காலையில் அரக்கப் பரக்க எழுந்து குழந்தைகளைக் கல்லூரிக்கும் பள்ளிக்கும் அனுப்பிவிட்டு, குவிந்து கிடக்கிற வேலைகளை நாள் முழுவதும் செய்துகொண்டிருக்கும் இல்லத்தரசிகளில் ஒருவர் ஹேமமாலினி. ஆனால் தன் மகளுக்காக அவர் செய்யத் தொடங்கிய ஒரு வேலையை, இன்று சுயதொழிலாக மாற்றிக் காட்டியதில் தனி அடையாளம் பெறுகிறார்.
செங்கல்பட்டு அழகேசன் நகரில் இருக்கும் ஹேமமாலினியின் வீட்டுக்குச் சென்றால், நம் வீடுகளில் அதிகம் புழங்கப்படாத சிறுதானியங்கள் முளைகட்டப்பட்டுக் காய்ந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் தானியங்களைக் கல் நீக்கி, தூசு புடைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஹேமமாலினி.
மருமகளுக்கு உதவியாகப் பயறு வகைகளையும், கொட்டைகளையும் பக்குவமாக வறுத்தெடுக்கிறார் மாமியார். வீடு முழுக்க மணம் பரப்பும் சத்துமாவை பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டிருக்கிறார் ஹேமமாலினியின் கணவர் கோதண்டராமன். வேலையைத் தொடர்ந்தபடியே பேசுகிறார் ஹேமா.
"செங்கல்பட்டு பக்கத்துல இருக்கற மொடையூர் கிராமத்துலதான் நான் பிறந்தேன். அப்பா திருக்கோவிலூர்ல அரசாங்க வேலையில இருந்ததால படிப்பு எல்லாம் அங்கேதான். அப்புறம் கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப செங்கல்பட்டுக்கே வந்தாச்சு"என்று நான்கே வரிகளில் தன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிட்டார்.
ஹேமமாலினியின் கணவர், சிவில் காண்ட்ராக்டர். மகள் ஹேமவர்தினி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் மகன் ஜெயந்த், திருச்செங்கோட்டில் பதினோராம் வகுப்பும் படிக்கிறார்கள்.
ஹெல்த் மிக்ஸ் ஹேமா
ஹேம மாலினியாக இருந்தவர், ‘ஹெல்த் மிக்ஸ்’ ஹேமமாலினியாக மாறியதற்குப் பின்னால் சுவாரசியமான கதை இருக்கிறது. கல்லூரி செல்வதற்காகத் தினமும் காலை ஐந்தரை மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பிவிடும் தன் மகளின் உடல்நலம் குறித்துக் கவலைப் பட்டிருக்கிறார் ஹேமமாலினி. சத்து மாவு காய்ச்சிக் கொடுத்தால் அதை சமன்செய்துவிடலாம் என்று தெரிந்தவர் சொல்ல, அவர் சொன்ன தானியங்களுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றையும் சேர்த்து சத்து மாவு அரைத்திருக்கிறார். அதைத் தன் மகளுக்குக் கொடுத்ததுடன் தானும் குடித்து வந்திருக்கிறார்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் கர்ப்பப்பை நீக்கியதால் தொடர்ச்சியான கால் வலியால் அவதிப்பட்டு வந்த ஹேமமாலினி, சத்து மாவு கஞ்சியைக் குடித்ததற்குப் பின்னால் உற்சாகமாக உணர ஆரம்பித்திருக்கிறார்.
"நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ எங்க வீட்டு மாடியில டி.வி வச்சு அதுல ஒரு ராத்திரி முழுக்க சினிமா படங்களைப் போடுவாங்க. அரை மணி நேரத்துல எங்களால காலை மடக்கி உட்கார முடியாது. கொஞ்ச நேரம் காலை நீட்றதும், படுத்துக்கிட்டுப் படம் பார்க்கிறதுமா இருப்போம். ஆனா எங்க பாட்டி மட்டும் கொஞ்சம்கூட அசையாம உறுதியா உட்கார்ந்துட்டு இருப்பாங்க. அவங்க கால் வலின்னு சொல்லி நான் கேட்டதில்ல. நான் சத்து மாவு கஞ்சியைத் தொடர்ந்து குடிச்ச பிறகு வந்த மாற்றத்துக்கு அப்புறம்தான் என் பாட்டியோட உணவுப் பழக்கம் மேல எனக்கு மரியாதை வந்தது" என்று மலரும் நினைவுகளில் மூழ்கியவர், தன் அனுபவத்துக்குப் பிறகு மேலும் சில தானியங்களைப் பட்டியலில் சேர்த்து அரைத்திருக்கிறார். கேட்கிறவர்களுக்கும் சத்து மாவு தயாரிப்பு குறித்து சொல்லியிருக்கிறார். அப்போது ஒருவர், தான் வேலைக்குச் செல்வதால் மாவு அரைக்க நேரமில்லை என்று சொல்ல, அவருக்கு ஹேமமாலினியே அரைத்துக் கொடுத்திருக்கிறார். அதுதான் முன்னேற்றத்தின் முதல் புள்ளியாக இருந்திருக்கிறது.
"எங்க தாத்தா புளி வியாபாரி. அவர் பயன்படுத்தின தராசை நான் எடுத்துக்கிட்டேன். அரை கிலோ அளவுக்காக கடையில இருந்து வாங்கிட்டு வந்த பருப்பு பாக்கெட்டை எடைக்கல்லுக்குப் பதிலா வச்சு எடைபோட்டேன். இப்படித்தான் தொடங்குச்சு என் பிசினஸ். ஆரம்பத்துல ஒருத்தருக்கு மட்டும்தான் அரைச்சிக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு இன்னும் சிலரும் என்கிட்டே கேட்டாங்க. அப்போதான் இதையே ஏன் நாம சிறுதொழிலா தொடங்கக் கூடாதுன்னு தோணுச்சு. கேழ்வரகு, கம்பு மட்டுமில்லாம சிகப்பரிசி, கறுப்பு உளுந்து, கொள்ளு, குதிரைவாலி, சாமை, தினை இப்படி நிறைய தானியங்களைச் சேர்த்து அரைச்சேன்" என்று தான் தொழில் தொடங்கிய பின்னணியைச் சொல்கிறார்.
கடந்துவந்த விமர்சனங்கள்
ஆரம்பத்தில் தானியங்களை வறுத்து அரைத்தவர், தனக்குத் தெரிந்த ஹோமியோபதி மருத்துவரின் கருத்துப்படி தானியங்களை முளைகட்டி அரைத்திருக்கிறார். தெரிந்தவர்கள் மூலம் ஓரளவுக்கு ஆர்டர் கிடைத்தாலும் நிறைய இடங்களில் எதிர்மறை விமர்சனங்களைத்தான் எதிர்கொண்டிருக்கிறார்.
"ஆரம்பத்துல எங்க வீட்டு பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்குப் போய் வித்துட்டு வருவேன். போகப்போக ஒரு மாதிரி சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறம் நான் மாவு பாக்கெட்டோட கிளம்பினா போதும். சிலர், ‘இவங்க கிட்டே என்ன இல்லை? இப்படிப் பையைத் தூக்கிட்டுக் கிளம்பிடறா’ன்னு என் காதுபடவே பேசுவாங்க. என் சத்து மாவு நல்லா இருக்குன்னு பாராட்டு கிடைச்சதை எப்படி எடுத்துக்கிட்டேனோ, அப்படித்தான் இதையும் எடுத்துக்கிட்டேன். என் முயற்சிக்கு என் மொத்தக் குடும்பமும் ஆதரவாகவும் பக்கத் துணையாகவும் இருக்கு. எனக்கு என் திறமையில நம்பிக்கை இருக்கு. அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாம, யாரையும் ஏமாத்தாம செய்யற எல்லா தொழிலும் சிறந்த தொழில்தான்" என்கிறார் ஹேமமாலினி. அதில் உண்மையின் சாரம் தூக்கலாக இருக்கிறது.
படங்கள்: டி. கோபாலகிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago