முகங்கள்: அக்னிப் பெண்!

By எம்.சூரியா

 

டவர் மட்டும் எனப் பலரும் நினைத்திருந்த தீயணைப்புத் துறையில் கால்பதித்த முதல் பெண் ஹர்ஷினி கனேகர். நாக்பூரைச் சேர்ந்த இவர், இளங்கலை படித்தபோது தேசிய மாணவர் படையில் (NCC) சேர்ந்தார். அதன் பின் ஹர்ஷினியின் வாழ்க்கையில் புதிய உத்வேகம் பிறந்தது. என்.சி.சி. சீருடை அணிந்தவர், ஏதாவது ஒரு சீருடைப் பணியில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று, இந்தியாவின் முதல் பெண் தீயணைப்புத்துறை அதிகாரி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

தோழி காட்டிய வழி

இளங்கலை முடித்தபின் எம்.பி.ஏ-வில் சேர்ந்தார். ஆனால், சீருடைப் பணி மீதான காதலும் அதில் சாதிக்க வேண்டும் என்ற கனவும் ஹர்ஷினியை உள்ளிருந்து இயக்கின. நண்பர்களுடன் பேசும்போதுகூடத் தன் கனவு குறித்தே ஹர்ஷினி ஆர்வத்துடன் பேசுவார். நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்புத் துறைக் கல்லூரியில் வழங்கப்படும் மூன்றரை ஆண்டு பயிற்சிப் படிப்பு பற்றித் தோழி மூலமாகத் தெரிந்துகொண்டார். மறுநாளே, தோழியுடன் நாக்பூருக்குச் சென்று நுழைவுத் தேர்வையும் எழுதினார்.

வாரங்கள் உருண்டோடின. எம்.பி.ஏ. படிப்பும் தொடர்ந்தது. திடீரென ஒரு நாள் நாக்பூர் தீயணைப்புத் துறைக் கல்லூரியிலிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. நாக்பூர் சென்ற ஹர்ஷினிக்கு, வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. கல்லூரிக்குள் சென்றபோதுதான் இதுவரை அந்தக் கல்லூரியில் பெண்கள் யாரும் பயின்றதில்லை என ஹர்ஷினிக்குத் தெரிந்தது. அது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவரது லட்சியத்துக்கு வலுச்சேர்த்தது.

கடினத்தை வென்ற மன உறுதி

ஆண்களுக்கு மட்டுமே விடுதி இருந்ததாலும் மூன்றரை ஆண்டுகளும் கல்லூரியிலேயே தங்கிப் பயில வேண்டும் என்பதாலும் ஹர்ஷினியைச் சேர்த்துக்கொள்வதில் கல்லூரி நிர்வாகத்துக்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு ஹர்ஷினியைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளச் சிறப்பு அனுமதி பெற்றது.

கல்லூரியில் பெண்கள் விடுதி இல்லாததால், வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்து படிக்க சிறப்பு அனுமதியும் ஹர்ஷினிக்கு வழங்கப்பட்டது. தினமும் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொள்வது ஹர்ஷினிக்குக் கடினமாகவே இருந்தது. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல, அதிகாலையிலேயே வீட்டிலிருந்து ஹர்ஷினி புறப்பட்டுச் செல்வார். மேலும், பயிற்சியின்போது பெண் என்பதால் எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. அதை ஹர்ஷினி விரும்பவும் இல்லை.

“நான்தான் அந்தக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண். எனவே, பயிற்சி வகுப்புகளுக்குத் தாமதமாகச் செல்லக் கூடாது என்பதில் உறுதியோடு இருந்தேன். என் செயல்பாடு மூலம் அடுத்தடுத்து சேரப்போகும் மாணவிகளுக்கு அளவுகோலை நிர்ணயிக்க விரும்பினேன். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். ஆனால், மாணவர்களைவிட நான் பின்தங்கிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். பயிற்சியின்போது ஒருபோதும் நான் பின்தங்கியது இல்லை” என்கிறார் ஹர்ஷினி.

நெருப்போடு விளையாட்டு

கல்லூரிப் படிப்பின் போதே, கல்லூரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நடைபெறும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் பணிக்கு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். 2001-ல் சிலிண்டர் வெடித்ததால் ஷீரடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி ஹர்ஷினிக்குக் கிடைத்தது. சிறிய அளவிலான தீ விபத்து என்பதால், அதைப் பெரிய சிக்கலோ சவாலோ இல்லாமல் கட்டுப்படுத்திவிட்டார் அவர்.

2002-ல் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்து இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனை என்ற வரலாற்றை ஹர்ஷினி படைத்தார். 2005-ல் டெல்லியில் பணியாற்றியபோது, ஒரே நாளில் ஐந்து தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நெருக்கடியான சந்தர்ப்பம் ஹர்ஷினிக்கு அமைந்தது. அதில் சாஸ்திரி நகரில் உள்ள காலணி குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணமாக ஒட்டுமொத்தக் கட்டிடமும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. அதன் எதிரே இருந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் மீதிருந்து தண்ணீரை அடித்தும் தீ கட்டுப்படவில்லை. இறுதியாக ஹர்ஷினியும் அவருடைய குழுவினரும் உயிரைப் பணயம் வைத்து, தீ விபத்து நேர்ந்த கட்டிடத்தின் மேற்பகுதிக்குச் சென்று தண்ணீரை அடித்துத் தீயை அணைத்தனர். நள்ளிரவு தொடங்கிய இந்த ஆபரேஷன் அதிகாலையில்தான் முடிவடைந்தது.

திறமையே முக்கியம்

இந்திய விமானப் படையின் முதல் ஹெலிகாப்டர் பைலட் ஷிவானி குல்கர்னிதான் ஹர்ஷினியின் ரோல் மாடல். என்.சி.சி-யில் இணைந்தபோது அவரைப் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தால், அன்று முதல் ஷிவானியைப் போல் சீருடைப் பணியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

16 ஆண்டு தீயணைப்புத் துறைப் பணியில் பல்வேறு சிக்கலான, சவால் மிகுந்த தீ விபத்துகளை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறார். இன்று மும்பை தீயணைப்புத் துறைப் பயிற்சி அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கிறார். திறமையான செயல்பாடுதான் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக்கும் என்பது ஹர்ஷினியின் நம்பிக்கை.

பைக் ஓட்டுவதிலும் ஹர்ஷினிக்கு ஆர்வம் உண்டு. இமயமலைவரை நீண்ட தொலைவுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ‘பைக்குக்கு அதை இயக்குவது ஆணா, பெண்ணா எனத் தெரியாது. யார் இயக்கினாலும் அந்த பைக் அருமையாக ஓடும். அந்த பைக்கைப் போலத்தான் எந்தவொரு வேலையும்” என்று தெளிவான குரலில் ஹர்ஷினி பேசுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்