வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய முதல்படி என்றுதான் 10-ம் வகுப்பு பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், குடும்ப நிலைமை காரணமாக 10-ம் வகுப்புப் படிப்பை நிறுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளான திண்டுக்கல் மாணவி, வீதிவீதியாகச் சென்று காய்கறியும் கீரையும் விற்றுத் தனது அக்காவையும் தங்கையையும் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த விண்ணரசி (15), முருகன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். புத்தகப் பையுடன் சேர்த்துக் குடும்பப் பாரத்தையும் சுமக்கும் இந்த மாணவியின் வைராக்கியம் ஆச்சரியப்பட வைக்கிறது.
வீட்டு நிலைமை
இவருடைய அப்பா ஜெகநாதன், பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். விண்ணரசியின் அம்மா செல்வராணி, திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்குத் தினமும் அதிகாலையில் சென்று காய்கறி வாங்கிவந்து, கணவர் ஜெகநாதனுடன் சைக்கிளில் வீதிவீதியாகச் சென்று விற்றுவந்தார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் அவர்களுக்கும், அவர்களுடைய நான்கு மகள்களான ஆரோக்கியமேரி, ஜெனித்தாமேரி, விண்ணரசி, குணசீலி பவித்ரா ஆகியோருக்கும் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. ஆரோக்கியமேரி திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ.யும், குணசீலி பவித்ரா 7-ம் வகுப்பும் படித்துவருகிறார்கள். வாழ்க்கை நடத்துவதற்கும், மகள்கள் படிப்பதற்கும் காய்கறி வியாபாரமே ஆதாரமாக இருந்துவந்தது.
செல்வராணியால் முன்புபோல் வியாபாரத்தையும் வீட்டையும் ஒருசேரக் கவனிக்க முடியவில்லை. மகள்களுக்கான படிப்புச் செலவையும் சமாளிக்க முடியாமல் திணறினார். அதனால் முதல் மகளை மட்டும் படிக்க வைத்துவிட்டு, ஜெனித்தாமேரியை 10-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். பிறகு, தனியார் மில்லில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
வியாபாரம் செய்ய முடிவு
அடுத்த மகளான விண்ணரசியும் படிப்பை நிறுத்திவிட்டு, காய்கறி விற்கச் செல்ல வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. ஆனால், விண்ணரசிக்கு படிப்பைக் கைவிட மனமில்லை. தந்தைக்குப் பதிலாகத் தானே சைக்கிளில் சென்று காய்கறி வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்.
திண்டுக்கல் சந்தைக்குத் தினசரிக் காலை 5 மணிக்குச் சென்று அம்மா செல்வராணி வாங்கிவரும் காய்கறி, கீரை வகைகளைச் சைக்கிளில் வைத்துச் சின்னாளப்பட்டி, திரு.வி.க. நகர், முத்தமிழ் நகர், திருநகர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று விற்று வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குடும்பச் சுமைகளைத் தாங்க பெற்றோருக்கு உதவியாக இருப்பதுடன் பள்ளிப் படிப்பையும் அவர் கைவிட வில்லை. தனது அக்காவும், தங்கையும் படிப்பதற்கும் உதவிவருகிறார்.
என்னால் முடியும்
"பல குடும்பங்கள் பெண் குழந்தைகளைச் சுமையா நினைக்கிற காலத்துல என் அப்பாவும் அம்மாவும் எங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாங்க. அவங்களால முன்ன மாதிரி வேலைக்குப் போய் எங்களைப் படிக்க வைக்க முடியலை. நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணுங்கிறதுதான் என் ஆசை. எக்காரணம் கொண்டும் படிப்பை நிறுத்த நான் விரும்பலை. ரெண்டையும் சேர்த்துச் செய்ய முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு, செய்ய ஆரம்பிச்சுட்டேன்" வார்த்தைகள் உறுதியாக வருகின்றன விண்ணரசியிடம் இருந்து.
சகோதரிகளுக்கு உதவும் வகையில் அக்கா ஜெனித்தா மேரி சமையலைக் கவனிக்க, தினசரிக் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை காய்கறி வியாபாரம் செய்துவிட்டு 9 மணிக்குப் பள்ளிக்குப் போய்விடுகிறார் விண்ணரசி. சாயங்காலத்தைப் படிப்புக்காக ஒதுக்குகிறார்.
சகோதரிகளுக்கு உதவும் வகையில் அக்கா ஜெனித்தா மேரி சமையலைக் கவனிக்க, தினசரிக் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை காய்கறி வியாபாரம் செய்துவிட்டு 9 மணிக்குப் பள்ளிக்குப் போய்விடுகிறார் விண்ணரசி. சாயங்காலத்தைப் படிப்புக்காக ஒதுக்குகிறார்.
"எனக்கு இதுல எந்தக் கஷ்டமும் தெரியலை. அம்மா, அப்பாவுக்கு உதவியா இருக்கிறதையும் அக்கா, தங்கச்சிய படிக்க வைக்கிறதயும் சந்தோஷமா நினைக்கிறேன். படிப்பை நிறுத்தாமல் தொடர்றதும் குடும்பத்துக்கு ஆதரவா இருக்கிறதும் மனநிறைவும், தன்னம்பிக்கையும் தருது" எனத் தெளிவாகப் பேசுகிறார் விண்ணரசி.
புத்தகப் பையைச் சுமக்க வேண்டிய வயதில், அத்துடன் குடும்பப் பாரத்தையும் சுமக்கும் இந்த மாணவியின் தன்னம்பிக்கை, அவர் விற்கும் காய்கறிகளும் கீரையும் தரும் ஆரோக்கியத்தைவிடவும் மிகப் பெரிய வைட்டமினாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago