ஆடும் களம் 11: டென்னிஸின் முதல் பெண் முகம்

By டி. கார்த்திக்

களிர் டென்னிஸின் இந்திய முகமாக சானியா மிர்ஸா இன்று கோலோச்சிக்கொண்டிருக்கிறார். ஆனால், சானியா மிர்ஸா டென்னிஸில் அறிமுகமாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய மகளிர் டென்னிஸின் அசைக்க முடியாத வீராங்கனையாகத் திகழ்ந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த நிருபமா சஞ்சீவ் (முன்னர், நிருபமா வைத்தியநாதன்). கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சுற்றுப் போட்டி ஒன்றில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற முத்திரையைப் பதித்தவர் இவர்!

ஆறு வயதினிலே

இந்திய டென்னிஸில் ஆண்கள் மட்டுமே ஜொலித்த காலகட்டம் அது. விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி எனப் பெயர் சொல்லும் வீரர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். 1990-கள் வரை இதுதான் நிலை. இந்தியா டென்னிஸில் வீராங்கனைகள் யாருமே இல்லை என்பது நீண்ட காலக் குறையாக இருந்தது. அந்தக் குறையைத் தனது வரவால் தீர்த்துவைத்தார் நிருபமா. சுமார் 10 ஆண்டுகள் இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக ஆதிக்கம் செலுத்தியவர் இவர்.

தமிழகத்தில் கோவையில் பிறந்த நிருபமாவுக்கு டென்னிஸ் மீது கொள்ளைப் பிரியம். கையில் ராக்கெட்டுடன் டென்னிஸ் கோர்ட்டுக்குச் சென்றபோது அவருக்கு ஆறு வயது! தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியில் விளையாடியிருக்கிற அவருடைய தந்தை வைத்தியநாதன்தான் நிருபமாவுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தவர். சிறு வயதிலேயே டென்னிஸ் விளையாட்டின் நுணுக்கங்கள் அவருக்கு அத்துப்படி ஆயின. முதன்முறையாக 12 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் நிருபமா இடம்பிடித்தார். முதல் போட்டியிலேயே அரையிறுதிவரை முன்னேறினார். 14 வயதுக்கு உட்பட்டோர் அணியில்தான் முதல் தேசிய பட்டத்தை அவர் வென்றார். அப்போது அவருக்கு 13 வயது.

தந்தை காட்டிய வழி

1992-ல் டென்னிஸ் உலக இளையோர் கோப்பைக்கான போட்டி நடந்தது. அதில் இந்தியா சார்பாகப் பங்கேற்க நிருபமாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். பொதுத் தேர்வு நேரம் என்பதால் எதற்கு முக்கியத்துவம் தருவது எனப் புரியாமல் நிருபமா தவித்தார். ஆனால், அவருடைய தந்தையோ, ‘முதலில் விளையாடு; பிறகு படித்துக்கொள்ளலாம்’ என வழிகாட்டினார். சிறு வயதிலிருந்தே டென்னிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் அவரது வளர்ச்சிக்கு வித்திட்டது.

ஜூனியர் பிரிவில் மட்டும் 35 ஒற்றையர் ஆட்டங்களிலும் 26 இரட்டையர் ஆட்டங்களிலும் இந்தியாவுக்காக நிருபமா விளையாடியிருக்கிறார். இவற்றில் தாய்லாந்தில் 1993-ல் நடந்த ஐ.டி.எஃப். (இண்டர்நேஷனல் டென்னிஸ் ஃபெடரேஷன்) பெண்கள் ஒற்றையர் பட்டத்தை நிருபமா வென்றிருக்கிறார். அதே ஆண்டில் இந்தியா, வங்கதேசம், இலங்கையில் நடந்த டென்னிஸ் தொடர்களிலும் நிருபமா ஜொலித்தார்.

மூன்று தங்கம்

1994 அவருக்கு மறக்க முடியாத ஆண்டு. வெளிநாட்டில் பயிற்சி மேற்கொண்டு திரும்பிய நிருபமா, தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார். அந்த ஆண்டு ஐரோப்பா டூர் தொடரில் ஆசிய அணியின் சார்பாக அவர் விளையாடினார். 1995-ல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டி, அவரது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது. டென்னிஸ் பிரிவில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற நிருபமா ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளிலுமே சிறப்பாக விளையாடி மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். அதன் மூலம் டென்னிஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் முன்னேறினார். நிருபமாவின் டென்னிஸ் வாழ்க்கையில் இது முக்கிய மைல்கல்.

நாடே கொண்டாடிய சாதனை

டென்னிஸில் கொடிகட்டிப் பறக்கும் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் பெற வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஏதாவது ஒரு போட்டியில் வென்றாலே அது மிகப் பெரிய சாதனைதான். 1998-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நிருபமாவும் பங்கேற்றார். ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இத்தாலியின் குளோரியா பிஷ்ஷிசினியை நிருபமா தோற்கடித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியைப் பொறுத்தவரை இது சாதாரண வெற்றிதான். ஆனால், இந்தியாவில் அந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் சுற்றுப் போட்டி ஒன்றில் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பு நிருபமாவுக்குக் கிடைத்தது.

அதே ஆண்டு இன்னொரு முக்கியமான வெற்றியையும் நிருபமா வசப்படுத்தினார். அப்போது பாங்காங்கில் ஆசியப் போட்டிகள் நடைபெற்றன. அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் கைகோத்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். தொடர்ச்சியாக டென்னிஸில் வளர்ந்துவந்த நிருபமா, 2002-ல் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஒதுங்கினார்.

தொடரும் பயணம்

ஓய்வு பெறும்வரை, இந்திய மகளிர் டென்னிஸில் நம்பர் ஒன் வீராங்கனையாகவே நிருபமா நீடித்தார். டென்னிஸிலிருந்து அவர் முழுமையாக வெளியேறிவிட்டார் என்ற நினைத்தவேளையில் 2010-ல் டெல்லி காமன்வெல்த் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். அதன் பிறகு சீனாவில் குவாங்ஸு நகரில் நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் விளையாடினார். தாயான பிறகு காமன்வெல்த் போட்டியிலும் ஆசியப் போட்டியிலும் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் நிருபமா பெற்றார்.

அவரது டென்னிஸ் வாழ்க்கையில் 180 ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடி இரண்டு ஐ.டி.எஃப். பட்டங்களையும் 106 இரட்டையர் ஆட்டங்களில் விளையாடி 10 ஐ.டி.எஃப். பட்டங்களையும் வென்றிருக்கிறார். 1998-ல் ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் ஆட்டத்தில் 2-வது சுற்றுக்கும், 2001-ல் பிரெஞ்சு ஓபன் இரட்டையர் ஆட்டத்தில் 2-வது சுற்றுக்கும் முன்னேறியது இவரது சிறந்த கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகக் கருதப்படுகிறது.

அதன் பிறகு டென்னிஸிலிருந்து விலகியவர் அமெரிக்காவில் செட்டிலானார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘மூன் பாலர்’ என்ற நூலை எழுதினார். வளரும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்காக இதை எழுதினார். நேரம் கிடைக்கும்போது விம்பிள்டன், அமெரிக்க ஓபன், சென்னை ஓபன் போட்டிகளில் வர்ணனையும் செய்திருக்கிறார். தற்போது 41 வயதாகும் நிருபமா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டென்னிஸ் அகாடமி ஒன்றை நிறுவிப் பயிற்சி அளித்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்