எசப்பாட்டு 35: பெண்களைப் பிணைத்திருக்கும் காதல்

By ச.தமிழ்ச்செல்வன்

றிவொளி இயக்கம் நடந்துகொண்டிருந்த நாட்கள் அவை. உள்ளூர் சமூகத்தின் ஈடுபாடு அந்த இயக்கத்துக்குத் தேவை என்பதால் அந்தந்தப் பகுதியில் சமூகப் பணியாற்றுவோர், படித்த பெண்கள், ஆண்கள் எல்லோரையும் அவ்வப்போது அழைத்து அறிவொளியில் கற்கும் மக்களிடம் பேச வைப்போம். அப்படியொரு முறை நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் ஒரு கிராமத்தில் மகளிர் மன்றத் தலைவி ஒருவரை அழைத்துப் பேச வைத்தோம்.

பெரும்பாலும் செங்கற்சூளையில் வேலைபார்க்கும் பெண்கள் படிக்கும் மையம் அது. அறிவொளியில் படிக்கிற அந்தப் பெண்களுக்கு ‘நல்லொழுக்க’ங்களைப் போதிக்க வேண்டும் என்ற ‘நல்லெண்ண’த்துடன் வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பது எப்படி என்பதில் தொடங்கிப் பலவற்றையும் அவர் எடுத்துரைத்தார்.

கணவனைத் தொழ வேண்டுமா?

அவ்வுரையின் முக்கியப் பகுதியாக ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை’ என்ற குறளை முன்வைத்துக் காலையில் எழுந்ததும் தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு, படுத்திருக்கும் கணவனின் கால்களைத் தொட்டு வணங்கி, வேலைகளைத் தொடங்கினால் நம்ம வாழ்க்கை நல்லாருக்கும் என்று அவர் சொன்னார். அதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் இதைக் கேட்டதும் வெடித்துச் சிரித்துவிட்டார்கள்.

அந்தச் சிரிப்பு பேசியவருக்குக் கோபமூட்டியது. “எதுக்குச் சிரிக்கிறீங்க? அதனாலதான் நீங்க வாழ்க்கையில கஷ்டப்படுறீங்க” என்று ஆவேசத்துடன் பேச ஆரம்பித்துவிட்டார். சிறப்புரைக்காகப் போயிருந்த நான் அவரையும் கூட்டத்தினரையும் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

அந்நேரத்தில் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைத் தேடி அவருடைய கணவர் வந்துவிட்டார். வீட்டைப் பூட்டி, சாவியைக் கையோடு அப்பெண் கொண்டுவந்திருந்ததால் தேடி வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே அந்தப் பெண், “யோவ்… கதையைக் கேளும். விடியுமின்னே எந்திரிச்சு உம்ம காலைத் தொட்டுக் கும்பிடணுமாம். ராத்திரி போதையைப் போட்டுட்டுக் குப்புற விழுந்தா தலை எங்கே கால் எங்கேன்னு தெரியாமக் கிடப்பீரு. உம்ம காலை எங்கிட்டுப்போயி நான் தேடறது” என்று சொல்லியபடி, இருந்த இடத்திலிருந்து சாவியைத் தூக்கிப்போட்டார்.

அதைக் கப்பென்று பிடிக்க முடியாமல் கீழே விழுந்த சாவியை எடுத்துக்கொண்டு அவர் ஏதோ முனகியபடி கிளம்பினார். “குடிச்சுப்போட்டு ஊர்ப் பொது மடத்திலேயோ சத்திரத்திலேயோ காளியம்மன் கோயில் வராந்தாவிலேயோ ராத்திரி கிடந்துவிட்டு இப்ப பன்னிரண்டு மணிக்குத்தான் விடிஞ்சிருக்குன்னு வாராரு அய்யா… வீடுன்னு விளக்கேத்தவும் முடியல, விளங்காதவன்னு விட்டுத் தொலைக்கவும் முடியல” என்று தானாகப் பேசிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.

பண்பாட்டு மோதல்

இது மறக்க முடியாத ஒரு காட்சி. இரண்டு வர்க்கங்களின் பண்பாட்டு மோதலின் குறியீடாக இக்காட்சியைப் பார்க்கலாம். படித்த நடுத்தர வர்க்கத்துப் பெண்களைவிட உழைக்கும் பெண்களுக்குக் கூடுதல் சுதந்திரம் இருப்பது வெளிப்படுகிறது. அவனைச் சார்ந்து அவள் வாழவில்லை. அந்தச் சுதந்திரமே அவள் அவனைத் தயக்கமின்றி விமர்சிக்கும் தைரியத்தை அளிக்கிறது. அவன்தான் அவளைச் சார்ந்து வாழ்கிறான்.

அவனால் குடும்பத்துக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. ஆனாலும் அவனை விட்டொழிக்க அவளால் முடியவில்லை. அவளுக்கும் அவனுக்கும் இடையில் அன்பு, காதல் என்பதெல்லாம் இயங்குமா? ஆம் எனில், அது என்ன வடிவத்தில் என்ன அளவில் இருக்கும்?

இரண்டு கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. இரு வேறு அரசியல் மற்றும் வாழ்க்கைப் பின்புலத்தைச் சேர்ந்த இரு கவிஞர்கள் எழுதியவை அவை:

நேசிக்காமல் இருந்ததில்லை

நேசித்ததைத் தொடர்ந்து

நேசித்ததும் இல்லை

நேசிக்கத் தொடங்கியவர்

நேசித்தவராகவே இருப்பதும் இல்லை

நேசிக்காமல் வாழவும் தெரியவில்லை

- கவிஞர் கனிமொழி

விலகி விலகியே சென்றோம்

விலக வேண்டும் என்ற விருப்பத்தோடும்

விலக முடியாத துக்கத்தோடும்

- கவிஞர் பாலபாரதி

சாவியை விட்டெறிந்த பின் அந்தக் கிராமத்துப் பெண்னின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளும் இவ்விரு கவிதைகளும் ஒரே உணர்வைப் பேசுகின்றன. நேசம் கொண்டு வாழ்ந்து தொலைக்க வேண்டிய யதார்த்தத்தையும் துக்கத்தையும் பேசுகின்றன. நேசம் கொண்ட பிறகும் துக்கமாகும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? ஆனால், இத்தகைய துக்கமும் இருண்மை மனநிலையும் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படுகின்றன.

விலகுவதைத் தடுப்பது எது?

ஏன் இது நேர்கிறது? விலக முடியாமல் எது கட்டுப்படுத்துகிறது? ஊரார் பழிச்சொல் குறித்த அச்சமா? பெண் மனம் திருமணம் என்ற பந்தத்தை விட்டொழிக்க முடியாத உளவியல் சேற்றுக்குள் சிக்கிக்கொண்டதா?

எங்கல்ஸ் தன்னுடைய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலில் காதல் என்பதன் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆழமாக விவாதித்துள்ளார்.

“காதல் என்பது ஒருவன்பால் அல்லது ஒருத்தியின்பால் செலுத்தப்படுவது. அது அதன் இயல்பு. என்றாலும் இன்று பெண் மட்டுமே அதைப் பூரணமாக நடை முறையில் காட்டுகிறாள். எனவே, காதல் திருமணம் என்பது அதன் இயல்பிலேயே ஒருதார மணமாகத்தான் இருக்கிறது. குழு மணத்திலிருந்து தனிப்பட்ட திருமணத்துக்கு முன்னேறியது முக்கியமாகப் பெண்கள் செய்த வேலை. இணை மணத்திலிருந்து ஒருதார மணத்துக்கு மாறியது ஆண்கள் செய்த வேலை.

வரலாற்றுரீதியில் பார்த்தால், இந்த மாற்றத்தால் பெண்களின் நிலை மேலும் இழிவடைந்ததோடு ஆண்கள் விசுவாசம் கெட்டுப்போக சௌகரியம் கிடைத்தது” என்று கூறும் எங்கல்ஸ் அடுத்த கட்டமாக வழக்கமாக ஆண்கள் விசுவாசம் கெட்டுப் போவதைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்குமாறு கட்டாயப்படுத்துகிற பொருளாதார நோக்கங்கள், தமது வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஆகியவை இந்த ஒருதார மணமுறையில் மறைவது பற்றிப் பேசுகிறார்.

இரு வேறு காதல்கள்

ஆகவே, பெண்ணின் காதல் வேறு, ஆணின் காதல் வேறாகத்தான் இருக்கிறது. விலக முடியாத துக்கம் அதனாலேயே எழுகிறது. விசுவாசம் என எங்கல்ஸ் குறிப்பிடுவதைத்தான் அவ்வை (கொன்றைவேந்தன்) ‘சொற்றிறம்பாமை’ என்கிறார். அதாவது சொல் தவறாமை, நாணயம், சத்தியம், மண ஒப்பந்தத்துக்கு விரோதம் இல்லாமல் என அந்தச் சொல்லுக்குப் பெரியார் விளக்க மளிப்பார்.

இந்தியாவில் திருமண பந்தம் என்பது இன்னும் கூடுதலாகச் சாதி, குடும்பம், சமூக வழக்கம் இவற்றோடு பின்னிப் பிணைந்து காதலிப்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளும் உரிமை பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது. கல்லானாலும் கணவன் என்று காதலுக்குச் சம்பந்தமில்லாத சட்டமாக முடிகிறது.

திருமணங்கள், சடங்குகள் குறித்தெல்லாம் விரிவாக எழுதிய இன்னொரு அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், “நல்ல வாழ்க்கை என்பது நேசத்தால் உந்தப்பெற்றதாகவும் ஞானத்தால் வழிநடத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும்.நேசமில்லாத ஞானமும் ஞானமில்லாத நேசமும் நல்ல வாழ்க்கையை உருவாக்கித் தர முடியாது” என்கிறார்.

காதல் என்பது உடல் சேர்க்கையை நோக்கி நகர்த்தும் உணர்ச்சி அல்ல. ஆண், பெண் இருவரது வாழ்க்கைகளின் பெரும்ப குதியை ஆக்கிரமிக்கப்போகும், தனிமை என்னும் வெக்கையிலிருந்து தப்பிக்க உதவும் உபாயமாக விளங்குவதே காதல். இதைப் பெண்கள் புரிந்துகொண்டதால்தான் விட்டுத்தொலைக்க முடியாமல் நம்மோடு வாழ்கிறார்கள்; அன்பு செலுத்து கிறார்கள். நேசிக்காமல் வாழத் தெரியாத பிறவிகளாக நம்மோடு பயணிக்கிறார்கள்.

“காதல் நீடித்திருக்கும்மண வாழ்க்கை மட்டுமே ஒழுக்கமுள்ளவை” என்கிறார் எங்கல்ஸ். இந்த ஞானத்தை ஆண்களும் பெற்று நேசத்துடன் வாழும் நாள் வர வேண்டும். அப்போதுதான் பெண்கள் இருண்மை மனநிலையிலிருந்து விடுபட முடியும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர்,எழுத்தாளர்.
தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்