஷத்துல கணவர் உயிரிழக்க, அவங்க வாழ்க்கையில் புயல் வீசியது. ஆனால், மனம் தளராம தன் குடும்பத்தினர் உதவியோட இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சாங்க. ஆர்கிடெக்ட் பிரிவில் பட்டம் வாங்கின முதல் பெண்களான லீலாம்மா ஜார்ஜ், த்ரேசியா ரெண்டு பேரும் லலிதம்மாவோட சேர்ந்து படிச்சவங்க. இவங்களைப் போலவே எங்க காலேஜ்ல படிச்சு சாதனைபடைத்த 29 பேரைப் பத்தி ஆய்வு செய்தேன்” என்கிறார் சாந்தா. அந்தப் பட்டியலில் சாந்தாவும் அடங்குவார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவரது ஆய்வுப் பணி தொடங்கியது. தான் பட்டியலிட்ட பல பெண் பொறியாளர்களைக் குறித்த அடிப்படைத் தகவல்களைக்கூட சாந்தாவால் ஆரம்பத்தில் சேகரிக்க முடியவில்லை. தன் ஆய்வுக்காகப் பல தரப்பினரிடமும் பேசுவது, பழைய ஆய்விதழ்களைப் படிப்பது, தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ் அப் எனப் பல வழிகளிலும் தகவல்களைச் சேகரித்தார். கிடைத்த தகவல்களை அவ்வப்போது தன் வலைப்பூவில் எழுதினார். தற்போது அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.
“அப்பவும் இப்பவும் குடும்ப அமைப்பில் பெருசா ஏதும் மாற்றமில்லை. இப்பகூட பெண்கள்தான் குழந்தைகளையும் வயதானவர்களையும் பார்த்துக்கறாங்க. ஆனா இப்படியான சூழ்நிலைக்காகப் பெண்கள் தங்களோட திறமைகளை முடக்கக் கூடாது. இதைவிடப் பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பல பெண்கள் சாதிச்சிருக்காங்க. அதை நினைச்சா எதுவும் தடையா தெரியாது” என்று சொல்லும் சாந்தாவின் வார்த்தைகளில் அனுபவத்தின் முதிர்ச்சி வெளிப்படுகிறது.
சாந்தா தனது புத்தகத்தில் எழுதியிருக்கும் பெண் பொறியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள்:
ஏ. லலிதா: மன உறுதி எனும் மந்திரம்
நடுத்தர தெலுங்கு குடும்பத்தில் 1919-ல் லலிதா பிறந்தார். இவருடைய தந்தை கிண்டி பொறியியல் கல்லூரியின் மின் பொறியியல் பேராசிரியரான பாபு சுப்பாராவ். சென்னை ராணி மேரி கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்ற லலிதா, உயர்கல்விக்காக மருத்துவத்தைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார். ஆனால், சிறு குழந்தையை வைத்துக்கொண்டு மருத்துவம் படிப்பது சாத்தியமல்ல என்பதால் பிறகு பொறியியலைத் தேர்வுசெய்தார். அந்தக் காலத்தில் பெண்கள், பொறியியல் படிக்க அனுமதிக்கப்படாததால் லலிதாவுடைய தந்தை சுப்பாராவ்தான் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் ஒப்புதல் பெற்று 1939-ல் தன் மகளைக் கல்லூரியில் சேர்த்தார்.
பேராசிரியரின் மகளாக இருந்தாலும் படிப்பில் சந்தேகம் என்றாலும் மற்ற ஆண் மாணவர்களுடன் கலந்தாலோசிக்க முடியாது. சாப்பிடுவதில் தொடங்கி புராஜெக்ட் செய்வதுவரை அனைத்தையும் லலிதா தனியாகத்தான் செய்திருக்கிறார். 1944-ல் கல்லூரிப் படிப்பை முடித்த லலிதா, சிம்லாவில் உள்ள மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் துணை மின் பொறியாளராகப் பணியாற்றினார். பிறகு அரசுத் துறைகளில் மின் பொறியாளாராக இருந்துள்ளார். பக்ரா நங்கல் அணை நீர்மின் திட்டப் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார். 1964-ல் அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் பொறியாளர்கள் - விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் இவரே. 60 வயதில் மூளை அழற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
லீலாம்மா ஜார்ஜ்: பெயர் சொல்லும் குடியிருப்புகள்
தந்தையின் ஆசைக்காக மருத்துவம் படிக்கத் தொடங்கியவர். பதப்படுத்தப்பட்ட உடல்களின் மீது ஏற்பட்ட அச்சம், மருத்துவப் படிப்பைக் கைவிடச் செய்தது. பிறகு 1939-ல் கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையில் சேர்ந்தார். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களில் லீலாம்மாவும் ஒருவர். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் பெண் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். திருவனந்தபுரம் ராணியின் உதவியால் நகரக் கட்டிட அமைப்பு குறித்துப் படிக்க இங்கிலாந்துக்குச் சென்றார். அவர் பணியில் இருந்தபோது பல காலனி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 55 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து அவர் உயிரிழந்தார்.
பி.கே. த்ரேசியா: பாலங்களின் நாயகி
இவர், பொதுப்பணித் துறையில் நாட்டின் முதல் பெண் பொறியாளர். தன் திறமையான கட்டுமானப் பணியால் கேரள மக்களின் பாராட்டைப் பெற்றவர். கோழிக்கோடு சாலை, கட்டிடப் பணிகளைத் திறமையாகக் கையாண்டவர். இவருடைய காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 35 பாலங்கள் கட்டப்பட்டன. கோழிக்கோட்டில் உள்ள குழந்தைகள் - பெண்கள் மருத்துவமனை இவர் தலைமையில்தான் கட்டப்பட்டது. திருமணம் செய்துகொள்ளாத த்ரேசியா, பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவர். 1979-ல் ஓய்வுபெற்ற த்ரேசியா, அடுத்த இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் வாழ்ந்தார். மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவர் உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago