எசப்பாட்டு 30: நோபல் துரோகம்

By ச.தமிழ்ச்செல்வன்

பெ

ண் நடக்கும் வழி எங்கும் முட்களாக முளைத்து நிற்கும் ‘ஆண் கேள்விகள்’ விஞ்ஞானத் தடத்திலும் விதிவிலக்கின்றி விரிந்து கிடக்கின்றன. பெண்கள் வந்ததால் அறிவியலில் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது, கண்டுபிடிப்புகளில் என்ன புதுமை வரப்போகிறது, E = MC 2 என்பது மாறிவிடப்போகிறதா என்று கேட்பதெல்லாம் எத்தனை அபத்தம். அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் புலங்களிலும் பெண்களின் நுழைவை வரவேற்பதுதானே சரியான அறிவியல் பார்வையாக இருக்க முடியும்?

எந்த ஒரு குழுவிலும் பன்முகத்தன்மை இருப்பது, பல வர்க்கத்தினர், பாலினத்தவர், மொழி சார்ந்தவர், பலபண்பாடுகளைச் சார்ந்தவர் இருப்பதுதானே பல கோணங்களில் கேள்விகளை எழுப்ப உதவியாக இருக்கும்? பெண்களும் அறிவியலில் இருப்பது இன்னும் விதவிதமான பாணிகளில் அறிவியலைச் செய்ய ஏதுவாகத்தானே இருக்கும்? தவிர பல ஆண்கள் கருதுவது போல விஞ்ஞானம் ஒன்றும் ஆண்களுக்கேயான உலகம் அல்லவே.

இனவாத அரசியல்

அறிவியல் ஒரு கருத்துப் படைப்பு எனும்போது அதைப் படைத்த படைப்பாளியின் தனித்த முத்திரை அதன் மீது இருக்கவே செய்யும். மறுபுறம், அந்தப் படைப்பாளி மீது அவர் பிறந்து வளர்ந்த வர்க்கம், பாலினம், பண்பாடு ஆகியவற்றின் முத்திரை இருக்கும். இவையெல்லாம் நீக்கப்பட்ட, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, புனிதமான ஒன்றாகச் சார்பற்றதாக அறிவியலைப் பார்க்கும் பார்வை எப்படி அறிவியல்பூர்வமானதாக இருக்க முடியும்?

‘இனவாத அறிவியல்’ என ஒன்று ஒவ்வொரு காலத்திலும் உருவாகி மேலெழுந்து வரமுடிகிறதென்றால் அறிவியல் சார்புடையதாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்? 1933 முதல் 1945 வரை ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் அறிவியல் அறிஞர்கள், மானுடவியல் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துப் பின்புலத்துடனும் உதவியுடனும்தானே மகா ஜெர்மனியின் தூய்மையைப் பாதுகாக்க 4 லட்சம் யூதர்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது.

Rosalind Franklin -2 ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின்

1800-களில் சாமுவேல் மார்ட்டன் என்னும் மானுடவியல் அறிஞர், மூளைகளின் அளவுக்கும் அறிவுக்கும் சம்பந்தமிருப்பதாக ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டு வெள்ளைக்கார மூளைகள் அளவில் பெரியவை; ஆகவே அறிவில் சிறந்தவை என்று சொல்லி, வெள்ளை இனவாத அரசியலுக்குத் தொடக்கப் புள்ளியை வைத்தார். அடிமை வியாபாரம் அன்றாடம் நடந்துகொண்டிருந்த அந்த நாட்களில் கறுப்பின மக்கள் மனித இனமே அல்லர், ஆகவே குற்ற உணர்வுகொள்ள வேண்டாமென எத்தனை விஞ்ஞானிகள் தங்கள் ‘கண்டுபிடிப்புகளோடு’ வந்தனர்?

ஆகவே, அறிவியல் எல்லாத் துறைகளையும் போலச் சார்புடையது. அதில் பெண்கள் பங்கேற்பது நிச்சயமாக அளப்பரிய ஆக்கபூர்வ தாக்கத்தை உருவாக்கும்.

நோபல் பரிசிலும் பாகுபாடு

இது ஏதோ 18, 19-ம் நூற்றாண்டுகளில் உலாவந்த கருத்துகள் என விட்டுவிட முடியாது. 1962-ல் டி.என்.ஏ. குறித்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன், “கறுப்பினத்தவருக்கு அறிவுத் திறன் குறைவுதான். இது உடலியல்ரீதியானது” என்ற கருத்தை வெளியிட்டுக் கடும் கண்டனத்துக்கு ஆளானார்.

இந்த ஜேம்ஸ் வாட்சன் என்னும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் சொல்லப்படாத தியாகம் மறைந்திருக்கிறது. வரலாற்றின் புதைசேற்றில் அமிழ்ந்துபோன எண்ணற்ற பெண் விஞ்ஞானிகளின் சோகக் கதைகளில் ஒன்றாக அறிவியல் உலகத்தில் இன்றும் அது அலைந்துகொண்டிருக்கிறது.

‘இனக் கீற்று அமிலம்’ எனத் தமிழில் வழங்கப்படும் டி.என்.ஏ. (DNA) எந்த வடிவத்தில் இருக்கும் என்ற ஆராய்ச்சியில் வெற்றிபெற்ற இருவர் என ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்சிஸ் க்ரீக் ஆகிய இருவருக்கு 1962-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், டி.என்.ஏ. வடிவத்தை எக்ஸ்ரே எடுத்து அது இரட்டைச் சுருள் வடிவம் கொண்டது என முதன் முதலாகக் கண்டுபிடித்தவர் ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் என்ற பெண் விஞ்ஞானிதான். ஆனால், அவருக்கு நோபல் விருது வழங்கப்படவில்லை.

மறைக்கப்பட்ட திருட்டு

1920-ல் லண்டனில் பிறந்து 1958-ல் மறைந்த ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின், எக்ஸ் ரே படிகவியல் துறையில் மிகக் குறுகிய காலத்தில் உலகப் புகழ்பெற்றார். அன்று பரபரப்பாக அறிவியல் உலகில் பேசப்பட்ட மனித குணாம்சங்களைத் தீர்மானிக்கும், அடுத்த தலைமுறைக்கு அவற்றை எடுத்துச்செல்லும் உடற்கூறான டி.என்.ஏ.வின் வடிவத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் முழு மனதோடு தன்னை அவர் ஈடுபடுத்திக்கொண்டார். இங்கிலாந்தின் பாரம்பரியமிக்க கிங்ஸ் கல்லூரியின் அறிவியல்துறையில் இணைந்து அந்தப் பணியைச் செய்துவந்தார். தொடர்ந்து எக்ஸ் ரே கதிர்வீச்சின் மூலம் ஏராளமான படங்களை எடுத்து டி.என்.ஏ.வின் வடிவம் இரட்டைச் சுருள் என்பதைக் கண்டார். அதிகப்படியான கதிர் வீச்சுப் பாதிப்பு காரணமாகப் புற்றுநோய்க்கு ஆளாகி 37 வயதிலேயே இறந்துவிட்டார்.

இதே ஆராய்ச்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட்சன், ஃப்ரான்சிஸ் க்ரீக் இருவரும் ஈடுபட்டிருந்தனர். தங்கள் ஆய்வில் ஒரு முடிவை எட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்த இவர்கள் கிங்ஸ் கல்லூரிக்கு வந்தனர். ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் எழுதி வைத்திருந்த குறிப்புகளையும் எடுத்திருந்த படங்களையும் ரோசலிண்ட்டின் சக விஞ்ஞானியான வில்கின்ஸ் இந்த இருவரிடமும் படிக்கக் கொடுத்தார். மகிழ்ச்சியில் திளைத்தனர் இருவரும்.

மறைப்பின் அவலம்

அதற்கு மேல் தங்கள் ஆய்வுக்குக் கிடைத்த புதிய வெளிச்சத்தின்படி பயணித்து நோபல் பரிசை வென்றனர். தங்கள் நோபல் உரையிலோ தங்கள் ஆய்வுக் குறிப்பிலோ எங்கும் ரோசலிண்டின் கண்டுபிடிப்புகள் தமக்கு உதவியது பற்றிக் குறிப்பிடவில்லை. எளிய மனிதர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச நன்றி உணர்ச்சியைக்கூட அவர்கள் ரோசலிண்டுக்குக் காட்டவில்லை.

Rosalind Franklin: The Dark Lady of DNA என்ற அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய Brenda Maddox இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்தார். அவர் மட்டுமின்றி ரோசலிண்டின் சக படிகவியலறிஞரான Anne Sayre தன் வாழ்க்கை வரலாற்று நூலில் ரோசலிண்டின் கண்டுபிடிப்பு இல்லாமல் டி.என்.ஏ. ஆராய்ச்சி முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லையென நிறுவி ஜேம்ஸ் வாட்சனின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினார். அதைவிடவும் மோசம் என்னவெனில் ஜேம்ஸ் வாட்சன் 1968-ல் எழுதிய ‘டபுள் ஹெலிக்ஸ்’ என்ற நூலில் தான் ரோசலிண்டின் குறிப்புகளைப் பார்த்தாக ஒப்புக்கொண்டதோடு அவரைப் பற்றிய இழிவான சித்திரம் ஒன்றை மீண்டும் மீண்டும் தீட்டியுள்ளார். இது உலக அளவில் பெண்ணியவாதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனினும் இன்றுவரை நோபல் கமிட்டி இத்தவறைச் சரிசெய்ய முனையவில்லை.

ஆண்களின் துரோகத்தில் அழிந்துபோன/அறியப்படாமல்போன பெண் ஆளுமை, ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் மட்டுமல்ல.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்