கவிதை அவ்வளவு பிரக்ஞைபூர்வமான செயல்பாடு கிடையாது. கனவுகளில் காட்சிகள், மனிதர்கள் நழுவுவதுபோன்றதுதான் கவிதைச் செயல்பாடு. அதில் வெகுளித்தனம் இருக்க வேண்டும். அதனால் தீர்க்கமான கோட்பாட்டாளர்களாலும் அறிஞர்களாலும் உணர்வுபூர்வமான கவிதையை எழுத முடிந்ததில்லை. கவிதை உணர்வுபூர்வமானதுதான். அதற்குப் பதற்றம், கோபம், கழிவிரக்கம் எல்லாம் உண்டு.
அதனால் அதை அவ்வளவு செயற்கையாக உருவாக்கிவிட முடியாது. இன்னும் சொன்னால் கவிதை இயங்குவதே இம்மாதிரியான உணர்வுகளின் அச்சில்தான். அப்படியான உணர்வுபூர்வமான கவிதைகளை எழுதியவர் கவிஞர் இளம்பிறை.
எண்பதுகளின் இறுதியில் கவிதை உலகுக்கு அறிமுகமான இளம்பிறை, 90-களில் உருவான பெண்ணியக் கவிதையியலுக்கான ஒரு முன்மாதிரி எனலாம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்க் கவிதைக்குப் புதிய படைப்புலங்களும் அறிமுகமாகிவந்தன.
தனி மனித அனுபவமாக உள்ளே ஒடுங்கியிருந்த கவிதையை வெளிக்குள் கொண்டுவந்தவர்களுள் இளம்பிறையும் ஒருவர். அசலான நிலக் காட்சிகள், மனிதர்கள், அவர்களின் சுகதுக்கங்கள் எனக் கவிதையை பெரிய திரையில் வரைந்துகாட்டினார் இவர்.
இளம்பிறையின் கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது மொழியள விலும்கூட இந்த வெகுளித்தனம் உண்டு.
‘வயசு பத்தாகுமுன்னே
வயலுக் கிழுத்தவளே
வாடி வயலுக்கென
வம்பு செஞ்ச எந்தாயே’
‘நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்ற தொகுப்பிலுள்ள இந்தக் கவிதையை அவரது இந்தப் பண்புக்கான உதாரணமாகச் சொல்ல முடியும். தனது தாயைப் பற்றிச் சொல்லும்போது அவளது இயல்பான பலவீனங்களுடன் சொல்கிறார் இளம்பிறை. இதுதான் வெகுளித்தனம், பாசாங்கற்ற தன்மை. அதைச் சொல்வதற்கான மொழியைத் தேர்வுசெய்வதிலும் இந்தக் கவிதையில் ஒரு பாசாங்கு உள்ளது.
கிராமத்து சொல்வழக்குபோல் கவிதையை வெளிப்படுத்தியுள்ளார். ‘முதல் மனுசி’ தொகுப்பிலுள்ள ஒரு கவிதை ‘உன் கபடங்களோடு சேர்த்தே அணைத்துக்கொள்கிறேன்’ என்கிறது. இதில் தாய்க்குப் பதில் துணை. ஆனால், இந்தக் கவிதை மொழி ஸ்திரப்பட்டுவிடுகிறது. தாய்க்கான கவிதையில் மொழி பாட்டு மாதிரி சிறு கொண்டாட்டமாக இருக்கிறது. தற்காலத்துக்கும் கடந்த காலத்துக்குமான வித்தியாசமாகவும் இதைப் பார்க்கலாம்.
iஉறவின் முரண்
தனது அனுபவங்களைச் சொல்வதற்கு அப்பாற்பட்டு இளம்பிறையின் கவிதைகள் அதன் வழியாக ஒரு சமூகச் சித்திரத்தை உருவாக்க முயல்கின்றன. தன் வாழ்க்கைத் துயரம், புறக்கணிப்பு ஆகியவற்றைக்கொண்டு சமூகத்தின் அவலத்தைச் சொல்கிறார். ஆனால், அதை வெடிப்பாக அல்லாமல், எதிர்கொண்ட சாதாரண மனுஷியின் அனுபவமாகப் பகிர்ந்துகொள்கிறார். ஆண்-பெண் உறவுக்குள் இருக்கும் முரண்பாடுகளைச் சித்தரிப்பதும் அவரது கவிதையின் முக்கியமான பணியாக வெளிப்பட்டுள்ளது.
‘திமிறிக்கொண்டிருக்கும் நம்பிக்கையின் வாலையோ தும்பையோ தொட்டுக்கொண்டாவதிருப்போம்’ என்கிறது அவரது ஒரு கவிதை. ஆனால் மனரீதியில் இந்தப் பிரச்சினைகளை அணுகுவதில்லை இளம்பிறையின் கவிதைகள். ஆணாதிக்கச் சமூக நிலையில் பெண்ணாக இருப்பதன் நிதர்சனத்தை வெளிபடுத்துவதே அதன் பணியாக இருக்கிறது. அதில் மூர்க்கம் இல்லை. ஆனால், வலிமை இருக்கிறது.
கூண்டிலிருப்பதே நாகரிகம்யென
புலியும் - கிளியுமே
எண்ணிக் களிக்கையில்
நான் மட்டும் தனியாக
என்ன செய்வதாம்?
என்கிறது அவரது ஒரு கவிதை.
கிராம வாழ்க்கையின் சிதறல்
ஒருவேளை 90-களுக்குப் பிறகு உரத்த பெண்ணியக் கவிதைகளுக்கான முன்மாதிரியாக இளம்பிறையின் கவிதைகள் இருந்திருக்கலாம். இளம்பிறையின் கவிதைகள் நிலத்தின் பிடிபாடுகொண்டவையாக இருக்கின்றன. இது அவரது மற்றுமொரு பண்பு. அதைச் சொல்லும் அவரது கவிதைக்குள் ஆயிரம் நாவுகள். அதனால் தான் அதைச் சொல்வதற்கான வடிவமாக நாட்டார் பாடல்களின் அம்சத்தை எடுத்துக்கொள்கிறார்.
ஆனால், இந்தக் கவிதைகளில் அவர் கிராம வாழ்க்கையின் கொண்டாட்டத்தை மட்டும் சொல்லவில்லை. ஒரு சிறு பெண் தன் தாயுடன் முதலாளி வீட்டில் தென்னம்பிள்ளைகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கிளம்புகிறாள். தாயும் மகளும் குடங்குடமாகத் தண்ணீர் சுமந்து ஊற்றுகிறார்கள்.
அப்பா செம்பில் தேநீர் வாங்கிவருகிறார். தடுமாறிய சுமையை இறக்கி அரை அரை குடமாய் ஊற்றி சீக்கிரம் செல்லலாம் என்கிறாள் மகள். தாய், மகளை இருக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் செல்கிறாள். மகளும் மனசு கேட்காமல் அடுத்த நடைக்குச் சேர்ந்துகொள்கிறாள். இதற்கிடையில் ஒரு காரியம் நடந்திருக்கிறது.
சின்ன முதலாளி, இந்தச் சிறுமியைக் கண் சிமிட்டி அழைத்திருக்கிறான். இத்துடன் கவிதையை முடிக்கிறார். இதற்குள் கிராமம் என வியக்கப்படும் இடத்தின் சமூக அவலத்தைச் சொல்லிவிடுகிறார். தனக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியைச் சொல்லக்கூட அவளால் முடியவில்லை.
ஆணாதிக்கச் சமூகத்தை, சமூக அவலங்களை, ஆண்-பெண் உறவு முரண்களை என எதைச் சித்திரிப்பதாக இருந்தாலும் அதை எதிர்கொண்ட அனுபவத்துடன் சொல்கிறார். அதனால் அவை பாசாங்கற்று யதார்த்தமாக இருக்கின்றன. உரத்துச் செல்வதைக் காட்டிலும் இந்த யதார்த்தமான கூற்று கவிதைகளுக்குக் கூடுதல் வலுச்சேர்க்கிறது; புரட்சிசெய்கிறது. இந்த யதார்த்தத்தின் வழியே சிக்கல்களை அணுகுபவை இளம்பிறையின் கவிதைகள் என வரையறுக்கலாம்.
கண்ணாடி
வகிடெடுக்கவும்
பொட்டு வைத்துக்கொள்ளவும் போதும்
கை தவறி நழுவவிட்ட
கண்ணாடியின் பெரியதுண்டு.
வரும்போதெல்லாம்
சொல்லாமல் இருப்பதில்லை
பக்கத்து வீட்டு மருமகள்
“ஒடஞ்ச கண்ணாடில
மொகம் பாத்தா குடும்பத்துக்காவாது”
ஆகாமல் போவதற்கு
ஒன்றுமில்லை என்பதறிந்தும்
சரி என்னதான் இருக்கிறது
எனக்கும் அவளுக்கும் பேசிக்கொள்ள
இருந்துவிட்டுப் போகட்டுமே
ஓர் உடைந்த
கண்ணாடித் துண்டாவது.
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: jayakumar.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago