என் பாதையில்: அதிக செல்லம் ஆபத்து

By Guest Author

கடந்த வாரம் செய்தித்தாள்களில் நான் கண்ட மூன்று செய்திகள் என்னை வேதனையில் ஆழ்த்தின.

அந்த வீட்டில் அண்ணனுக்கு 16 வயது, தம்பிக்கு 14. அண்ணன் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவான். பக்ரீத் பண்டிகையையொட்டி தெரிந்தவர்கள் பிரியாணி கொடுக்க, அதைத் தம்பி சாப்பிட்டிருக்கிறான். ஏன் பிரியாணியைச் சாப்பிடுகிறாய் என்று தம்பியிடம் சண்டைபோட்டிருக்கிறான் அண்ணன். பிறகு தன் அறைக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டான். பன்னிரண்டம் வகுப்பு மாணவி ஒருவர், தன் பள்ளித்தோழன் விபத்தில் மரணமடைந்த துக்கம் தாங்காமல் தன்னை மாய்த்துக்கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், செல்போனில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்ததைத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த மூன்று துயர நிகழ்வுகளுமே சென்னையில் நடந்தவை. அதுவும் கடந்த வாரத்தில் ஒரே நாளில் நடந்திருக்கின்றன. என் கண்ணில்படாத தற்கொலைச் செய்திகளும் இருக்கக்கூடும்.

18 வயதைக்கூடத் தாண்டாத இந்த இளந்தளிர்கள் தங்களை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஏன் சென்றனர்? தம்பி அசைவம் சாப்பிட்டதும், நண்பன் இறந்ததும், தந்தை திட்டியதும் தாங்கிக்கொள்ள முடியாத துயரங்களா? இந்தத் தலைமுறையில் பெரும்பாலான குழந்தைகள் இப்படித்தான் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. இதற்குக் காரணம் பெற்றோர். கடந்த தலைமுறை பெற்றோரைப் போலக் குழந்தைகளைக் கண்டிக்கவும் முடியாமல் நண்பர்களாக நடத்தவும் தெரியாமல் இரண்டுக்கும் இடையில் சிக்குண்டுத் தோற்றுப்போகிறார்கள்.

தங்களுக்குக் கிடைக்காதவை எல்லாமே தங்கள் பிள்ளை களுக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர், குழந்தைகள் கேட்கும் பொருள்களைக் கடன்பட்டாவது வாங்கித் தருவதிலும் அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பதிலுமே முனைப்புடன் இருக்கிறார்கள். மாறாக, தங்களுக்குக் கிடைக்காத படிப்பும் அனுபவமும் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துவதில்லை. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும், ‘இல்லை’ என்பதை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாகவும், சுயநலம் நிறைந்தவர் களாகவும் பிள்ளைகள் வளரப் பெரும்பாலான பெற்றோரே காரணம். தங்களுக்கு வேண்டியது கிடைக்க வேண்டுமானால் பெற்றோரை மிரட்டியும் அடம்பிடித்தும் காரியம் சாதிக்கும் பிள்ளைகள் இன்று அதிகம். பிள்ளைகளின் விருப்பத்துக்குப் பெற்றோர் மதிப்பளிப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் சீரழிந்து போவதற்கான வழியாக அது ஆகிவிடக் கூடாது.

- சித்ரா, திருநின்றவூர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE