மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பொதுநல நோக்குடன் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கிறது என்றால் நிச்சயம் அங்கே அகராதியைப் பார்க்கலாம். பெண்களுக்காகவும், வாழ்வின் அடித்தட்டில் இருப்பவர்களுக்காகவும் தன் சிந்தனையுடன் இசைந்திருக்கும் தோழர்களுடன் இணைந்து குரல்கொடுத்து வருகிறார் இவர்.
வீடுதான் தனக்குள் சமூக ஈடுபாட்டுக்கான முதல் விதையை ஊன்றியது என்கிறார் அகராதி. இவருடைய தந்தை தமிழ்பித்தன், பெரியார் திராவிட கழகத்தில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவருக்கும் சிறு வயதில் இருந்தே சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகம். பழனிச்சாமி என்ற தன் பெயரை பதின்ம வயதிலேயே தமிழ்ப்பித்தன் என்று மாற்றிக்கொண்டாராம். தன் தந்தை ஆட்டோ ஓட்டுவது வாழ்க்கையை ஓட்ட, எளியவர்களுக்காகக் குரல் கொடுப்பது வாழ்க்கையை அர்த்தப்படுத்த என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் அகராதி.
அகராதியின் அம்மா வெண்மணியும் பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் பிரிவில் இருக்கிறார். இவருக்கு நிரந்தரப் பணி எதுவுமில்லை, இயக்கப் பணிகளில் முழுமூச்சுடன் செயல்படுவதையே நிரந்தரப் பணியாகச் செய்துவருகிறார். கிடைக்கும் நேரத்தில் கிடைக்கிற வேலைகளைச் செய்கிறார்.
ஆர்வம் வளர்த்த குடும்பம்
அம்மா, அப்பா இருவருமே சமூகம் சார்ந்த ஈடுபாட்டுடன் இருப்பதால் அகராதியின் இளமைப் பருவம், தன் பெற்றோர் சார்ந்த செயல்பாடுகளுடனேயே கழிந்தது. வீட்டுக்குத் தன் தந்தையைத் தேடி வரும் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறு வயதில் ஆச்சரியத்துடன் பார்த்த அகராதி, வளர்ந்த பிறகு அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணங்களைத் தெரிந்து கொண்டதாகச் சொல்கிறார்.
“குடும்பமே இயக்கப் பணிகளில் இருந்ததால் நானும் நான்கு வயதில் இருந்தே மேடையேறுவது, அமைப்புப் பாடல்களைப் பாடுவது, கிராமப்புறப் பிரச்சாரங்களில் பங்கேற்பது என்று வளர்ந்தேன். நான் படிக்கும் மேற்படிப்பு எனக்கு மட்டும் நன்மை தருவதாக இல்லாமல், ஒடுக்கப்படுகிறவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். மக்கள் பிரச்சினைகளை அரசியல் அறிவுடனும் தெளிவுடனும் அணுக அந்தப் படிப்பு எனக்குக் கைகொடுக்கிறது” என்று சொல்லும் அகராதி, கல்லூரியில் படிக்கும்போதே பெண்கள் எழுச்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
பெண்களுக்கு விழிப்புணர்வு
பெண்கள் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். கட்டாயத் திருமணங்கள் குறித்தும், பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்தும் மாணவிகள் மத்தியில் தெளிவு ஏற்படுத்தியதில் இவர்கள் இயக்கத்தின் பங்கு அதிகம்.
இளமைப் பருவத்தில் பெரியாரையும் அம்பேத்கரையும் தெரிந்துகொண்ட அகராதி, கல்லூரி நாட்களில் மார்க்ஸியத்தின் மீது ஈடுபாடு கொண்டதாகச் சொல்கிறார். கல்லூரி காலத்தில் மாணவர் உரிமைப் பிரச்சினை, கல்வியில் தனியார்மயமாக்கல், கல்வி கட்டணக் கொள்ளை, மாணவர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் போன்றவற்றுக்கு எதிராகத் தான் சேர்ந்திருக்கும் அமைப்புத் தோழர்களுடன் இணைந்து போராடியிருக்கிறார்.
கல்லூரியில் தன்னுடன் பயின்ற, பொதுநல மாணவர் அமைப்பில் இருந்த மனுவேலை முற்போக்குத் திருமணம் செய்துகொண்டார்.
ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்
திருமணத்துக்குப் பிறகு தன் கணவரோடு இணைந்து போராட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியிருக்கிறார். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினராகச் செயல்பட்டுவரும் அகராதி, ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலும் சுயசார்பான இந்தியாவும்தான் தங்கள் அடிப்படை கொள்கைகள் என்கிறார்.
நிலம், நீர், காடு ஆகியவற்றின் பூர்வகுடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கும் முயற்சிக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்துவருகிறார். மண்ணின் மைந்தர்களிடம் இருந்து அந்த நிலங்களைப் பறித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் செயலுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கெடுக்கிறார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது என்று சொல்லும் அகராதி, அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த அனுபவம், தன் வேகத்தையும் உத்வேகத்தையும் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்.
“அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் நிகழ்விலும் பெண்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பட்ஜெட் ஆண்களுக்கு மட்டுமானதா? விலைவாசி உயர்வு எந்த வகையிலும் பெண்களைப் பாதிக்காதா?” என்று கேட்கும் அகராதி, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன் குழுவினருடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.
அகராதி என்றால் அர்த்தம் சொல்லும் நூல். பெயரைப் போலவே அவர் செய்கிற செயல்களிலும் அர்த்தம் நிறைந்திருக்கிறது.
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago