எதிர்பாலினத்தின் மீதான அன்பையும் காதலையும் சொல்வதற்கே சாதி, மதம், மொழி எனப் பல தடைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட சமூகச் சூழலில் தன்பால் ஈர்ப்புள்ளவர்களும் இருபால் ஈர்ப்புள்ளவர்களும் தங்களது பாலியல் விருப்பத்தை மனதுக்குள் பூட்டிவைத்தே நாட்களைக் கடத்துகின்றனர். இன்னும் பலர் குடும்ப உறவுகளுக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டு பெயரளவுக்குத் திருமணம் செய்துகொள்கின்றனர். பிறகு தங்களது விருப்பத்தை மறைமுகமாக நிறைவேற்றிக்கொண்டு, ஊரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகாமல் இருக்க இரட்டை வாழ்க்கை வாழ்வார்கள்.
எதிர்பால் ஈர்ப்போடு தன்பால் ஈர்ப்பும் ஒருங்கே கொண்டவர்கள் இருபால் ஈர்ப்புள்ளவர் (bisexual) என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தம் பாலியல் தேவைகளுக்கு மட்டுமே பிறரைப் பயன்படுத்துவார்கள் என்று பலர் தவறாக நினைப்பதாக இருபால் ஈர்ப்புள்ளவர்கள் சொல்கின்றனர். அன்பும் நேசமும் காதலும் எங்களுக்கு மட்டும் கிடையாதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
தனிப்பட்ட ஒருவரது பால் ஈர்ப்பின் மீது சமூகம் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது; விதிக்கவும் கூடாது. அப்படி இருக்கும்போது இரண்டு பாலினத்தவரிடமும் ஈர்ப்பு கொள்ளும் இருபால் ஈர்ப்புள்ளவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. இந்தக் கோரிக்கையை முன்னிறுத்திச் சேர்ந்திருப்பவர்களே ஜல்ஜித் – பின்ஸி இணையர்.
கணவரும் அவர் தோழியும்
“திருமணம் என்னும் பெயரில் ஆண், பெண்ணை அடிமையாக நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை சுதந்திரமான, தன்னிச்சையான ஒரு பெண்ணே எனக்கு இணையாக வர வேண்டும் என நினைத்தேன்” என்கிறார் பில்ஜித். அந்த நினைப்புக்குத் தன் வருகையால் வலு சேர்த்தார் பின்ஸி.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரத்தில் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்தபோது பின்ஸியை அவர் சந்தித்தார். பின்ஸியும் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட். இருவரும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பின்ஸியின் வீட்டில் விரும்பினர்.
“சட்டப்படி திருமணம் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர் பார்ட்னர்தான். அவரது சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன். அவரும் அப்படியே. குழந்தைகள் பற்றி யோசிக்கவில்லை. எதிர்காலத்தில் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் எண்ணமும் இருக்கிறது. 2012-ல் திருமணம் செய்துகொண்டோம். அவர் பைசெக்ஷுவலாக இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒருமுறை என் தோழி வீட்டுக்கு வந்திருந்தார்.
அவர் மீது என் மனைவிக்கும் என் மனைவி மீது தோழிக்கும் ஈர்ப்பு இருப்பதை நான் கவனித்தேன். அதை என் மனைவியிடமும் கேட்டு உறுதிசெய்து கொண்டேன். அதன் பிறகுதான் என் மனைவி அவரது ஃபேஸ்புக் பதிவில் ‘பீயிங் எ பைசெக்ஷுவல் ஐ எம் பிரவுட்’ என்று ஒரு பதிவு போட்டார். அதைப் பார்த்ததும் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அவரது செயலைக் கடுமையாகக் கண்டித்தனர்.
உங்களுக்குள் தாம்பத்திய உறவு சரியில்லையா, நல்ல மருத்துவரைப் பாருங்கள் என்றெல்லாம் வித விதமான அறிவுரைகள் வந்துவிழுந்தன. என் ஃபேஸ்புக் பக்கத்திலும் நிறைய கண்டனங்கள் வந்தன. ஆனால், சமூகத்துக்காக நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை” என்கிறார் ஜல்ஜித்.
நம்மை அறிவோம்
“நான் இருபாலினத்தவர் மீதும் ஈர்ப்பாக இருப்பதை ஏதோ என் தவறு போலவும் சமூகத்துக்கு எதிராக நான் இருப்பதாகவும் உணர்ந்தேன். எனக்கு ஏதோ பிரச்சினை இருப்பதாகவும்கூட நினைத்தேன். நாளாக நாளாகத்தான் இதில் என் பிழை எதுவும் இல்லை என்பதும் நான் வித்தியாசமானவள் இல்லை என்பதும் புரிந்தது.
என் பார்ட்னருக்கு இந்த விஷயத்தில் இருக்கும் தெளிவும் ஆதரவும் எல்ஜிபிடி சமூகத்திற்கான என்னால் முடிந்த பணிகளைச் செய்யத் தூண்டியது. தற்போது திருவனந்தபுரத்திலிருக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கும் பொதுச் சமூகத்துக்கும் பாலமாக இருக்கும் தன்னார்வ அமைப்பில் துணைச் செயலாளராக இருக்கிறேன்.
நம்மைப் பற்றிய தவறான எண்ணங்களை மனதில் ஏற்படுத்திக்கொண்டு தாழ்வு மனப்பான்மையில் புழுங்கக் கூடாது. எல்லா மனிதர்களையும் போலத்தான் நாமும் என்னும் புரிதலை மாற்றுப் பாலினத்தவர்கள் வேண்டும். நமக்கு நாமே போட்டுக்கொண்டிருக்கும் தடைகளைத் தகர்த்தாலே போதும், நாம் முன்னேறிவிடலாம். இதுபோன்ற ஆறுதல் வார்த்தைகளை உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் மாற்றுப் பாலினத்தவர்களிடம் சொல்லி அவர்களைத் தேற்றுகிறேன்” என்கிறார் பின்ஸி.
அபத்த புரிதல்கள்
எல்லோருடனும் உறவு வைத்துக்கொள்ளத் துடிப்பீர்களா? அழகான பெண்களைக் கண்டால் அவர்கள் மீது பாய்ந்துவிடுவீர்களா?
- இது போன்ற அபத்தக் கேள்விகள் தங்களை நோக்கிப் பாயும் என்கிறார் ஜல்ஜித்.
“ஆனால், அவற்றில் துளியும் உண்மையில்லை. ஆண், பெண் என என் பார்வையில் எந்த வித்தியாசமும் இல்லை. அதேநேரம், ஒருவர் மீதான ஈர்ப்பு இயல்பானதாக இருக்க வேண்டும். எப்படி ஆணையும் பெண்ணையும் மெய்யாக நான் நேசிக்கிறேனோ அதைப் போல” என்கிறார் ஜல்ஜித்.
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago