இயற்கையை எழுத்தில் ஆவணப்படுத்துவது ஒரு கலை. அதிலும் இயற்கை சார்ந்த பிரச்சினைகளைச் சூழலியல் பின்புலத்தில் கச்சிதமாகப் பொருத்தி எழுதுவது மாயவித்தைக்காரர் ஒருவர் தனது தொப்பியிலிருந்து புறாவை எடுத்துப் பறக்கவிடுவதைப் போன்றது. பரந்த வாசிப்பும் சூழலியல் குறித்த ஆழ்ந்த புரிதலும் எழுத்தில் நேர்த்தியும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
நேஹா சின்ஹாவுக்கு அந்த ‘சாத்தியம்’ கைவரப்பெற்றிருக்கிறது!
நேஹா சின்ஹா, சூழலியல் சார்ந்த பிரச்சினைகளைப் பலரும் அனுமானிக்காத கோணத்திலிருந்து அணுகுபவர். ‘தி இந்து ஆங்கிலம்’, ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’, ‘தி வயர்’, ‘டெய்லிஓ’ போன்ற நாளிதழ்களிலும் இணைய இதழ்களிலும் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.
பத்திரிகையாளராகச் சில காலம் பணியாற்றியவர், தற்போது மும்பையில் உள்ள ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக’த்தின் (BNHS) ஆலோசகராக டெல்லியில் பணிபுரிகிறார். இடைவிடாத பயணத்தில் இருந்தவரிடம் பேசினோம்.
தோட்டம்தூண்டியஆர்வம்
நேஹா பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் டெல்லியில். அப்பா ரஞ்சித் , மத்திய அரசு வேலையில் இருந்தார். அம்மா சங்கமித்ரா , பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார்.
“டெல்லியில் நாங்க இருந்த பகுதி அவ்வளவா மாசுபடாம, மிச்ச சொச்ச பசுமையோடு இருந்தது. அங்கு இருவாச்சி உள்ளிட்ட பறவைகள் எல்லாம் தென்படும். எங்க வீட்டுத் தோட்டத்துக்கும் நிறைய பறவைகள் வரும். சின்ன வயதிலிருந்து அவற்றைப் பார்த்து வளர்ந்தேன். இயற்கை குறித்து எழுத, எங்க தோட்டம்தான் உந்துசக்தியா இருந்திருக்குன்னு தோணுது” என்பவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் முடித்திருக்கிறார்.
பட்டம் பெற்ற கையோடு, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நிருபராகச் சேர்ந்தார். அங்கு, சுற்றுச்சூழல் குறித்து அதிகம் எழுதினார். ஐந்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு, இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘கன்சர்வேஷன் பயாலஜி’ பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பிறகு 2012-ல் இந்தியா திரும்பியவர், அப்போதிலிருந்து பி.என்.ஹெச்.எஸ்-ல் ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.
சுயவெளிப்பாட்டுக்கானஎழுத்து
நாளிதழ்கள், பருவ இதழ்கள், இணைய இதழ்கள் மட்டுமல்லாது, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களிலும் எழுதிவருகிறார் நேஹா சின்ஹா. பெரும்பாலும் பறவைகள் குறித்துத் தன் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் எழுதுகிறார்.
“மாசடைந்த நகரங்களில் முதன்மையானதாக இருக்கும் டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லாப் பெருநகரங்களிலும் கொஞ்சமாவது காடுகள் இருக்கத்தான் செய்யும். அங்கு நிறைய உயிரினங்கள் வாழும். அவற்றை நாம்தான் கவனிக்க வேண்டும். காட்டுயிர்களைக் கவனிப்பதுதான் உயிரியல் துறையில் முதல் பாடம். என் அவதானிப்புகளை மற்றவர்களுக்குக் கொண்டுசேர்க்க, என் எழுத்து உதவுகிறது” என்கிறார்.
பள்ளியில் படித்தபோது, பல்வேறு நாளிதழ்களின் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ பகுதிக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.
“இப்படித்தான் என் எழுத்தார்வம் வளர்ந்தது. எழுத்து என்பதை என் சுய வெளிப்பாட்டுக்கான கருவியாகவே பார்க்கிறேன்” என்பவர், தனது கட்டுரைகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தொழில்நுட்பம், சினிமா, கலாச்சாரம் போன்ற பலதுறை பார்வை வழியாக எழுதிவருகிறார்.
‘நியூட்டன்’ இந்தி சினிமா குறித்து ‘தி வயர்’ இணைய இதழில் அவர் எழுதிய விமர்சனம் அதற்கு நல்ல உதாரணம். பலரும் அந்தப் படத்தை அரசியல் படமாக மட்டுமே பார்க்க, நேஹாவோ அந்தப் படம் காடுகளை, அங்கு வாழும் பூர்வகுடிகளை எப்படிச் சித்தரிக்கிறது என்பதைப் பற்றி அலசியிருந்தார்.
படத்தில் இடம்பெற்றிருக்கும் தண்டகாரண்ய காடு, எப்படி ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது என்று அவர் சொன்னது முற்றிலும் புதிய பார்வை.
“நாம் எல்லோரும் காடுகளிலிருந்து வெளியே இருப்பதால் நாம் இயற்கையிலிருந்தும் வெளியே இருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால், அது தவறு. நம்மையும் சேர்த்ததுதான் இயற்கை. அந்த இயற்கையை அழிக்கும் விருப்பத்தோடு இருப்பதுதான் இன்றைய வாக்கு வங்கி அரசியல். ‘நியூட்டன்’ படத்தில், பூர்வகுடிகள் காடுகளில் வாழ்ந்தாலும் அந்தக் காடுகளின் மீது அவர்கள் எந்தவிதமான உரிமையும் இல்லாமல் இருப்பது எப்படி என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தண்டகாரண்ய காடுகளை நாம் ஒரு கதாபாத்திரமாக வைத்துக்கொண்டால், அந்தக் காடுகளின் சூழலை, அங்கு வாழும் மக்களின் பாரம்பரிய அறிவு, சடங்குகள் ஆகியவற்றின் தனித்துவத்தை தக்ககவைப்பதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும். பூர்வகுடிகள் அந்த விதிகளைப் பின்பற்றுகிறார்கள். நாகரிகமடைந்த, கல்வி அறிவு பெற்ற நாம்தான் அவற்றைப் பின்பற்றுவதில்லை” என்கிறார்.
மதிக்கப்படாதவடிகால்பாதைகள்
காடுகளைக் காப்பாற்ற அங்கு வாழும் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரு கருத்து நிலவுவது குறித்துக் கேட்டால், “அது ஒரு வாதம். இன்னொரு வாதம், காடுகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அங்கிருந்து பூர்வகுடிகளை வெளியேற்றக் கூடாது என்கிறது. ஒருவேளை, அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்கு வேறுவிதமான பிரச்சினைகள் தோன்றும். குறிப்பாக, வாழ்வாதாரம். இத்தனை நாட்கள் காடுகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்ந்தவர்கள், காடுகளைவிட்டு வெளியேறிய பிறகு தங்களது பசியைப் போக்குவதற்காக என்ன செய்வார்கள்? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, பணத்தைக் கையாள்வது குறித்துப் போதிய ஆலோசனை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கிறதா? இப்படி ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அவர்களைக் குடியேற்றும்போது, அங்கு ஏற்கெனவே இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தால் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அது குறித்து என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று எதுவும் இருக்க முடியாது. பல்வேறு விதமான தீர்வுகள் இருக்கவே செய்கின்றன. எது எல்லோருக்கும் நன்மை தரும் என்பதை அறிந்த பிறகே, பூர்வகுடிகளைக் காடுகளிலிருந்து வெளியேற்றலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்கிறார்.
வலிமையான கட்டுரைகளை எழுதும் இவர், தன் பணியில் பாலின வேறுபாட்டைச் சந்தித்திருக்கிறார். “குறிப்பாக அரசு அதிகாரிகளிடம் பேசும்போது, ‘இவள் ஒரு பெண்தானே’ என்ற அலட்சியப் போக்கு தென்படும். அதனால், நாம் ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கும்போது, ‘கொஞ்சம் சீக்கிரமா முடிங்க’ என்பதுபோல நடந்துகொள்வார்கள். அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது” என்பவர், தற்போது சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பாகப் பணியாற்றிவருகிறார்.
“சதுப்பு நிலத்தை எல்லாம் எதற்கும் பயன்படாத நிலமாக மக்கள் கருதுகிறார்கள். அவைதான் நீர் பாதுகாப்புக்கு முக்கியமான ஆதாரங்கள். ஒவ்வொரு நகரமும் தனக்கான வடிகால் வழியைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாதைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை மதிக்க வேண்டும். முன்பெல்லாம் மனிதர்கள் வேட்டையாடி உண்டார்கள். ஆனால், இப்போது யாரும் உணவுக்காக வேட்டையாடுவதில்லை. மனிதர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவர்களுக்குள் மனமாற்றத்தைக் கொண்டுவர என் எழுத்து உதவ வேண்டும் என்று விரும்புகிறேன்” என்பவரிடம், ‘சூழலியல் பெண்ணியம்’ குறித்துக் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:
“பெண்ணியமே இன்னும் நம் நாட்டில் தோன்றவில்லை. அப்புறம் எப்படிச் சூழலியல் பெண்ணியம் தோன்றும்? அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்” என்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago