இந்தியா, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த சாதனைப் பெண்கள் | முகங்கள் 2024

By செய்திப்பிரிவு

ஆணின் கைகள் ஓங்கி, பெண்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் ‘கடமை’யாக்கப்பட்டுவிட்ட பிறகு ஒவ்வொரு துறையிலும் பெண்கள் போராடித்தான் தடம் பதிக்கிறார்கள். தங்கள் வெற்றியின் மூலம் அடுத்த தலைமுறைக்குப் பாதை அமைத்துத் தருகிறார்கள். 2024இல் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்த சாதனைப் பெண்களில் சிலர் இவர்கள்:

தளராத தன்னம்பிக்கை: ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆனால், இறுதிப் போட்டியின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

மனதை வென்ற அம்மாக்கள்: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தையும் வென்றனர். நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, “என் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. தங்கப் பதக்கம் வென்றவரும் நம் மகன்தான்” என்று தெரிவித்தார். அர்ஷத் நதீமின் தாய் ரஸியா பர்வீன், “நீரஜ் சோப்ராவும் எனக்கு ஒரு மகன் மாதிரிதான்” எனச் சொன்னார். விளையாட்டுப் போட்டிகளில் எதிரணியில் விளையாடுகிறவர்கள் எதிரிகள் அல்லர் என்பதைத் தங்கள் பக்குவமான சொற்களால் வெளிப்படுத்திய அம்மாக்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.

வியக்கவைத்த திறமை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி சீதா அசோக் ஷெல்கே. 190 அடி நீள பாலத்தை 16 மணி நேரத்தில் தன் குழுவினருடன் இணைந்து கட்டியெழுப்பிய சீதாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

நம்பிக்கை நாயகி: ஷிசெல் பெலிகோ எனும் 71 வயது பிரெஞ்சுப் பெண், தன் கணவரால் பத்து வருடங்களாக உணவிலும் பானங்களிலும் போதை மருந்து கலக்கப்பட்டு சுயநினைவற்றவராக ஆக்கப்பட்டு, பல ஆண்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். தனக்கு நடந்த கொடுமையை நினைத்து மூலையில் ஒடுங்காமல் நீதிமன்றப் படியேறி தண்டனை பெற்றுத் தந்தார்.

திறமைக்கு மரியாதை: தமிழக அரசின் உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்ற ரோஹிணி, சுகன்யா ஆகிய இரண்டு பழங்குடி மாணவியரும் பொறியியல் கல்லூரிச் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ) தேர்ச்சி பெற்றனர். 60 ஆண்டு கால வரலாற்றில் திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் பயிலும் முதல் பழங்குடி மாணவர்கள் என்கிற பெருமையையும் பெற்றனர்.

சர்வதேச ‘கான்’ திரைப்பட விழாவில் இந்தியா சார்பாகப் பங்கேற்ற ஃபேஷன் இன்ஃபுளூயன்சர்களில் நான்சியும் ஒருவர். எளிய பின்புலத்தில் இருந்து வந்தாலும் அயராத உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் சிகரம் தொடலாம் என்பதைத் தன் வெற்றியின் மூலம் நான்சி நிரூபித்தார்.

‘கான்’ திரை விழாவில் ‘கிராண்ட் பிரி’ விருது பெற்றார் இந்திய இயக்குநர் பாயல் கபாடியா. இவர் இயக்கிய ‘All we Imagine as Light’, இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் படம்! இந்தப் பிரிவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்ற இந்தியப் படமும் இதுதான். ‘The Shameless’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கும் அனசுயா சென்குப்தா, இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகை.

சாதிக்க எதுவும் தடையல்ல: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஸ்ரீபதி, உரிமையியல் நீதிபதிக்கான தேர்வில் தேர்ச்சிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் சாதிப்பதற்கு இனம், பொருளாதாரச் சூழல் போன்ற எதுவும் தடையல்ல என அவர் நிரூபித்தார்.

நானும் பெண்தான்: அல்ஜீரிய மகளிர் குத்துச்சண்டையின் முகமாகத் திகழும் இமானே கெலிஃப், தன் பாலினம் சார்ந்து எழுந்த தொடர் விமர்சனங்களைப் புறக்கணித்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்