சிலையால் உயர்ந்த வாழ்க்கை | வாழ்ந்து காட்டுவோம்!

By செய்திப்பிரிவு

என் பெயர் ராஜேஸ்வரி, என் கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன். நாங்கள் சிக்கல் கிராமத்தில் வசித்துவருகிறோம். நான் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் கணவர் தனியார் துறையில் பணிபுரிந்துவருகிறார். அவர் ஈட்டும் வருமானம் எங்கள் குடும்பத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை.

வீட்டில் இருந்துகொண்டே ஏதேனும் தொழில் செய்யவேண்டும் என நினைத்தேன். நாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் பிரபலமான முருகன் கோயில் உள்ளது. அனைத்து ஊர் மக்களும் வந்து செல்லும் தலமாக அது இருப்பதால் அந்தக் கோயிலை மையமாகக் கொண்டு தொழில் தொடங்க முயன்றேன்.

அப்போது எனக்கு என் கணவர் மிகவும் பக்கபலமாக இருந்தார். அவரின் ஆலோசனைப்படி சிலைகள் தயாரிப்பது குறித்த பயிற்சியை மேற்கொண்டேன். சிலைகளை உருவாக்குவதில் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், நாம் உருவாக்கும் சிலைகள் மக்களுக்குப் பிடிக்குமா எனத் தயக்கமாக இருந்தது.

அதேநேரம் விற்பனை சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்தேன். எல்லாரும் செய்வதுபோல் சிலைகளை உருவாக்காமல் தனித்துவமாக உருவாக்கத் தொடங்கினேன். குறிப்பாக, மாவட்டத்தில் இருக்கக்கூடிய தெய்வச் சிலைகளை உருவாக்கினேன். கோரக்கர் சித்தரின் சிலை அனைவரது பாராட்டையும் பெற்றது.

சிலைகளின் மாதிரிகளை வேறோர் இடத்தில் பெற்று பிறகு அதை வைத்துச்சிலைகளை உருவாக்குகிறேன். இதனால், சிலைகளை உருவாக்க நீண்ட நேரம் ஆகிறது. இதனால் சிலை மாதிரிகளை உருவாக்கும் கருவி இருந்தால் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முடியும் என்கிற நிலையில் தொழில் கடன் பெற வங்கிகளை நாடினேன்.

ஆரம்பத்தில் என் தொழிலுக்குக் கடன் தர வங்கிகள் முன்வரவில்லை. அப்போது ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் பற்றி அறிந்து அவர்களது உதவியை நாடியபோது வங்கி மூலம் கடன் பெற்றுத்தந்தனர். அதோடு என் சிலைகளின் விற்பனைக்கும் பெரிதும் உதவினர். ‘வாழ்ந்துகாட்டுவோம்’ திட்டத்தின் ஆதரவுடன் ‘இணை மானியத் திட்டம்’ மூலம் ரூ. 4,30,000 கிடைத்தது. இந்தத் தொகை மோல்டிங் இயந்திரங்கள், பாகங்கள் வாங்க உதவியது.

இன்று மாதம் ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை லாபம் கிடைக்கிறது. இருவருக்கு வேலைவாய்ப்பைத் தந்திருக்கிறேன். ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மூலம் செயல்பட்டுவந்த சமூகத் திறன் பள்ளிகள் மூலம் அருகில் உள்ள கிராமப் பெண்களுக்கு பயிற்சி அளித்தேன். எனது தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவிய ‘வாழ்ந்து கட்டுவோம்’ திட்டத்திற்கு நன்றி.

நாட்டுப் பசுஞ்சாணத்தில் நறுமணம் கமழும் விபூதி! - திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரம் பித்தளைப்பட்டி கிராமத்தில் நாங்கள் தூய்மையான விபூதியைத் தயாரித்து விற்கிறோம். மகளிர் சுயஉதவிக் குழுவான நாங்கள் 10 பேர் இணைந்து ஆளுக்கு ரூ.1000 சேமித்து ரூ.10,000 தொழில் மூலதனமாக வைத்தோம். அதன் பிறகு எங்களுக்கு TNSLRM திட்டத்தின் மூலம் தொழில் நிதி ரூ.50,000 வழங்கப்பட்டது.

விபூதி தயாரிப்பு: விபூதியைத் தயாரிக்க நாட்டுப் பசுஞ்சாணம், சேறு, நெல் தவிடு, கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த மூலப்பொருள்களை உள்ளூர்ச் சந்தையில் வாங்கி, விபூதியைத் தயாரித்து உள்ளூர்க் கோயில்களுக்கு விற்பனை செய்கிறோம்.

திட்ட உதவியும் மேம்பாடும்: இந்தத் தொழிலை நாங்கள் நடத்துவதைக் கண்டு TNRTP திட்டம் எங்களைத் தொழிற்குழுவாக மேம்படுத்தி, எங்கள் தொழிற்குழுவுக்கு ரூ.75,000 தொடக்க நிதியை வழங்கியது. பொதுவாக விபூதியைத் தயாரிக்க முன்பெல்லாம் பசுஞ்சாணத்தை ஐந்து நாள்கள் காயவைக்க வேண்டும். தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட சோலார் டிரையரைப் பயன்படுத்துவதால் இரண்டு நாள்களிலேயே சாணத்தை உலர்த்தி எடுக்கிறோம். விபூதியின் நறுமணத்திற்கு வெட்டிவேரைப் பயன்படுத்துகிறோம்.

விபூதி தயாரிப்பின்போது எங்களின் பாதுகாப்புக்கு ‘PP கிட்’டைப் பயன்படுத்துகிறோம். ஜிப்-லாக் பாக்கெட்டில் விபூதியை அடைத்துத் தருகிறோம். நாங்கள் தற்போது 125 கிலோ விபூதியைத் தயாரித்துள்ளோம். இதைப் பெரிய கோயில்களான பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பாபநாசம், சென்னை வடபழநி முருகன் கோயில், விராலிப்பட்டி சாய்பாபா கோயில் போன்ற கோயில்களுக்குக் கொடுக்கிறோம். ஒரு கிலோ விபூதியை ரூ.400க்கு விற்கிறோம். இதன் வழியாக மாதம் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை வருவாய் ஈட்டுகிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்