த
மிழ்ச் சிறுகதைக்கு நூறு வயதாகிவிட்டது. இந்த நூறாண்டு காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெண்ணியம் என்ற லட்சிய நோக்கமெல்லாம் தொடக்கத்தில் பெண் எழுத்துகளில் தீவிரம் பெறவில்லை. அனுபவங்களை எழுதினார்கள். இன்றைக்கு விருட்சமாகியிருக்கும் பெண்ணிய எழுத்துகள், பிற்காலத்தில் வேர்பிடித்தவைதாம். அப்படியான எழுத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர்களுள் ஒருவர் எழுத்தாளர் அம்பை.
கேள்விக்குள்ளாக்கிய எழுத்து
அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்கினார். தன் எழுத்துகளைத் தானே மதிப்பிட்டுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆடுகளும் மாடுகளும் லட்சக்கணக்கான சிற்றுயிர்களும் ஆண்களும் வாழும் இந்தச் சமூகத்தில் பெண்களின் இடம் என்ன என்ற கேள்வியை அவர் தன் கதைகளின் மையமாகக் கொண்டார். ஆனால், அந்தக் கேள்விகளை தீப்பந்தம்போல் கதைகளுக்குள் உரத்துத் தூக்கிப் பிடிப்பதில்லை. பாட்டியால் வளர்க்கப்பட்ட அம்பை, அந்தப் பெரிய மனுஷியின் பழைய நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் சிறு பெண்ணாகத் தன் கதைகளில் குரலை உயர்த்துகிறார். அம்பை எழுதுவதற்கு முன்பே பெண் சுதந்திரம், புரட்சி போன்றவை வெகுஜனத் தளத்தில் பேசப்பட்டாலும் அதற்கும் சில எல்லைகள் இருந்தன. அம்பை அந்த எல்லைகளைத் தாண்டினார்.
“அன்றைய வெகுஜன வாசிப்பின் வழியாகவே கதை சொல்வதற்கான ஒரு மொழியையும் வடிவையும் எடுத்துக்கொண்டேன்” என ஒரு நேர்காணலில் அம்பை சொல்கிறார். இதன் மூலம் மொழியை ஒரு உன்னத வடிவமாகத் தூக்கிக் கொண்டாடவில்லை எனத் தெளிவாகிறது. கதையைச் சொல்வதற்கு ஒரு மொழி, அவ்வளவுதான் அவரது லட்சியம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஏனெனில் அம்பை எழுதவந்த காலகட்டக் கதைகளில் மொழிக்கு அழகியல் முக்கியத்துவம் இருந்தது. அம்பை அதைத் தவிர்த்தார். ஒரு கற்பனையாளராகத் தன் கதைகளுக்குள் அழகியல் விவரிப்புகளைச் சொல்வதைவிட, ஒரு பெண்ணாக அவர்களின் பிரச்சினைகளைச் சொல்வதில்தான் அம்பைக்கு விருப்பம் அதிகம். ஒரு பெண்ணின் நிலையைச் சொல்லும் கதைகளில் சொற்கள், எல்லைகளை மீறித் திரண்டுவருகின்றன.
உள்ளீடற்ற மரம்
JKR__AMBAI__C.S._LAKSHMI_ அம்பை
வெகுஜனப் பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன. அவரது ‘காட்டில் ஒரு மான்’ கதை, தங்கம் அத்தை என்ற பாத்திரத்தை உதாரணப் பெண்ணாகக் கொண்டது. இதில் கதை சொல்லி, குட்டிப் பெண்ணாக வருகிறாள். அத்தை ஒரு பூக்காத பெண். அவளுக்கு மாதச் சுழற்சி வரவே இல்லை. கதை சொல்லியைப் போன்ற குட்டிப் பெண்களுக்கு இது விளங்கவே இல்லை. வயதுக்கு வந்த ஒரு மூத்த குட்டிப் பெண், வெட்டிக் கீழே விழுந்த பட்டுப்போன மரத்தைக் காட்டி விளக்க முயல்கிறாள். அந்த மரம் உள்ளீடற்று இருக்கிறது. “அதுதான் பொக்கை” என்கிறாள் அவள். ஆனால், அத்தையின் மினுக்கு மேனியை இந்தப் பொக்கை மரத்துடன் அவளால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது, அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது?’ எனக் கதையின் இடத்தில் கேட்கிறாள். பருவமெய்தாத பெண்கள், சமூகத்தில் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்வார்களோ அதைவிட அதிகமான பிரச்சினைகள் தங்கத்துக்கு. ஒரு கட்டத்தில்தான் இவையெல்லாம் தங்கம் என்ற தனி மனுஷியின் பிரச்சினைகள் அல்ல. சமூகத்தின் பிரச்சினைகள் எனக் கதை சித்தரிக்கிறது. ஆனால், இது எதையும் பிரச்சாரமாகச் சொல்லவில்லை. தன் கூட்டத்தைவிட்டு வந்த மான், ஒரு புது காட்டில் முதலில் பயந்து பிறகு அதிலேயே வாழப் பழகிக்கொள்ளும் கதையைச் சொல்லி கதை முடிகிறது. ஆனால், தங்கம் அழுதுகொண்டிருக்கிறாள்.
இரு பெண்கள் இரு உலகம்
அவரது ‘வெளிப்பாடு’ சிறுகதையில் ‘வெகுஜனப் பெண்’ணிலிருந்து வெளியேறிவிட்ட டெல்லிவாசிப் பெண் வழியாகக் கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதைக்குள் பெண்கள் இருவர் வருகிறார்கள். இருவரும் கதை சொல்லிக்குத் தோசை சுட்டுப் போடுகிறார்கள். ஒருத்தி, திருமணம் முடிந்து, தோசைகள் சுட்டு, கணவனிடம் அடிகள் வாங்கி, குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்துத் தன் வாழ்க்கையைச் சமையலறைக்குள் ஒடுக்கிக்கொண்ட மனுஷி. அவள், நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள் சுட்டிருக்கிறாள். இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள், சோறு எல்லாம் தனிக் கணக்கு என்கிறார் கதை சொல்லி. இன்னொருத்தி கைநீட்டாத, கடை கண்ணிக்குக் கூட்டிப் போகும் கணவனைக் கனவு காணும் இளம் பெண்.
மூத்த மனுஷிக்கு பிள்ளைபெறுவதற்கும் சமைப்பதற்கும் அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. சமுத்திரம் மீது தீரா ப்ரியம் இருக்கிறது. கண்ணாடி மாதிரி கிடக்கும் ஒரு சமுத்திரத்தைச் சின்ன வயதில் பார்த்திருக்கிறாள். அதைச் சமுத்திர சாபம் என்கிறாள் அவள். அதனால் கணவரிடம் அடியும் வாங்கியிருக்கிறாள். இளம் பெண்ணுக்கு எல்லாவற்றையும் சுயமாகச் செய்ய விருப்பம். தனியாகக் கடைக்குப் போகவும் ஆசை. ஆனால், கதவு வரைதான் அவள் எல்லை. இந்த இரு பெண்களும் குடும்ப அமைப்புக்குள் எப்படித் தொலைந்துபோயிருக்கிறார்கள் என்பதை, டெல்லிவாசியான கதைசொல்லி அவர்களின் ஒரு நாளுக்குள் நிகழ்த்தும் குறுக்கீடு மூலம் இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
அம்பையின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சினிமாக்களில், கதைகளில் இதுவரை பார்த்துப் பழக்கப்பட்ட காவிய நாயகிகள் அல்ல. அவர்கள் மதிப்பீடுகளுக்குள் வாழ்கிறார்கள். அதைக் காக்க முனைப்புக் காட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையிலும் எந்த அதிசயமும் நிகழவில்லை. ஆனால் அம்பை கதைகள் வழியாக ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துகிறார். அம்பையின் மொத்தக் கதைகளும் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட ஒழுக்க விதிகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்படும் குறுக்கீடுகள் என வரையறுப்பது பொருத்தமாக இருக்கும்.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளாரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. ஆங்கிலத்தில் இதே பெயரில் கட்டுரைகள் எழுதிவருகிறார். மும்பையில் வசிக்கிறார். ‘அம்பை சிறுகதைகள்’ முழுத் தொகுப்பும் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ குறுநாவலும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. ‘காட்டில் ஒரு மான்’ கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஆங்கில இலக்கியத்தின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘க்ராஸ் வேர்டு’ விருதைப் பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago