அயர்லாந்து நாட்டில் சில நாட்களுக்கு முன் கருக்கலைப்புக்கான தடைச்சட்டம் நீக்கப்பட்டது. அதையொட்டி, தலைநகர் டப்ளினில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவீதாவின் உருவப்படம் வரையப்பட்ட பிரம்மாண்ட சுவரின் முன் ஆயிரக்கணக்கான பெண்கள் பூங்கொத்துகளுடனும் மெழுகுவர்த்திகளுடனும் நின்று அதைக் கொண்டாடினார்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்துக்குக் காரணமாக இருந்த சவீதாவை நினைத்தபடி கண்ணீருடன் அவர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொண்டனர்.
03CHLRD_SAVEEயார் இந்த சவீதா?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சவீதா, பல் மருத்துவர். அவருடைய கணவருக்கு அயர்லாந்து நாட்டில் வேலை கிடைத்தது. அதனால் சவீதா தன் கணவர் பிரவீனுடன் 2012-ல் அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். அங்குக் குடியேறிய சில மாதங்களில் சவீதா கருவுற்றார். பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருந்தால் அவளுக்குத் தங்கள் இருவரது பெயரையும் இணைத்து ‘Prasa’ என வைக்க சவீதா திட்டமிட்டிருந்தார். குழந்தையை ஆசையோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் சவீதாவுக்கு எதிர்பாராதவிதமாகக் கருச்சிதைவு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சவீதாவை அழைத்துச் சென்றார் பிரவீன்.
சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு சவீதாவை வீட்டுக்குச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். வீட்டுக்கு வந்த சவீதாவுக்கு உதிரப்போக்கு அதிகரித்தது. தனக்கு வேறு ஏதோ பிரச்சினை இருப்பதாக உணர்ந்த சவீதா மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.
சவீதாவுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதை முடிந்த அளவுக்குச் சரிசெய்யப் பார்ப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். அதனால், உயிருக்குப் போராடும் சவீதாவுக்குக் கருக்கலைப்பு செய்து காப்பாற்றுவதற்குப் பதிலாகக் கருவைக் காப்பாற்றுவதற்கான சிகிச்சையை அவர்கள் மேற்கொண்டனர்.
நேர்செய்ய முடியாத துயரம்
மருத்துவர்களால் சவீதா காப்பாற்றப்பட்டுவிடுவார் என்ற நம்பிக்கையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரவீன் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், நேரம் செல்லச் செல்ல சவீதாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு சவீதா கருச்சிதைவால் ஏற்பட்ட உதிரப்போக்கால் உயிரிழந்தார்.
“அவசர சிகிச்சைப் பிரிவில் காத்துக்கொண்டிருந்த என்னைச் செவிலியர்கள் அவசரமாக சவீதா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளது உடல் குளிர்ச்சியாக மாறியிருந்தது. எப்படியாவது கருவைக் கலைத்துவிடுங்கள் என நான் மருத்துவர்களிடம் மன்றாடினேன். ஆனால், அவர்கள் அதை மறுத்துவிட்டனர். சவீதாவின் கையை நான் பிடித்துக்கொண்டிருந்தபோதே அவளது உயிர் பிரிந்துவிட்டது” எனக் கோபமும் துக்கமும் இயலாமையும் ஒருங்கே சேர்ந்த குரலில் பிரவீன் பேசியது அயர்லாந்து மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சவீதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கடந்த ஆறு ஆண்டுகளாக அயர்லாந்து முழுவதும் கருக்கலைப்பு தடைச்சட்டத்துக்கு எதிராக ‘yes’ என்ற பெயரில் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
அயர்லாந்து மக்களின் எழுச்சிமிக்கத் தொடர்ப் பிரச்சாரத்தால், கருக்கலைப்பு தடைச் சட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு கடந்த வாரம் நடந்தது. இந்தப் பொதுவாக்கெடுப்பில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என 60 சதவீதத்துக்கு மேலானவர்கள் வாக்களித்தனர்.
இதையடுத்துத் தாயின் உடல்நலன் கருதியோ கருவின் நலன் கருதியோ 12 முதல் 24 வாரத்துக்குள்ளான கருவைக் கலைக்கலாம் என அங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தாய்க்கோ குழந்தைக்கோ பாதிப்பு இருக்கும்பட்சத்தில் 24 வாரம் கடந்த பிறகும் உரிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு கருக்கலைப்பு செய்யலாம் எனக் கருக்கலைப்புத் தடைச்சட்டத்தில் பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பிறகு அயர்லாந்து பெண்கள் மகிழ்ச்சியின் பெருவெள்ளத்தில் மிதந்தனர். “வேறொரு கலாச்சாரத்திலிருந்து வந்திருந்த சவீதாவால்தான் இன்று அயர்லாந்து பெண்களுக்குக் கருக்கலைப்புத் தடைச் சட்டத்திலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. நாங்கள் என்றென்றும் சவீதாவுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்கிறார் அயர்லாந்தைச் சேர்ந்த துருகன் என்ற பெண்.
இது குறித்து அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், ‘‘இந்தச் சட்டத் திருத்தம் மூலம் அயர்லாந்தில் அமைதியான முறையில் புரட்சி நடந்துள்ளது” என்றார்.
இந்தத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் ஒவ்வொரு சேனலாக அது குறித்த செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தார் சவீதாவின் தந்தை. “என் மகள் சவீதா வலியால் துடிதுடித்து இறந்துபோனாள். ஒருவேளை அவள் வேறொரு நாட்டில் இருந்திருந்தால் நிச்சயம் உயிரோடு இருந்திருப்பாள். சவீதாவின் மரணத்துக்குப் பிறகு வந்துள்ள தீர்ப்பு அயர்லாந்து வரலாற்றில் மிகவும் முக்கியமானது. என்னைப் போன்ற பெற்றோருக்கு நேரிட்ட இந்த இழப்பு வேறு யாருக்கும் நிகழக் கூடாது.” என்று சொல்லியிருக்கிறார்.
தாய்மைக்கு நிகராகத்தான் தாயின் உயிரும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சவீதாவின் மரணத்துக்குப் பின்னர் அயர்லாந்து அரசு உணர்ந்துள்ளது. அயர்லாந்தைப்போல் அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
# இந்தியாவில் 1971 முதல் கருக்கலைப்பு செய்யும் சட்டம் அமலில் உள்ளது.
# சட்ட விரோதமான கருக்கலைப்பு முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
# கருவின் வயது இரண்டு வாரம் இருக்கும்போது மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம்.
# 12 வார கருவாக இருந்தால் தாயின் மனநலத்தையும் உடல் நலத்தையும் கருத்தில்கொண்டு மருத்துவரே முடிவெடுத்துக் கருக்கலைப்பு செய்யலாம்.
# 12 முதல் 20 வாரங்களுக்குள் இருந்தால் அந்தக் கருவை இரண்டு மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு கலைக்கலாம்.
# தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற அவசர சூழ்நிலையில் 20 முதல் 24 வாரத்துக்குள் உள்ள கருவை அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு மருத்துவரே கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாம்.
# அதேபோல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் 20 வாரத்துக்கு மேலான கருவைக் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago