த
மிழ்ப் புதுக்கவிதை வரலாற்றை 90-களுக்கு முன், பின் என இருவிதமாகப் பிரித்துப்பார்க்கலாம். 90-களுக்கு முன்புவரை கவிதை மொழி மிருதுவானதாக இருந்தது. பாடுபொருள்களிலும் தீவிரத் தன்மை இல்லை. ஆனால் 90-களுக்குப் பிறகு கவிதையின் மொழி தீவிரமடைந்தது. தலித்தியம், பெண்ணியம் போன்ற சிந்தனைகளும் இந்தக் காலத்தில்தான் கூர்மையடைந்தன. கவிதைக்கான பாடுபொருள்களும் ஒரு லட்சியத்தை நோக்கி மூர்க்க மடைந்தன. இந்தப் புள்ளியிலிருந்து புறப்பட்ட கவிஞர்களுள் ஒருவர் மாலதி மைத்ரி.
மாலதியின் கவிதைகள் பெண்ணியம் என்பதைத் தாண்டி தீர்க்கமான அரசியலை முன்வைப்பவை.
சுதந்திரமான கவிதைகள்
மாலதிக்கு முன்புவரையிலான பெண்களைப் பொறுத்தவரை கவிதையை டேபிள் ரோஜா செடியைப் போலப் பாவித்துவந்தனர். குழந்தைகள், சமையல்கட்டு, கணவன் என இந்த எல்லைக்குள்தான் கவிதைகள் தொழிற்பட்டன. இதைத் தாண்டிக் கவிதையைக் கொஞ்சம் சுதந்திரமாகக் கையை, காலை அசைத்து நடக்கவைத்துப் பார்த்த கவிஞர்களுள் மாலதி முக்கியமானவர். இவரது கவிதைகள் பெண்ணின் உடலை, அத்துடனான மனத்தைத் தூக்கிக்கொண்டு அலைபவையாக உள்ளன. பெண்ணின் உடல் குழந்தைப் பருவத்திலிருந்து அடையும் மாற்றத்தை விந்தையாக நோக்கும் இவரது கவிதைகள், அதனால் பெண்கள் அடையும் மனச் சிதைவையும் சொல்கின்றன.
கவிதையில் ஓர் அனுபவத்தை மாலதி நேரடியாகச் சொல்லாமல் பொதுவான ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு அதைச் சித்தரிக்கிறார். தமிழ்ச் செவ்வியல் தன்மையுடன் ஒப்பிடக்கூடிய இந்தத் தன்மை, வாசகரை வசீகரிக்கக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக ‘மணலென நொறுங்கும் மனம் புழுதியாய்ச் சுழலும்’ என்ற வரியில் மனத்தின் அவஸ்தைக்கு மணல் துகள்களை உவமைப்படுத்துகிறார். தவிட்டு மழை, பொன் தூசு என நேரடியாகவும் சில கவிதைகளில் மனத்தை உருவகப்படுத்துகிறார். மாலதியின் கவிதைகள் மொழிரீதியில் திடகாத்திரமானவை. ஒவ்வொரு வரிக்குள்ளும் ஒரு பெரும் விநோதத்தையும் கவிதானுபவத்தையும் கட்டிவைத்திருக்கிறார்.
புதியதோர் உலகு
வீடுகளாலும் அலுவலகங்களாலும் தொழிற்கூடங்களாலும் நிரம்பிய இந்த நிலத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நிலத்தைதான் மாலதி தன் கவிதைக்குள் சித்திரிக்க விரும்புகிறார். அந்த நிலம் கம்பீரமான மலைகளாலும் மரங்களாலும் ஆறுகளாலும் நிரம்பியதாக இருக்கிறது. அந்த நிலத்தில் விலங்குகள் ஓடுவதுபோல், காலி கோக் கோப்பைகளும் ஒன்றையொன்று துரத்திச் செல்கின்றன.
மாலதியின் கவிதைவெளிக்குள் குறுக்கும் நெடுக்குமாகப் பலவிதமான விலங்குகள் பாய்ந்துசெல்வது அவரது விசேஷமான ஓர் அம்சம். நழுவிச் செல்லும் கனவுகளைப் போல் இந்த விலங்குகள் கவிதைச் சொற்களுக்குள் மறைந்து, வெளிப்படுகின்றன. இந்த விலங்குகளைக்கொண்டு மாலதி, ஒரு பெண்ணுடலை உருவாக்குகிறார். பெண்ணுடலின் பாகங்கள்போல் ஒரு பூமியையும். ஒரு ஒற்றைக் காண்டாமிருகத்தைக் கடவுளைப் பார்த்துச் சிரிக்கவைக்கிறார்.
பெண்ணின் மன அவஸ்தை
‘விஸ்வரூபம்’ என்னும் கவிதையில் பெண்ணின் உடல் பாகங்களை விலங்குகளாகவும் பறவைகளாகவும் ஆக்குகிறார். இது ஒரு கனவைப் போல் கவிதைக்குள் நடக்கிறது. சில உடல் பாகங்கள் தொலைந்த ஆட்டுக்குட்டியைப் போல் திரும்பிவருகின்றன. இப்படித் திரும்பி வரும் உடல் பாகங்களில் வேற்று வாசனை, அந்த உடலுக்குரிய பெண்ணின் அடையாளத்தை மாற்றிவிடுவதாகச் சொல்கிறார். யோனி வண்ணத்துப்பூச்சியாக மாறி மலைகளின் மேல் அலைவதாக இந்தக் கவிதை முடிகிறது. கெளதம முனியின் சாபத்தால் இந்திரனின் மேனியெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் பறந்த அந்தக் காவியக் காட்சியுடன் ஒப்பிடக்கூடிய உவமையை மாலதி இதில் உருவாக்கிவிடுகிறார்.
‘நிறம் மாறும் திரைச்சீலைகள்’ கவிதையில் தன் கைகளை வெட்டித் தனக்கு நிழல் தரும் மரங்களாக்கிக்கொள்கிறார். மார்புகள் பிரம்மாண்டமான மலைகளாகின்றன. அவளுடன் உரையாட நாக்கை அறுத்து வானில் எறிகிறார். அது ஒரு சிறு பறவையாகிறது. குடும்ப அமைப்பில் தனித்துவிடப்படும் பெண்ணின் மன அவஸ்தையை இந்தக் கடைசிவரி சொல்லிவிடுகிறது.
உடலின் பரிமாணம்
மாலதியின் தொடக்கக் காலக் கவிதையான ‘தெய்வ உடல்’ கவிதையில் ஒரு சிறுமியின் உடலெங்கும் விலங்குகள் ஓடுகின்றன. பூப்பெய்திய சிறுமியைத் தனியறையில் உறங்கவிடுகிறார்கள். இந்த உடல் மாற்றத்தை, ‘தலைகீழ் விருட்சம்’ என்கிறது கவிதையின் தொடக்கம். அவளது காலை எலி கடித்துவிடுகிறது. கரப்பான்கள் அறையில் பறக்கின்றன. முதுகில் ஓடும் புலியை அவளால் பார்க்க முடியவில்லை என மாலதி சொல்கிறார். அவளுடைய வீட்டார்கள் அது பழகிவிடும் என்கிறார்கள். ‘இருளில் கரைந்துகொண்டிருக்கிறது பஞ்சபூத உடல்’ எனக் கவிதையை முடிக்கிறார்.
பெண் உடல் ஒரு பாரமாகவும் விந்தையாகவும் மாலதியின் கவிதைக்குள் மாறி மாறித் தொழிற்படுகிறது. மாலதியின் ஒரு கவிதையில் சிறுமி ஒருத்தி தனது முப்பாட்டி, கோழி முட்டையிடுவதைப் போல் இந்தப் பூமியைப் பெற்றெடுத்ததாகக் கற்பனைசெய்கிறாள். இன்னொரு கவிதை பெண் உடலை வீடு என்கிறது.
இயற்கையோடு நடக்கும் உரையாடல்
பெண்ணுலகம் என்பதற்குள், சமூகச் சுழலின் மாற்றங்களையும் இயற்கையின் பக்கம் நின்று மாலதியின் கவிதைகள் பேசுகின்றன. இந்த இரு வகையான கவிதைகளிலும் முழக்கங்களை மாலதி எழுப்பவில்லை. கூச்சல் போடவில்லை. திடமான கவிதை வடிவில் அவற்றை உருவாக்கிக் காட்டுகிறார். மேலும், இந்தப் பாதகங்களைச் சொல்ல மெச்சத்தகுந்த எள்ளல் மொழியைத்தான் அவர் தேர்ந்தெடுக்கிறார். சில கவிதைகளில் குழந்தைக் கதைகளைப் போல் விநோதங்கள் தலைகீழாக வவ்வால்களாகப் பறக்கின்றன. சில கவிதைகள் இயற்கையுடனான உரையாடலாக இருக்கின்றன.
பெண்ணுடல் இயற்கையின் ஓர் அம்சம். ஆனால், அந்த உடலைக் காரணமாக்கி அவள் ஒடுக்கப்படுகிறாள், வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். அந்த உடலையே களமாக்கும் மாலதி, அதன் வழி ஒரு எரிமலையின் வெடிப்பையும் கானகக் கொண்டாட்டத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கிக் காட்டுகிறார். இந்த இரு பண்புகளைக் கொண்டு அவரது மொத்தக் கவிதையையும் வரையறுக்கலாம்.
malathimayithri மாலதி மைத்ரி rightயானைக் கதை
முன்பு ஒருநாள் தன் அம்மா சொன்ன
கதைக்குள் இருந்த யானை ஒன்றை
என் அம்மா எனக்குப் பரிசாகக் கொடுத்தாள்
வெகுகாலம் கழித்து வெயில் தாளாமல்
யானையுடன் கடலுக்குச் சென்றேன்
மலைமலையாய் அலையெழுப்பி
நீருக்குள் புதைத்துப் புரட்டி
கிண்டிக் கிளறி வெளியே என்னைத்
தூக்கி எறிந்தது கடல்
கரைந்து மீந்த பாதித் தும்பிக்கையுடன்
கடலும் வானமும் ஒன்றாகக் கலந்து பிளிறியது
சோகத்துடன் திரும்பினேன்
ஊரே கூடி என்னை வேடிக்கைப் பொருளெனப் பார்க்க
குழம்பிப் பின் திரும்பினேன்...
கடலில் கரைந்த ஒற்றை யானைக்கு
ஓராயிரம் தும்பிக்கைகளென
என் மகள் ஊருக்கெல்லாம்
ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago