1980-ல் சோவியத் யூனியன் (ரஷ்யா) தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு 76 இந்தியர்கள் சென்றனர். அவர்களில் 16 வயதுப் பெண் ஒருவருக்கும் இடம் கிடைத்தது. தடகளத்தில் மலைகள் மோதிய அந்த ஓட்டப் போட்டியில், இறுதிச் சுற்றுவரை முன்னேறினார். பதக்கம் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், முதல் இளம் பெண் என இரண்டு சாதனைகளுக்குச் அந்தப் பெண் சொந்தக்காரரானார்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தடம் பதிக்கும் நோக்கத்தோடு அந்தப் பெண் பங்கேற்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இறுதிச் சுற்றில் எப்படியும் அவர் பதக்கம் வெல்வார் என நாடே காத்திருந்தது. ஆனால், 0.01 விநாடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
நூலிழையில் பதக்க வாய்ப்பை அவர் தவறவிட்டிருந்தாலும், அந்தத் தோல்வி அவரை சர்வதேச அளவில் உயரத்துக்குக் கொண்டுசென்றது. அவர், ‘இந்தியாவின் தங்க மங்கை’, ‘ஆசிய தடகள ராணி’, ‘பையொலி எக்ஸ்பிரஸ்’ எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் பி.டி. உஷா. 1980-90-களில் தடகள விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒரே இந்திய வீராங்கனை.
06CHLRD_P.T_USHAஉழைப்பால் பெற்ற வெற்றி
‘பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா’ என்ற பெயரில் கோழிக்கோடு பையொலி கிராமத்திலிருந்து தொடங்கிய அவரது தடகளப் பயணம் மிக நீண்டது. அதில் அவர் சந்தித்த இமாலய வெற்றிகள், எதிர்பாராத தோல்விகள், வலி மிகுந்த தருணங்கள், பீறிட்ட சந்தோஷங்கள் என ஒவ்வொன்றும் பல கதைகளைச் சொல்லும். இந்தியாவின் தடகள முகமாக அந்தக் காலகட்டத்தில் கோலோச்சிய பி.டி. உஷா, விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணியில் அவர் சிறுவயதிலிருந்து தொடங்கிய உழைப்பும் அடங்கியிருக்கிறது.
கண்ணூரில் 1976-ல் விளையாட்டுப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்கள். அந்தப் பள்ளிக்கு கோழிக்கோடு மாவட்டப் பிரதிநிதியாகத் தேர்வானார் பி.டி. உஷா. அப்போது அவருக்கு 12 வயதுதான். தடகளத்தில் புயல் வேகத் திறமையை வளர்த்துக்கொண்ட அவர், முதன்முதலாக 1977-ல் தேசிய அளவிலான தடகளப் போட்டியில்100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு, தன்னுடைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார்.
அன்று தொடங்கிய பி.டி. உஷாவின் மின்னல் வேக ஓட்டம் இருபது ஆண்டுகளில் அவரைத் தடகள உலகில் பிரபலமாக்கியது; ஆசிய அளவில் ஓட்ட ராணியாக அழகு பார்த்தது. ‘இந்தியா தங்கப் பதக்கம் ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே...’ என பி.டி. உஷாவை மனதில்கொண்டு திரைப்பாடலும் எழுத வைத்தது.
ஆசிய சாதனை
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும் ஆசிய அளவில் பி.டி. உஷா முடிசூடா ராணியாகவே விளங்கினார். 1982 தொடங்கி 1989 வரை ஓட்டத்தில் பதக்கங்களைக் குவித்தார். டெல்லியில் 1982-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கால் வலியுடன் பங்கேற்று 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்று முத்திரை பதித்தார். பி.டி. உஷா பெற்ற முதல் சர்வதேசப் பதக்கங்கள் இவைதாம். பின்னர் குவைத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
1986-ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி அவரை மேலும் உயர்த்தியது. அந்தத் தொடரில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்து ஓட்டங்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பி.டி.உஷா, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தார். ஒட்டுமொத்தமாக 1983 முதல் 1989வரை பல்வேறு சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற பி.டி. உஷா, 17 தங்கப் பதக்கங்களை வென்று ‘தங்க மங்கை’ என்று தன்னை அழைப்பதற்கு நியாயம் சேர்த்தார். தடகளத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார்.
நம்பிக்கை நட்சத்திரம்
1991-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் முக்கியமானது. அந்த ஆண்டுதான் அவர் திருமணம் செய்துகொண்டார். மத்திய தொழில் படை இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன் அவரது வாழ்க்கைத் துணையானார். திருமணத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தடகள பக்கமே அவர் எட்டிப் பார்க்கவில்லை. பி.டி. உஷா இனி மைதானத்துக்கு வரப்போவதில்லை என்று நினைத்த வேளையில், ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் களத்தில் வந்து நின்றார். சர்வதேச அளவில் தடகளத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று தன் கணவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகக் களத்துக்குத் திரும்பினார்.
மீண்டும் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். குறிப்பிடும்படியான பல வெற்றிகளை 1998-ல் குவித்தார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் நான்கு பிரிவுகளில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றார். ஒட்டுமொத்தமாக தடகளத்தில் மட்டும் 101 சர்வதேசப் பதக்கங்கள் பெற்று சாதனையிலும் சதமடித்திருக்கிறார். தடகளத்தில் இந்த அளவுக்குச் சாதனை படைத்த வீராங்கனைகள் இந்தியாவில் வேறு எவரும் இல்லை.
23 ஆண்டுகள் ஓயாமல் ஓடிய அவரது கால்கள் 2000-ம் ஆண்டோடு ஓய்வுபெற்றன. தடகளப் பயணத்தில் அவர் பெற்ற விருதுகளுக்கும் பஞ்சமில்லை. அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, ‘கிரேட்டஸ் அத்லெடிக் உமன்’ விருது, ஆசியாவின் சிறந்த அத்லெடிக் விருது, தங்கக் காலணி விருது எனப் பல விருதுகளைப் பெற்றார். தடகள விளையாட்டின் முகமாக இருந்த அவர், இந்தியாவில் ஏராளமான இளம் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் மாறினார். அவரைப் பின்பற்றி இளம் பெண்கள் ஆர்வத்துடன் தடகளத்தில் காலடி எடுத்துவைத்தனர். இன்றும் பி.டி. உஷாவை மனதில்கொண்டு தடகளத்துக்கு வரும் பெண்கள் ஏராளம். ஏனென்றால், தடகளத்தில் அவர் பதித்த தடம் அழுத்தமானது.
தற்போது 53 வயதாகும் பி.டி. உஷா ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். கோழிக்கோட்டில் ‘உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்’ என்ற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, இளம் வீராங்கனைகளுக்குத் தடகளப் பயிற்சி அளித்துவருகிறார். டிண்டு லூகா, ஜெஸ்ஸி ஜோசப், சஹார்பனா சித்திக் போன்றோர் இவரது மாணவிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்.
(வருவார்கள், வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago