இசைப்பயணம்: கைகூடிய தமிழ்க் கனவு

By செய்திப்பிரிவு

காரைக்குடியைப் பூர்விகமாகக் கொண்ட சௌந்தரநாயகி வயிரவன், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் சிங்கப்பூரில் குடியேறினார். சிறு வயது முதலே கர்நாடக சங்கீதம் பயின்றுவந்தாலும் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளின்போது சிறிது இடைவெளி விழுந்தது. கல்லூரிப் படிப்புக்காக மூன்றாண்டுகள் சென்னை வாசம். இப்படி அடுத்தடுத்துத் தடை விழுந்த இசைக் கனவை சிங்கப்பூருக்கு வந்த பிறகு தன் கணவரது துணையோடு நனவாக்கினார்.

கலை வளர்க்கும் கலாமஞ்சரி: சிங்கப்பூரில் நான்கு ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று என்பதால் மக்களிடையே தமிழ் மீதான ஈடுபாடு அதிகமாக இருப்பதை சௌந்தரநாயகி கண்டார். பல்வேறு சமூக நிகழ்வுகள் மக்களிடையே தமிழைக் கொண்டுசேர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டன. அவற்றில் சௌந்தரநாயகி ஆர்வத்துடன் பங்கேற்றார். முறைப்படி கர்நாடக இசையைப் பயின்றார். காரைக்குடியில் பாடுவதற்கான மேடைகள் இல்லையே என்கிற ஏக்கத்தை சிங்கப்பூரிலும் பல வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தியதன்மூலம் தீர்த்துக்கொண்டார்.

கர்நாடக இசையையும் தமிழ்ப் பண்பாட்டையும் பரப்பும் நோக்கத்துடன் ‘கலாமஞ்சரி’ என்கிற அமைப்பை 2018இல் தொடங்கினார். சென்னை தமிழிசைச் சங்கத்துடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி ‘கலாமஞ்சரி’யில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தித் தமிழிசைச் சங்கம் சான்றிதழ் வழங்கும். வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல் மிருதங்கம், வயலின், வீணை, பரதம் போன்றவை ‘கலாமஞ்சரி’யில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

தமிழிசைச் சங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானபோது

அமுதே தமிழே: இசையையும் தமிழையும் இணைக்கும் ஆர்வம் சௌந்தரநாயகிக்கு எப்போதும் உண்டு. அதை வெளிப்படுத்தும் களத்துக்காகக் காத்திருந்தவர் ஒலி - ஒளி இணைந்த இசைத்தட்டுகளை வெளியிட முடிவுசெய்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கி தற்போதுவரை ஆறு இசைத்தட்டுகளை வெளியிட்டுள்ளார்.
“திருக்குறளை மையமாக வைத்து சிங்கப்பூர் கவிஞர் ஒருவர் 150 ஆண்டுகளுக்கு முன் ‘நன்னெறித் தங்கம்’ என்கிற நூலை எழுதியிருக்கிறார். திருக்குறள் குறித்து சிங்கப்பூரில் வெளியான முதல் தமிழ் இலக்கிய நூல் அது எனச் சொல்லப்படுகிறது. அந்த நூலின் பாடல்களை வைத்து ஒரு இசைத்தட்டை வெளியிட்டோம். பிறகு, திருவிரட்டை மணிமாலை உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்டும் சிங்கப்பூரில் தமிழ் வளர்க்கும் அமைப்புகள் குறித்தும் இசைத்தட்டுகளை வெளியிட்டிருக்கிறோம். தற்போது பாரதிதாசனின் சில பாடல்களை உள்ளடக்கிய ‘அமுதே தமிழே’ எனும் இசைத்தட்டை ஜுன் இரண்டாம் தேதி வெளியிட்டோம்” என்கிறார் சௌந்தரநாயகி.

சிண்டா அமைப்புக்கு நன்கொடை வழங்கியபோது

இந்த இசைத்தட்டுக்கு முனைவர் கே. சிவராஜ் இசையமைத்துள்ளார். இதில் உள்ள ஆறு பாடல்களுக்கு முனைவர் மு. இளங்கோவன் விளக்கம் அளித்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம். ராஜாராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, நட்சத்திரம் பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘அமுதே தமிழே’ இசைத்தட்டு வெளியீட்டை முன்னிட்டு பாரதிதாசன் தொடர்பாகப் பேச்சு, கட்டுரை, பாட்டுப் போட்டிகள் ‘கலாமஞ்சரி’யால் நடத்தப்பட்டன. போட்டிகள் மூலமும் இசைத்தட்டின் மூலமும் திரட்டப்பட்ட நிதியை ‘சிண்டா’ அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்