எ
தற்கெடுத்தாலும் மழையை வம்புக்கு இழுப்பது நம் தமிழ்ச் சமூகத்தில் நீண்டகால வழக்கமாக இருக்கிறது. யாராவது இறந்துவிட்ட அன்றைக்கு மழை வந்தால், ‘வானமே அழுதது’ என்பார்கள். பிடிக்காத கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், “இனி நாட்டிலே மழை பேஞ்சாப்புலதான்” என்று சொல்வார்கள். இப்படிப் பல இருந்தாலும் பெண்ணின் ஒழுக்கத்தோடு மழையை இணைக்கும் கொடுமையும் இங்கே நடக்கத்தான் செய்கிறது. இந்தத் துயரம் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தே வந்துகொண்டிருக்கிறது.
பெய்யெனப் பெய்யுமா?
கணவனைச் சாமியாகக் கும்பிடும் மனைவியின் ஏவலுக்கு மழையும் கட்டுப்படும் என்கிறது குறள். கணவனை மதிக்காவிட்டால் மழை பெய்யாது என்பது இதில் மறைபொருள். திருக்குறளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. சங்க காலத்துக்குப் பிறகான இலக்கியங்கள் பலவும் பெண்ணின் கற்போடு மழையை இணைத்துப் பேசியிருக்கின்றன. தொல் தமிழர் திருமண முறைகளை மானுடவியல் நோக்கில் ஆய்வு செய்த சிலம்பு நா.செல்வராசு இது பற்றிச் சிறு குறிப்பொன்றைத் தன் நூலில் எழுதியிருக்கிறார்.
மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் பல இடங்களில் கற்புடைய மகளிர் வாழ்வதால்தான் மழை பெய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு
என்கிறது சிலப்பதிகாரம்.
மண்டினி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்
என்கிறது மணிமேகலை.
எல்லாமே பெண்ணால்தானா?
“மழையின் தேவையை, இன்றியமையாமையை உணர்ந்ததால்தான் கற்புடைய மகளிரின் சிறப்பினைக் கூறும்போது சிறப்புடைய ஒன்றாகிய மழைவளம் தருதலை உடன் இணைத்துக் கூறினர் போலும்” என்று முடிக்கிறார் சிலம்பு நா.செல்வராசு.
ஆனால், எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது. ஏது குற்றமானாலும் அதைப் பெண்ணின் தலையில் ஏற்றி வைக்கும் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இப்படி மழை பெய்யாததற்கும் பெண்ணின் கற்புடமையைக் காரணமாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும்.
பலவகைக் கற்பு
அப்புறம் கற்பில் சில பல ரகங்களை அறிமுகப்படுத்தினார்கள். தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு ஆகிய மூன்று வகைகள் சொல்லப்பட்டன. தலைக்கற்பு எனப்படும் உடனுயிர் மாய்தல், இடைக்கற்பு எனப்படும் உடன்கட்டை ஏறுதல், கடைக்கற்பு எனப்படும் கைம்மை நோன்பிருத்தல் ஆகிய மூன்று கற்பு நிலைகளும் ஓர் ஆணின் இறப்பையொட்டி அவனுடைய மனைவி (யர்) தேர்ந்தெடுக்கும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதில் எந்தக் கற்புக்கு மழை கட்டுப்படும் என்பது விளக்கப்படவில்லை.
மேலே உள்ள மணிமேகலை வரிகளிலேயே உள்ள ‘பிறர் நெஞ்சு புகார்’ என்பதைப் பார்த்தாலே விளங்கும். ஓர் ஆணின் நெஞ்சில் ஒரு பெண் இடம்பெற்றுவிட்டால் அவள் கற்புடையவளல்ல என்கிறது பாடல். போகிற வருகிற பெண்களையெல்லாம் ஆடவர் தங்கள் நெஞ்சில் ஏந்திக்கொண்டால் அதற்கும் பெண்ணே பொறுப்பு.
பெண்ணேதான் குற்றவாளி?
மணிமேகலையில் மருதி என்னும் பிராமணப் பெண்ணின் கதாபாத்திரத்தைப் படைத்த சாத்தனார் அவளைத் துணையின்றி காவிரிக் கரையில் நடக்கவைக்கிறார். மருதி தனியே நீராடுகையில் பார்த்த ககந்தன் மகன் அவளை யாருமில்லாதவள் என்று எண்ணி, அவளைத் தன்னுடன் இருக்கும்படி அழைத்தான்.
அவள் மனம் உடைகிறாள். “மழைவளம் தரும் பத்தினிப் பெண்ணாக நான் இல்லாமல் போனேனே… அயலான் உள்ளத்தில் புகுந்துவிட்டேனே... முப்புரி நூல் அணிந்த மார்பினையுடைய என் கணவனான அந்தணனின் முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கில்லாது போயிற்றே” என்று சதுக்கப் பூதத்திடம் முறையிட்டு மன்றாடுகிறாள்.
சதுக்கப் பூதமும், “கற்புடைய மகளிரைப் போல பிறருடைய உள்ளத்தைச் சுடுகிற தன்மையுடையவளாக நீ இல்லை” என்று சொல்வதாகக் கதை போகிறது.
பிறன் மனை நோக்கிய ஆண் குற்றவாளியல்ல. பிறன் நெஞ்சு புகுந்த பெண்ணே குற்றவாளி என்று காவியங்களும் காப்பியங்களும் நீதிநூல்களும் காலம் காலமாக ஒருதரப்பாகத் தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
குறுந்தொகையில்,
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே
என்று கணவன் செத்ததும் தானும் செத்துவிட வேண்டும் என்ற விருப்பத்தைப் பெண் வெளிப்படுத்துகிறாள். எது உயர்ந்த கற்பு என்று பெண்ணுக்குக் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், பாரதி சபைக்கு வரும்வரை எந்த நீதிமானும் ஆணுக்கான கற்பை சொன்னதாகத் தெரியவில்லை.
மதுரையில் பெய்யாத மாமழை
இவ்வளவு கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? போன வாரம் ஒரு நாள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வழியில் ஒரு நிறுத்தத்தில் ஒரு குடும்பம் ஏறியது. மனைவி முதலில் ஏறி உள்ளே வந்து அவசரமாக ஜன்னல் இருக்கையைப் பிடித்து அமர்ந்துகொண்டார். வெற்றிச் சிரிப்புடன் கணவனைத் திரும்பிப் பார்த்தார். அவன் ஒரு கையில் குழந்தையும் மறு கையில் கனத்த பையுமாகத் திக்கித் திணறி ஏறிக்கொண்டிருந்தான்.
அந்தப் பெண் வா… எனக் கையசைத்தார். அவனும் வந்து பையைக் கீழே வைத்து மடியில் குழந்தையை வைத்து மனைவியருகே அமர்ந்தான். குழந்தை, அம்மாவை நோக்கித் தாவியதா ஜன்னலை நோக்கித் தாவியதா என்று சரியாகச் சொல்ல முடியாதபடிக்குத் தாவியது. ஆனால், அந்த இளம் தாயோ குழந்தையை ஒரு முறைப்பு முறைத்தும்… என்று ஆள்காட்டி விரலால் அதட்டிவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
நான் இரண்டு வரிசை பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுக்காரரும் இந்தக் காட்சியை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் குழந்தையை வாங்காமல் ஜன்னலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை அவரால் ஏற்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கி என் பக்கம் திரும்பி, “பிறகு எப்படி மழை பெய்யும்?” எனக் கேட்டார். இப்போது கட்டுரையின் முதல் வரியிலிருந்து மீண்டும் வாசியுங்கள்.
திருக்குறளில் புறப்பட்டுச் சிலப்பதிகாரம், மணிமேகலை வழியாக அந்தப் பாழாய்ப்போன கற்பு மழை மதுரை செல்லும் பேருந்தில் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டதே என்று நினைத்தேன். எந்நேரமும் பிள்ளையைச் சுமந்து சலித்துப்போன அந்தப் பெண், ‘பஸ்ஸில் போகும்போது நான் தூக்கவே மாட்டேன். நீதான் தூக்கணும்’ என்று நிபந்தனை விதித்துப் பயணத்துக்கு வந்திருக்கலாம் என்ற கோணத்தில்கூட அந்த மழைக்காரர் யோசித்திருக்கலாம்தான். ஆனால், சமூகம் அப்படியெல்லாம் யோசிப்பதில்லை. முன்னோர் வாக்கு மூளையை அழுத்திக்கொண்டிருக்கிறது. அப்படியே அந்தப் பெண் சும்மா இருக்க, அவன் பிள்ளையைத் தூக்கி வந்தால்தான் என்னவாம்? அப்படியொரு காட்சியை ஏன் சகித்துக்கொள்ள முடியவில்லை?
எனக்கு, ‘கொலையும் செய்வாள் பத்தினி/ கொஞ்சம் இரு/முன்னதாக நீ என்ன செய்தாய்?’ என்ற கவிஞர் தாமரையின் வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago