ஆடும் களம் 05: சிக்ஸர் சாந்தா

By டி. கார்த்திக்

கி

ரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரருக்கு எப்போதும் மவுசு குறையாது. அந்த வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றின் நட்சத்திரமாகக் கொண்டாடப்படுபவர் சாந்தா ரங்கசாமி. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன், மகளிர் டெஸ்ட் போட்டியில் வெற்றி தேடித் தந்த முதல் கேப்டன், மகளிர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை, முதல் சிக்ஸர் விளாசிய வீராங்கனை இப்படிப் பல ‘முதல்’களுக்கு சாந்தா சொந்தக்காரர். இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு இவரே அடித்தளம். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

13CHLRD_ADU_KALAM சாந்தா (இளம் வயதில்...)rightவீதியிலிருந்து சர்வதேசத்துக்கு

ஆண்கள் மட்டுமே கிரிக்கெட்டில் கோலோச்சிய காலத்தில், மகளிர் கிரிக்கெட் வடிவம் பெற உதவியவர்களில் சாந்தா ரங்கசாமிக்குத் தனி இடம் உண்டு. கிரிக்கெட் விளையாடும் பெண்களுக்குப் பெரிய அளவில் வரவேற்போ ஆதரவோ பெரும்பாலும் இருப்பதில்லை. இப்படியொரு சூழலில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கிரிக்கெட் மட்டையோடு மைதானத்துக்கு வந்து விளையாடுவது என்பது பெண்களுக்குக் கனவிலும் சாத்தியமாகாதது. அப்படியான பின்னணியிலிருந்துதான் சாந்தா ரங்கசாமியின் கிரிக்கெட் வாழ்க்கையும் தொடங்கியது.

1960 -70-களில் சாந்தாவின் பால்யம் பெங்களூருவில் கழிந்தது. கிரிக்கெட் மீது தீராத ஆசைகொண்ட சாந்தா, வார இறுதி நாட்களில் பையன்களோடும் தன் வீட்டருகே வசித்த தோழிகளோடும் சேர்ந்து டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். வீதியில் கிரிக்கெட் விளையாடியவர், 20 வயதில் சர்வதேச அளவில் இந்தியாவுக்காகக் கிரிக்கெட் விளையாடும் அளவுக்குத் தன் திறமையை மெருகேற்றிக்கொண்டார். இவரைப் போலவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட்டின் மீது மோகம் கொண்ட இளம் பெண்களைக் கொண்டே இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் கட்டமைக்கப்பட்டது.

முதல் தொடர்

1973-ல் கிரிக்கெட் விளையாடப் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 14 அணிகளுக்கு இடையே போட்டித் தொடர் ஒன்று நடைபெற்றது. அந்தத் தொடரின் சிறந்த ஆல்ரவுண்டர் விருது சாந்தாவுக்குக் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்திய மகளிர் அணி உருவாக்கப்பட்ட போது கேப்டனாக இருக்கும் வாய்ப்பு சாந்தா ரங்கசாமியைத் தேடி வந்தது. ஆல்ரவுண்டராக அவர் இருந்தது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

13CHLRD_SHANTHA_RANGASWAMI_VG

1975-ல் நியூசிலாந்து மகளிர் அணியும் (5 டெஸ்ட்), ஆஸ்திரேலியா மகளிர் அணியும் (3 டெஸ்ட்) இந்தியாவுக்கு வந்தன. இந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக மொத்தமாக 527 ரன்களையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தமாக 203 ரன்களையும் சாந்தா குவித்தார். இந்த டெஸ்ட் போட்டிகள் எதுவுமே அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள் என்பதால் சாந்தாவின் சாதனைக் கணக்கில் இவை ஏறவில்லை. ஆனால், அவரை ஒரு சிறந்த கிரிக்கெட்டராக இந்தத் தொடர்கள் அடையாளம் காட்டின.

1976 - இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா காலடி எடுத்துவைத்தது. பெங்களூருவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயணம் தொடங்கியது. சாந்தா ரங்கசாமி தலைமையில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் களம் கண்டது. ஆறு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் அது. அதில் பாட்னாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிபெற்றமுதல் சர்வதேச வெற்றி.

ஆல்ரவுண்டர்

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இந்த முதல் தொடர் முழுவதுமே அபாரமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை சாந்தா வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் நான்கு அரை சதங்களை விளாசிய சாந்தா, எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் டெஸ்ட் தொடரிலேயே ஒரு வீராங்கனையாக, கேப்டனாக முத்திரைப் பதித்து அசத்தினார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு 1977-ல் இந்திய மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சென்றது. அந்தத் தொடர் சாந்தாவுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.

டுனெடின் நகரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால், அந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சாந்தா அபாரமாக விளையாடி 108 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். அந்தப் போட்டியில் அவர் விளாசிய சிக்ஸரும், இந்திய வீராங்கனை ஒருவர் விளாசிய முதல் சிக்ஸர் என்ற சிறப்பைப் பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமே 177 ரன்கள்தான் சேர்த்தது. இதில் சாந்தா விளாசிய 108 ரன், போட்டியை டிராவில் முடிக்க உதவியது.

13CHLRD_SHANTHA_RANGASWAMYright

முதல் இரண்டு ஆண்டுகள் இந்திய மகளிர் அணி குறிப்பிட்ட எண்ணிக்கையில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறைந்தது. 1976 முதல் 1991வரை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த சாந்தா மொத்தமே 16 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மொத்தமாக 1 சதம், 6 அரை சதம் உள்பட 750 ரன்களைக் குவித்திருக்கிறார். இந்த 16 டெஸ்ட் போட்டியில் 12 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக சாந்தா இருந்திருக்கிறார்.

குறைவாகப் பங்கேற்பு

இதே காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளிலும் சாந்தா விளையாடியிருக்கிறார். 1982 முதல் 1986 வரை 19 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார். ஒரு அரை சதம் உள்பட மொத்தம் 287 ரன்களையும், 12 விக்கெட்டுகளையும் சாந்தா எடுத்திருந்தார். 1982-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்குத் தலைமை வகித்தவரும் சாந்தாதான். சுமார் 15 ஆண்டு காலம் நீடித்த சாந்தாவின் கிரிக்கெட் பயணம் 1991-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. குறைந்த போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், மகளிர் கிரிக்கெட்டின் ‘பிதாமகள்’களில் சாந்தாவும் ஒருவர்.

சாந்தா கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த 1976-லேயே அர்ஜூனா விருது பெற்று வியப்பூட்டினார். சர்வதேச கிரிகெட்டில் அடியெடுத்துவைக்கும் முன்பே இந்த விருதைப் பெற்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் ‘சி.கே. நாயுடு’ வாழ்நாள் சாதனை விருது முதன்முறையாகச் சாந்தா ரங்கசாமிக்கு 2017-ல் வழங்கப்பட்டது. அந்த வகையிலும் வாழ்நாள் சாதனை விருது பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமைக்கு இவர் சொந்தக்காரரானார். தற்போது 64 வயதாகும் சாந்தா ரங்கசாமி, கனரா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்று பெங்களூருவில் வசித்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்