பக்கத்து வீடு: மேகன் அப்படித்தான்!

By எஸ். சுஜாதா

நண்பர்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தார் அந்த 11 வயதுச் சிறுமி. இடையில் பாத்திரம் தேய்க்கும் சோப்பு விளம்பரம். ‘அமெரிக்கப் பெண்கள் பிசுபிசுப்பான பாத்திரங்களைத் தேய்த்து சோர்ந்துபோகிறார்கள். எங்கள் சோப்பைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியாகப் பாத்திரம் தேய்க்கலாம்’ என்ற விளம்பர வரிகளைக் கேட்டதும் சிறுமி அதிர்ந்தார். நண்பர்களிடம் கேட்டார். “ஆமாம், பெண்கள்தானே சமையலறையில் பாத்திரங்களைத் தேய்க்கிறார்கள்” என்று பதில் வந்தது. அவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சிறுமியின் வெற்றி

பெண்கள் மட்டும் பாத்திரம் தேய்ப்பதாக எப்படி விளம்பரம் செய்யலாம் என்று அப்பாவிடம் கேட்டார். மகளின் கேள்வியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த தந்தை மகிழ்ச்சியடைந்தார். அமெரிக்காவின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் பெண்களுக்கு,இது தொடர்பாகக் கடிதம் எழுதச் சொன்னார். அன்று முதல் குடிமகளாக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கும் தொலைக்காட்சியைச் சேர்ந்த லிண்டா எல்லர்பீக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதினார். மூவரிடமிருந்தும் பாராட்டுக் கடிதம் வந்தது.

சோப்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதச் சொல்லியிருந்தார் ஹிலாரி. சிறுமி எழுதிய கடிதத்தைப் பார்த்து, பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற சர்வதேச நிறுவனம் தன் விளம்பரத்தையே மாற்றிவிட்டது! ‘பிசுபிசுப்பான பாத்திரங்களைத் தேய்த்து ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சோர்ந்துபோகிறார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறது எங்கள் சோப்பு’ என்று விளம்பரம் வெளிவந்தது.

27CHSUJ_MEGHAN_MARKLE.4right 

சிறுவயதிலேயே ஆண் – பெண் சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்து, மாற்றத்தை உண்டாக்கிய அந்தச் சிறுமிதான் மேகன் மர்கெல்.

அமெரிக்கத் தந்தைக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். 2011-ல் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றியதால் மக்களால் அறியப்பட்டார். அதே ஆண்டு நீண்ட கால நண்பரான தயாரிப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார். 2013-ல் விவாகரத்து பெற்றார். பெண்ணுரிமைப் போராட்டக்காரராகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தார்.

இன்றளவும்கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பல்வேறு விதங்களில் அமெரிக்கர்களால் மோசமாகவே நடத்தப்படுகிறார்கள். மேகனும் இதற்கு விதிவிலக்கல்ல.

“நான் ஆப்பிரிக்கர் என்பதால் அமெரிக்க கதாபாத்திரங்களைக் கொடுக்க மாட்டார்கள். நான் அமெரிக்கர் என்பதால் ஆப்பிரிக்கர் கதாபாத்திரம் தர மாட்டார்கள். நான் ஒரு கலப்பினப் பெண். நான் யார், எங்கிருந்து வந்தேன் என்று கேட்காதீர்கள். என் குரல் மிகுந்த நம்பிக்கையோடும் வலிமையோடும் ஒலிப்பதற்கு இந்தக் கலப்பினமே காரணம்” என்று அழுத்தமாகச் சொன்னார் மேகன்.

காதல் மலர்ந்தது

2016-ல் இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் அறிமுகம் கிடைத்தது. காதல் மலர்ந்தது. இரண்டே ஆண்டுகளில் டைம் பத்திரிகையின் ‘உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்!

ஆப்பிரிக்க அமெரிக்கர், விவாகரத்தானவர், ஹாரியைவிட மூன்று வயது பெரியவர், நடிகை என்றெல்லாம் ஒரு பகுதி இங்கிலாந்து மக்களால் தூற்றப்பட்டார் மேகன். ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற மோசமான விமர்சனங்களுக்கு ஹாரி பதில் கொடுத்த பிறகுதான் சர்ச்சை ஓய்ந்தது.

அரச குடும்பம் மேகனை ஏற்றுக்கொண்ட பிறகும் தலைமுடியை நேர்த்தியாக வைத்துக்கொள்ளவில்லை, அரச குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி ஆடை அணியவில்லை, இப்படி நிற்கிறார், அப்படி நடக்கிறார் என்றெல்லாம் சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டேயிருந்தனர். கடைசியாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்குக் கை கொடுக்கலாமே தவிர, கட்டிப்பிடிக்கக் கூடாது என்ற சர்ச்சை வந்தது. “நான் அமெரிக்கர். கட்டிப்பிடிப்பதுதான் எங்கள் கலாச்சாரம்” என்று பதிலடி கொடுத்தார் மேகன்.

மாற்றத்தின் அடையாளம்

முதன்முறையாக அரச குடும்பத்தின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆப்பிரிக்க அமெரிக்க பிஷப் பங்கேற்றார். ‘அன்பின் வல்லமை, அன்பின் ஆற்றலை நாம் கண்டறிய வேண்டும். அன்பின் மூலமே புதிய உலகத்தை உருவாக்க முடியும். அன்பைத் தவிர வேறு மார்க்கம் இல்லை’ என்ற மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை நினைவுகூர்ந்து, “அவர் சொன்னது சரிதான் என்பதை இந்தத் திருமணம் உணர்த்துகிறது” என்றார் பிஷப்.

சுற்றுலாப் பயணியாக 15 வயதில் இங்கிலாந்து அரண்மனை வாயிலில் நின்று படம் எடுத்துக்கொண்டபோது, ஒரு நாள் இந்த அரண்மனையில் வசிப்போம் என்று மேகன் நினைத்திருக்க மாட்டார்.

27CHLRD_MAGHAN_2

அமெரிக்கர்களால் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வழிவந்த ஒரு தாய்க்கு மகளாகப் பிறந்த மேகன், இன்று இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக மாறிவிட்டார்! இதன் மூலம் பெரிய மாற்றம் வரும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சிறு மாற்றத்துக்குக்கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நீண்ட காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனும்போது, இது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜாதி, மதம், இனம் என்று விடாப்பிடியாகத் தொங்கிக்கொண்டிருப்பவர்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தின் மாற்றத்தைக் கண்டாவது தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டால் அதுவே இந்தத் திருமணத்தின் வெற்றி!

“பெண்கள் தங்கள் குரலைக் கண்டுபிடிக்கத் தேவைஇல்லை. அவர்கள் அதைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தையும் மக்களைக் கேட்க வைப்பதற்கான முயற்சியும்தான் தேவை.

11 வயதிலேயே என்னால் சிறு மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். பெண்ணாக இருப்பதையும் பெண்ணியவாதியாக இருப்பதையும் பெருமையாக நினைக்கிறேன்” என்ற மேகன் மர்கெல்லின் வார்த்தைகள், அவர் வழக்கமான இளவரசிகளைப்போல் இருக்க மாட்டார் என்று சொல்கின்றன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்