பு
ள்ளிவிவரங்கள் எப்போதும் சலிப்பைத்தருபவை. ஆனால், சில புள்ளிவிவரங்கள் நமக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் தருபவையாக அமைந்துவிடும். தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2017-ல் தலைநகர் டெல்லியில் மட்டும் 2,049 பாலியல் வன்புணர்வு வழக்குகள் (நாள் ஒன்றுக்கு ஐந்துக்கு மேல்) பதிவாகியுள்ளன. தேசிய அளவில் நாள் ஒன்றுக்கு 94 பெண்கள் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 98 சதவீத குற்றவாளிகள், வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உறவினராகவோ அறிந்தவராகவோ இருக்கின்றனர்.
வன்மத்துடன் வெளிப்படும் காமம்
உலகில் மிக அதிக அளவில் பாலியல் வன்முறைகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் கேள்விகளை எழுப்புகின்றன. இந்திய ஆண்கள் ஏன் இப்படி, இவ்வளவு மோசமாகப் பெண்களிடம் நடந்துகொள்கிறார்கள்? அதன் காரணங்களைக் கண்டறிந்து வேரிலிருந்து சிகிச்சையை இனியாவது தொடங்க வேண்டாமா? இதை மாற்றுவதில் சட்டங்கள், அரசின் தலையீடு, தண்டனைகள் போன்றவற்றுக்கெல்லாம் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. அத்துடன், காமம் சார்ந்து இந்திய ஆண் மனம் எவ்விதம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வது அவசியம். அவர்களின் காம உலகத்து ரகசியங்களைப் பொதுவெளியில் கிழித்துப்போட்டு விவாதிப்பதும் காமம் ஏன் ஒரு மனநோய்க்கூறாக ஆண் மனதில் உருமாற்றம் பெற்றுள்ளது என்பதை ஆராய்வதும் வைத்தியத்துக்கான வழிகளைத் திறக்க உதவும்.
கருத்தடை சாதனங்களை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான டியூரெக்ஸ், 42 நாடுகளில் பாலியல் பழக்கவழக்கங்கள் குறித்து அண்மையில் ஓர் ஆய்வை நிகழ்த்தியது. மேற்கத்திய நாடுகளைப் போல ‘செக்ஸ் டாய்ஸ்’ பயன்பாடு இந்தியாவில் இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைவாகவே உள்ளது. இந்திய ஆண்களில் (சர்வே மேற்கொள்ளப்பட்ட 33 ஆயிரம் பேரில்) ஒரு கணிசமான எண்ணிக்கையினர் நேரடியான ஆண்-பெண் பாலுறவு இல்லாமலேயே வேறு பல பாலியல் இன்ப நடவடிக்கைகள் மூலமே தாங்கள் திருப்தியடைந்துவிடுவதாகக் கூறியுள்ளனர்.
அவற்றில் பரவலாகப் புழக்கத்திலிருப்பது சுய இன்பப் பழக்கம்.
பெண்களை நேரடியாகத் தொல்லை செய்யாமல், இம்சிக்காமல், பாலியல் வக்கிரங்களுக்கு உட்படுத்தாமல், இன்னும் சொல்லப்போனால் பெண்ணே தேவையில்லாமல் ஆண் மேற்கொள்ளும் பாலியல் நடவடிக்கையாக இது இருப்பதால் இதனால் கேடு ஏதுமில்லை என்று ஆண் மனம் கருதுகிறது. லேசான குற்ற உணர்வு வந்தாலும் தன்னைத் தானே மன்னித்துக்கொள்கிறது.
ரகசிய உலகில் உலவும் மனம்
பெண் தேவையில்லை என்றாலும் பெண்ணுடல் சார்ந்த பிம்பங்கள் இந்தப் பழக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க முடியுமா? உடன் வாழும் பெண்களுக்குத் தெரியாத ஆண்களின் ஓர் ரகசிய உலகம் நெடுங்காலமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.
நம் தந்தையர் காலத்தில், அச்சிடப்பட்ட பாலியல் புத்தகங்கள் அத்தேவையை நிறைவு செய்தன. படங்கள் அச்சிடும் தொழில்நுட்பம் வருவதற்கு முன்னால் ‘சரோஜாதேவி புத்தகங்கள்’ எனப்பட்ட மறைவாகப் புழங்கும் புத்தகங்கள் மலிவாகக் கிடைத்தன. என் உறவுக்காரப் பெரியவர் ஒருவர் இறந்த சமயத்தில் அவரது அலமாரியில் சேகரிப்பாய் இருந்த புத்தகங்களில் சரோஜாதேவி புத்தகங்களும் Rasvanti போன்ற ஆங்கில போர்ன் கதைப் புத்தக வரிசையும் அடுக்கடுக்காக இருந்தன. அவர் காலத்தில் அப்படியொரு ‘இனக்குழு’ இருந்துவந்திருப்பதன் சாட்சியாக அவர் தெரிந்தார். புத்தகங்களின் வருகைக்கு முன்னர் ஆண்கள் கூடி, வாய்ப்பேச்சிலேயே எல்லாவற்றையும் பேசித் தீர்த்த காலமும் உண்டு.
பிறகு போர்ன் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வந்தன. இப்போது, இணையத்தில் பெண்ணுடல் சார்ந்த பிம்பங்கள் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கின்றன. மார்ஃபிங் செய்து தனக்குப் பிடித்த பெண்ணின் முகத்தை வெட்டி ஒட்டிப் பயன்படுத்தும் கலாச்சாரம் ஒன்று ஆண்களிடம் வளர்ந்திருக்கிறது. அதனால் ஃபேஸ்புக்கில் புரொபைல் பிக்சராகக்கூடத் தன் படத்தை வைக்கப் பெண்கள் அஞ்சும் நிலை உருவாகி இருக்கிறது.
3G Moto e2 மாடலில்
1002 Mb 211 Kb 623 bytes
இன்னும் மிச்சமிருக்கிறது
ஆயிரமாயிரம் போர்ன் வீடியோக்கள்
அதில் இருக்கின்றன
அன்றைய தினம்
எதுவும் செய்யாமல் விட்டுவிட
மூன்றாவது கையேதும் அங்கில்லை
என்று கவிஞர் செல்வரங்கனின் கவிதை இதைப் பதிவு செய்கிறது.
ஆகவே இப்பிம்பங்களோடு இணைந்த ‘மாஸ்டர்பேஷ’னை ஆபத்தில்லாத பழக்கம் என்று தள்ளிவிட முடியாது. ஆணின் நிறைவேறாத வக்கிரமான காமக் கற்பனைகள் அரங்கேறும் இடமாக இது அமைகிறது. நேரடியாக ஒரு பெண்ணை இது பாதிப்பதில்லை என்றாலும் மறைமுகமாகப் பாதிக்கவே செய்கிறது.
தடைகளைப் பேசித் தகர்ப்போம்
இந்தப் புத்தகங்கள், திரைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை பாலியல் வக்கிரக் கண்ணாடி ஒன்றை ஆண்களின் மனக்கண்ணில் மாட்டிவிடுகின்றன. அந்தக் கண்ணாடியுடன் நிஜ உலகத்துச் சக மனுஷிகளையும் பார்க்கும் நிலைக்கு ஆண் மனம் வெகு இயல்பாக வந்து சேர்கிறது. முதல் பத்தியில் பட்டியலிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இவற்றுக்குமான தொடர்பைப் பேசியாக வேண்டும்.
நீண்ட காலம் இப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகும் மனத்திரையில் ஏற்கெனவே கொட்டிக்கிடக்கும் பெண்ணுடல்சார் பிம்பங்களுடன், அருகிலிருக்கும் இணையருக்கு மனதளவில் வஞ்சகம் செய்த குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். அதனால் முழு ஈடுபாட்டுடன் தம் இணையரோடு தாம்பத்திய வாழ்வில் ஈடுபட முடியாமல் குறுகிப்போகிறார்கள்; மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். முடிவில் பாதிக்கப்படுபவள் பெண்ணாகவே இருக்கிறாள். ஆகவே, இப்பழக்கம் எங்கே சுற்றினாலும் கடைசியில் பெண்ணைப் பாதித்தே தீருகிறது.
இப்படியான ஆணின் ஒவ்வொரு பாலியல் உலகத்துப் பக்கத்தையும் புரட்டிப் பொதுவெளியில் வாசிக்க வேண்டும். ஆணின் பாலியல் கற்பனைகள், அவற்றோடு இணைந்த இது போன்ற பழக்கங்கள், ஆண்-பெண் இயல்பாகப் பழக முடியாத சமூகத் தடைகள், அதனால் ஏற்படும் இயல்புக்கு மீறிய ஈர்ப்பு, வெறியாதல் என எல்லாவற்றையும் மனம்திறந்து பேசி விவாதிப்பது தீர்வை நோக்கிய முதல்படியாக அமையும். உடைத்துப் பேசாமல் மூடி மூடி வைப்பது காத்திருக்கும் வெடிமருந்து போல வெடிக்கிறது. பெண்ணுடல் தேசமெங்கும் சிதறுகிறது.
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர்,எழுத்தாளர்.
தொடர்புக்கு: tamizh53@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago