பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று இமானே கெலிஃப். ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியாவின் தியாரே (Tiaret) பகுதியைச் சேர்ந்தவர் இமானே கெலிஃப். பெண்கள் மீதான அடக்குமுறைகள் முழுமையாக நீங்கிவிடாத அப்பகுதியில் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவரும் குத்துச்சண்டை போட்டிகளின் மீது இமானேவின் கவனம் திரும்புகிறது. அல்ஜீரிய மகளிர் குத்துச்சண்டையின் முகமாகத் தான் மாற வேண்டும் என அவர் விரும்புகிறார். பிற்போக்குவாதிகளின் கடுமையான விமர்சனங்களைக் கடந்து வறுமையிலும் இமானேவின் குடும்பம் அவரது கனவுகளுக்குத் துணையாக நின்றது. கடும் பயிற்சிகளுக்குப் பிறகு தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்து, சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாகச் செய்தித்தாள்களில் இமானேவின் பெயர் இடம்பெறத் தொடங்கியது.
இந்த அடையாளத்தைத் தாங்கியபடி பாரிஸ் ஒலிம்பிக்கில் அல்ஜீரியாவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்கிற கனவில் நுழைந்தவருக்குக் கடுமையான சவால்கள் காத்திருந்தன. குத்துச்சண்டை களத்தைக் காட்டிலும் வெளியுலகில் நிறைய வசைகளுக்கும் கிண்டல்களுக்கும் இமானே உள்ளானார். ‘இமானே கெலிஃப் பெண்ணல்ல. அவர் ஓர் ஆண்’ என்று தொடர்சியாக விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. எனினும் எதற்கும் செவி கொடுக்காது, கடுமை யாக விளையாடி இறுதிப் போட்டி வரை சென்றார்.
என்ன நடந்தது?
பாரிஸ் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப் பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்றுள்ள இமானே கெலிஃப், தனது முதல் போட்டியில் இத்தாலியின் ஏஞ்சலினா கரினியை எதிர்கொண்டார். போட்டி ஆரம்பித்த 45 நொடிகளில் இமானேவின் வலுவான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஏஞ்சலினா தோல்வியைத் தழுவினார். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆட்டத்தின் முடிவில் கைகுலுக்க மறுத்த ஏஞ்சலினா, இமானேவின் ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து ஊடகங்களிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தான் இதற்கு முன்னர் இத்தகைய தாக்குதலைக் களத்தில் எதிர்கொண்டதில்லை என இமானேவின் பாலினத்தை விமர்சிக்கும் வகையில் பூடகமாகச் சொன்னார். இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் சர்வதேச அளவில் பூதாகரமானது.
» கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயில் அருகே பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு
» தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
ஒலிம்பிக்கில் தனது முதல் வெற்றியை இமானே கொண்டாட முடியாத அளவுக்கு அவரது பாலினத்தை விமர்சித்துக் கடுமையான சொற்கள் வீசப்பட்டன. குறிப்பாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி, எலான் மஸ்க், ஜே.கே ரவுலிங் உள்ளிட்டோர், விதிகளுக்கு உள்பட்டு இமானே போட்டியில் பங்கேற்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். ஆனால், மறுபக்கம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இமானேவுக்குத் துணைநின்றது. பரிசோதனைகளில் தகுதிபெற்றதன் அடிப்படையிலேயே இமானே விளையாட அனுமதிக்கப்பட்டார் என அதன் தலைவர் தாமஸ் பாஹ் விளக்கமும் அளித்தார்.
முதல் முறையல்ல
வீராங்கனைகள் பாலினச் சர்ச்சைகளுக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. இந்தியத் தடகள வீராங்கனைகள் சாந்தி, டுட்டி சந்த், தென் ஆப்பிரிக்கத் தடகள வீரங்கனை காஸ்டர் செமன்யா, உகண்டாவின் அண்ட் நெகேசா போன்ற பலரும் விளையாட்டு அரங்கில் பாலினம் சார்ந்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
பொதுவாக, இவ்வீராங்கனைகளுக்குப் பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவாகவும், ஆண்களுக்குச் சுரக்கும் டெஸ்டோஸ்டீரோன் சற்றுக் கூடுதலாகவும் இருக்கும். குரோமோசோம் மாறுபாடு காரணமாக இத்தகைய மாற்றம் நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், டெஸ்டோஸ்டீரோன் கூடுதலாக இருப்பதால் இவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கூடுதல் பலம் கிடைக்கிறது என எழும் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீராங்கனைகள் மீது தொடுக்கப்படும் இத்தகைய பாலின ரீதியான தாக்குதல்கள் மோசமான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.
தங்கப் பதக்கமே பதில்
2023இல் இந்தியாவில் நடந்த மகளிருக்கான உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலினத் தகுதித் தேர்வில் இமானே கெலிஃப் தோல்வி அடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இமானேவுக்கு அதில் வெற்றி கிட்டவில்லை. ஆனால், அப்போது இமானே மீது இத்தகைய பாலின ரீதியான தாக்குதல்கள் நிகழவில்லை. அரை இறுதியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிறகு இமானே, “ஒலிம்பிக்கில் இந்த நிலைக்கு வர நிறைய உழைத்திருக்கிறேன். உலக மக்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். உங்கள் கிண்டல்கள் வீரர்/வீராங்கனைகளின் ஆன்மாவைச் சிதைத்துவிடும்; அவர்களது எண்ணங்களை அழித்துவிடும். விளையாட்டு வீரர்கள் மீதான கிண்டல்களை நிறுத்துங்கள். எனது வெற்றியை அனைத்துப் பெண்களுக்கும் சமர்பிக்கிறேன்” எனப் பேசினார். ஒரு பெண் உயர்ந்த நிலையை அடையும்போதெல்லாம் அவளது பாலினம் சார்ந்த சந்தேகத்தை எழுப்புவது பண்பட்ட செயல் அல்ல என்பதைத் தன் பேச்சின்மூலம் இந்த உலகுக்குத் தெரிவித்திருக்கிறார் இமானே.
இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் இமானே, எட்டு ஆண்டுகாலக் கடும் உழைப்புக்கான பலனைப் பெற்றிருக்கிறார். தன் மீது கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தத் தங்கப் பதக்கமே பதில் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முதல் அல்ஜீரிய வீராங்கனை என்கிற சாதனையையும் இமானே படைத்திருக்கிறார். எது வந்த போதும் தளராத உறுதி இருந்தால் இலக்கை அடையலாம் என்பதை இமானே கெலிஃப் நிரூபித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago