பெண்கள் 360: கௌரவத்தின் விலை உயிரா?

By முகமது ஹுசைன்

கௌரவத்தின் விலை உயிரா?

நீனு, கொல்லம் தென்மலையைச் சேர்ந்தவர். கெவின் பி ஜோசப், கோட்டயத்தைச் சேர்ந்தவர். கோட்டயத்தில் தங்கி கல்லூரியில் படித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. படிப்பை முடித்தபின் வேலைக்காக துபாய் சென்றுள்ளார் ஜோசப். நீனு, தென்மலையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய ஜோசப், நீனுவைத் திருமணம் செய்துகொள்ள நீனுவின் பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

சாதியும் பொருளாதார ஏற்றத் தாழ்வும் இவர்களது திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்டன. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். வசதி படைத்த நீனுவினுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள், நீனுவை அவருடைய பெற்றோருடன் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

நீனுவின் அண்ணன் உள்பட 12 பேர் ஜோசப்பைத் தாக்கி, கடத்திச்சென்றனர். நீனு தன் அண்ணன் சானுசாக்கோவின் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் ஜோசப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் கலப்புத் திருமணம் செய்ததால், ஜோசப் கவுரவ கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் நீனு தன்னுடைய கணவரை இழந்துள்ளார்.

ஒன்றுபட்டால் உண்டு வெற்றி

உத்தரப் பிரதேசத்தில் கைரானா தொகுதியில் பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங், பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் போட்டியிட்டார். 47 வயது நிரம்பிய அவர் மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தில், உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் எம்.பி அவர்தான். 2009-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தபசம் முதன்முறையாக வெற்றி பெற்றார்.

அதன் பின் நடந்த குடும்ப சண்டை, அரசியல் சூழ்ச்சி போன்றவை 2014 தேர்தலில் அவருக்குப் பின்னடவை ஏற்படுத்தின. ஆனால், இந்த முறை சாமர்த்தியமாகக் குடும்பத்தையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி வாகை சூடியுள்ளார். வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தபசம், ‘‘எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவுக்குத் தோல்விதான் என்பதை எனது வெற்றி நிரூபித்துவிட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்தனர். இருப்பினும் மக்கள் தீர்ப்பு அவர்களை வீழ்த்தியுள்ளது. 2019 மக்களவை தேர்தலிலும் இதே முறையில் பாஜகவைத் தோற்கடிப்போம். மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்’’ என்றார்.

டென்மார்க்கிலும் தடை

‘இருவர் சந்தித்துக்கொள்ளும்போது ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொள்வது எதிரில் உள்ளவரை அவமதிக்கும் செயல். முகத்தைத் திரையிட்டு மறைக்கும் பர்தாவை அணிவதற்கு விரைவில் தடை விதிக்கப்படும்’ என்று டென்மார்க் நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கூறினார். அதன் தொடர்ச்சியாக, டென்மார்க் அரசு இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது குறித்து கடந்த வாரம் வாக்கெடுப்பு நடத்தியது.

அந்த வாக்கெடுப்பில் 75 பேர் பெண்கள் பர்தா அணிய தடைவிதிக்க வேண்டும் என வாக்களித்தனர். வெறும் 30 பேர் மட்டுமே தடை விதிக்க வேண்டாம் என்று வாக்களித்தனர். இதனால், டென்மார்க்கில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1 முதல் அந்தத் தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

alfonsina-storni-colorவறுமையை எழுத்தால் வென்றவர்

அல்ஃபோன்ஸினா ஸ்ட்ரோனி, லத்தீன் அமெரிக்காவின் நவீன கவிஞர், பெண்ணியவாதி. 27 வயதுக்குள்ளாக ஆறு சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் பல கட்டுரை தொகுப்புகளையும் எழுதியவர். 16 வயதிலேயே பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கிவிட்டார். 1892 மே 29-ல் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சலா கேப்ரியஸ்காவில் பிறந்தார். இத்தாலியரான அவருடைய தந்தை அர்ஜெண்டினாவின் சான் ஜூவான் நகரில் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்துவந்தார். சிறு வயதில் ஸ்ட்ரோனி பல்வேறு வேலைகளைப் பார்த்துள்ளார்.

1907-ல் ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்து நாடு முழுவதும் சுற்றிவந்துள்ளார். இளம் பருவத்தில் அவரை வறுமை வாட்டியெடுத்தது. அதையும் மீறி அவர் தன் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். 1920-ல் அவர் எழுதிய லாங்குயிடிஷ் எனும் புத்தகம், அவருக்கு அர்ஜெண்டினாவின் தேசிய இலக்கிய விருதைப் பெற்று தந்தது. 1938 அக்டோபர் 25 அன்று அதிகாலை ஒரு மணிக்கு நீந்துவதற்காகக் கடலுக்குள் சென்றவர் உடலாகத் திரும்பி வந்தார். அவரது 126-வது பிறந்தநாளைக் கவுரவிக்கும் விதமாக சிறப்பு டூடுலை கடந்த செவ்வாய் அன்று கூகுள் நிறுவனம் வெளியிட்டது.

எண்ணமும் சொல்லும்: ஆட்சியர் எங்கே?

தூத்துக்குடியில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் எல்லாம் எங்கே போனார்கள்? எங்களை ஏன் அவர்கள் வந்து பார்க்கவில்லை? எங்களைப் பார்த்து அமைச்சர் ஏன் பயந்து ஓடுகிறார்? ஆட்சியர் எங்கே போனார்? மக்களைப் பாதுகாப்பதைவிட, மக்களைக் கொல்பவர்களைக் காப்பதுதான் அரசின் வேலையா? எங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் 11 லட்சம் தருகிறோம். அவர்கள் குடும்பத்தில் யாரேனும் சாகத் தயாரா?

- ஸ்டெர்லைட் போராட்டக் களத்தைச் சேர்ந்த பெண்ணின் வீடியோ பதிவிலிருந்து.

sterlite100 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்