நூல் அறிமுகம்: பேசப்பட வேண்டிய ரகசியம்

By ஆதி வள்ளியப்பன்

பு

த்தாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் பிரபல இயக்குநர் மீரா நாயர் உருவாக்கிய ‘மான்சூன் வெட்டிங்’ என்ற இந்திய - ஆங்கிலப் படம் குழந்தைகள் மீதான பாலியல் சித்திரவதை (Child Abuse) குறித்து சுதந்திரமாக பேசியது. சர்வதேச விருது வென்ற அந்தப் படத்தைப் போன்ற படைப்புகள் இங்கே அதிகமாக வெளிவரவில்லை.

பல்வேறு தளங்களில் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில், பாலியல் சித்திரவதையால் உளவியல்ரீதியிலும் உடல்ரீதியிலும் குழந்தைகள் வதைக்கப்பட்டுவருகிறார்கள். நம் குழந்தைகளையும் சமூகத்தையும் பெரிய அளவில் பாதித்துவரும் முக்கியமான இந்தப் பிரச்சினை விரிவான தளத்தில் பேசப்படுவதில்லை.

யார் காரணம்?

குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறவர்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களாகவோ நெருங்கிய உறவினர்களாகவோ குடும்ப நண்பர்களாகவோ இருப்பதும் இந்தப் பிரச்சினை பெரிதாகப் பேசப்படாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இந்த உளவியல் பிரச்சினை குறித்து அவ்வப்போது பேசப்பட்டாலும், விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இந்தப் பிரச்சினை பற்றிக் குழந்தைகளிடம் எப்படிப் பேச ஆரம்பிப்பது? ஒரு கதை வழியாகவும் பேசலாம்.

யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற சிறார் நாவல் அதற்கு உதவும். இந்த நாவல் வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல் கதையம்சத்துடன் பிரச்சினையைப் பேசுகிறது. குழந்தைகள் பாலியல் சித்திரவதை தொடர்பாகச் சுற்றி வளைக்காமல் நேரடியாக இந்தக் கதையில் ஆசிரியர் பேசியிருக்கிறார்.

துணிச்சல் தேவை

பூஜா என்ற மாணவியை அவர்களது வீட்டுத்தரைதளத்தில் வசிக்கும் பெரியவர் பாலியல் சித்திரவதை செய்கிறார். இதனால் உளவியல்ரீதியில் பூஜா பாதிக்கப்படுகிறாள். ஆனால், வழக்கம்போல் பெரியவரின் மிரட்டலால் அதை வெளியில் சொல்லப் பயப்படுகிறாள். இதனால் குழப்பமான மனநிலைக்குள்ளாகிறாள். இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதே கதை.

குழந்தைகள் மீது பெற்றோர் எப்படி அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் அவர்களுடன் கலந்துரையாட வேண்டியதன் - துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் அவர்களைப் பேசவைக்க உந்துதலாக இருக்க வேண்டியதன் - அவசியத்தைப் புரிந்துகொள்ள இந்த நாவல் உதவுகிறது. அதேநேரம் இந்தப் பிரச்சினையிலிருந்து மீளும் முறைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முன்னுதாரண முயற்சி

குழந்தை பாலியல் சித்திரவதைதான் கதையின் மையம் என்றாலும், இன்றைக்கு நம் குழந்தைகளை ஆக்கிரமித்துள்ள வேறு பல முக்கிய பிரச்சினைகளையும் கதை தொட்டுச் செல்கிறது. மறந்துபோன விளையாட்டுகள், நடனங்கள், பார்வைக் குறைபாடு, ‘குட் டச், பேட் டச்’ எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களும் வாசிப்புக்குக் கூடுதல் அர்த்தம் சேர்க்கின்றன.

கதை வடிவில் எழுதப்பட்டிருந்தாலும் பெற்றோர், ஆசிரியர், பதின் வயது சிறுவர்-சிறுமிகள் வாசிக்க வேண்டிய நூல் இது. குறிப்பாக, தங்களைச் சுற்றியிருக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பதின் வயதுக் குழந்தைகள் பெற முடியும்.

முக்கியமான ஒரு பிரச்சினையை மரப்பாச்சி பேசியுள்ளது. இதுபோல இன்னும் பல படைப்புகள் வரும்போது இந்தப் பிரச்சினை பரவலான விழிப்புணர்வை உருவாக்கும். அதற்கான முன்னோடி முயற்சியாக இதைக் கருதலாம்.

மரப்பாச்சி சொன்ன கதை,

யெஸ். பாலபாரதி, வானம் வெளியீடு,

தொடர்புக்கு: 91765 49991

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்