பக்தி இலக்கியம், இதிகாசம், வரலாறு அத்தனையிலும் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்திருப்பவர்கள் திருநங்கைகள். தொல்காப்பியத்திலேயே திருநங்கைகளைப் பற்றிய பதிவுகள் இருப்பதைப் பலரும் உறுதிசெய்திருக்கின்றனர்.
மன்னராட்சிக் காலத்தில் போரிடுபவர்களாகவும் தளபதிகளாகவும் இசைக் கலைஞர்களாகவும் நடனக் கலைஞர்களாகவும் புலவர்களாகவும் பல கலைகளை அரச குடும்பத்தின் வாரிசுகளுக்குக் கற்றுத்தரும் ஆசான்களாகவும் திருநங்கைகள் இருந்திருக்கின்றனர்.
திருநங்கைகள் சமூகம் தமிழ்ச் சூழலுக்குப் புதிதானது அல்ல. இது காலம்காலமாகத் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழலோடு இணைந்து வாழும் சமூகம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு சமூகத்தைப் பற்றிய ஆய்வுகளும் குறைவாகவே இருக்கின்றன. இந்திய அளவில் அந்த ஆய்வுகளை எடுத்துக்கொண்டால் தமிழில் முனைவர் பட்ட ஆய்வுகளே அதிகம். அவை தமிழகப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல புத்தகங்களாகவும் வெளிவந்திருக்கின்றன.
திருநங்கைச் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்லது பால் புதுமையரில் ஒருவர் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுவதைவிட, பொதுச் சமூகத்தில் இருப்பவர் இத்தைகய ஆய்வுகளில் ஈடுபடுவது அரிது. அந்த அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த எல்.ஜி.பி.டி. ஆதரவாளரான சக்தி நடராஜ், பர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் ‘டிரான்ஸ் - ஃபார்மேஷன்ஸ்: தமிழ்நாட்டுத் திருநங்கை உரிமை இயக்கங்களின் விடுதலை பெறுவதற்கான திட்டங்கள்’ (Trans-formations: Projects of Redemption in TamilNadu’s Transgender Rights Movement ) எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். ஆண்டுதோறும் சிறந்த ஆய்வு மாணவருக்கு வழங்கப்படும் ‘டி வோஸ் பிரைஸ்’ எனும் விருதையும் சக்தி பெற்றிருக்கிறார்.
தமிழகத்தின் பன்மைத் தன்மை
தொன்மங்களிலும் வரலாற்றின் பக்கங்களிலும் திருநங்கைகள் சமூகம் சார்ந்த பல பதிவுகள் காணக் கிடைக்கின்றன. “தமிழ்நாட்டில் இருக்கும் திருநங்கைகளின் இயக்கங்கள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே சிறப்பாக இருக்க என்ன காரணம் இருக்க முடியும் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்களின் பலம் பூரணமாக விளிம்புநிலை மக்களான திருநங்கைகளுக்குக் கிடைத்திருக்கிறது.
அதோடு அடிப்படைவாத இயக்கங்கள், பல்வேறுவிதமான கொள்கைகளை உடைய அரசியல் கட்சிகள் போன்றவையும் திருநங்கைகளுக்கான ஆதரவுப் போக்கைக் கையில் எடுத்திருக்கின்றன. ஆன்மிகம் ஒருபக்கம் தழைத்துக்கொண்டிருந்தாலும் பெரியார் சிந்தனையும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலவும் இத்தகைய பன்மைத்தன்மை திருநங்கைகளின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் துணைநிற்பதாக நினைக்கிறேன்” என்கிறார் சக்தி.
முன்னோடித் தமிழகம்
எச்.ஐ.வி. பாதிப்புக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பது, எய்ட்ஸ் விழிப்புணர்வு, தன்பால் உறவாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது எனப் பல விஷயங்களுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் செயற்பாட்டாளர்களால், தமிழகம் ஏற்கெனவே உலக அளவில் பிரபலமாகி இருக்கிறது. திருநங்கை, ஹிஜ்ரா, அரவானி உருவங்கள் வரலாற்று ஆதாரங்களில் இருக்கின்றன. அவை திருநங்கைகள் பற்றி மட்டும் பேசவில்லை, ஆரோக்கியம் சார்ந்த பல விஷயங்களைப் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.
சாதி அமைப்பை அசைக்கும் சமூகம்
பொதுச் சமூகத்தில் காதல், திருமணம் போன்ற உறவுகளின்போது வெகுண்டு எழும் சாதி உணர்வைத் திருநங்கைகள் சமூகம் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையால் அசைத்துப்பார்க்கிறது. பொதுச் சமூகத்தில் வழக்கத்திலிருக்கும் குழந்தைகள் வளர்ப்பைப் போன்றே, வீட்டிலிருந்து துரத்தப்பட்டுத் திருநங்கைகள் சமூகத்தில் அடைக்கலமாகும் ‘சேலா’க்களை அவர்கள் எப்படிப் பராமரிக்கிறார்கள்?
அவர்கள் சமூகத்தில் இருக்கும் தத்தெடுக்கும் முறை, ஜமாத் முறைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் சாதிப் பிரிவுகளைப் பொதுச் சமூகத்திலிருக்கும் குடும்பங்களில் எப்படி உடைப்பது என்பது போன்ற பொதுவான கேள்விகளை விவாதத்துக்கு உட்படுத்துவதற்குத் திருநங்கைகள் பற்றிய குடும்ப அமைப்புகள் பெரிதும் உதவுவதைத் தன் ஆய்வில் குறிப்பிட்டிருப்பதாக சக்தி கூறுகிறார்.
ஊடகங்களின் பார்வை
பத்திரிகையாளர்கள், திருநங்கைப் படைப்பாளிகள் இப்படிப் பலரின் படைப்புகளும் ஆய்வுக் கட்டுரைகளும் திருநங்கை சார்பு அரசியலைச் சமூகத்தில் எப்படி வென்று எடுத்திருக்கின்றன என்பதையும் தன் ஆய்வில் குறிப்பிட்டிருக்கும் சக்தி, இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியைத் திருநங்கை வாழ்க்கை முறை எப்படி எதிர்நோக்குகிறது என்பதையும் ஆராய்ந்திருக்கிறார்.
திருநங்கை சமூகத்தில் ஹிஜ்ரா, திருநங்கை, கோத்தி, பொட்டை போன்ற சொற்கள் அடிக்கடி புழங்குபவையாக இருக்கும். மானுடவியலின் அடிப்படையில் இந்தச் சொற்களுக்குப் பின் உள்ள அர்த்தங்களை சக்தி ஆராய்ந்திருக்கிறார்.
திருநங்கைகளுக்கு இரண்டு குடும்பம்
“சீனியர் குரு தங்கள் சேலாக்களை எப்படி வழிநடத்துகிறார்கள், சமூகப் பணிகள், கோத்தி, பந்தி எப்படி வேறுபடுகிறார்கள், கோத்திக்கும் ஆண்மைக்கும் என்ன தொடர்பு இப்படி நிறைய விஷயங்கள் இந்த ஆய்வில் இருக்கின்றன. திருநங்கைகள் அவர்களுக்குள் உருவாக்கிக்கொள்ளும் குடும்பத்தைத் தவிர, அவர்களின் சொந்தக் குடும்பங்களை எப்படி வழிநடத்துகிறார்கள் என்பதைப் பற்றியும் ஆராய்ந்துள்ளேன்” என்று சொல்லும் சக்தி, இதற்காக இந்தியா முழுவதும் பல பகுதிகளில் இருக்கும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து பணிபுரிந்திருக்கிறார். தமிழகத்தில் சங்கமா, சகோதரன், தோழி போன்ற பல அமைப்புகளுடன் இணைந்து
எல்.ஜி.பி.டி. பெருமிதப் பேரணி நடவடிக்கைகளில் தன்னார்வலராக ஈடுபட்டிருக்கிறார்.
“தமிழ்நாட்டில் நடக்கும் பல விவாதங்களில் என் ஆராய்ச்சிகளின் மூலமாகப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும் என நம்புகிறேன். பாலியல் தொழிலை எப்படிச் சமூகம் பார்க்கிறது, அதை ஒரு வேலையாகக் கருதலாமா எனப் பல்வேறு கருத்துகளை என் ஆய்வில் தொகுத்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளில் என் ஆய்வு முடிவுகளைத் திருநங்கைகள் சமூகம் பயன்பெறும் வகையில் தமிழில் வெளியிடுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன் என்கிறார்” சக்தி.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago