மே: 1 உலக உழைப்பாளர் தினம்
தொழிலாளர்களின் எண்ணிலடங்காப் போராட்டங்களின் விளைவாகத்தான் எட்டு மணி நேர வேலை நேரம் உலகம் முழுவதும் உறுதிசெய்யப்பட்டது. உழைப்புக்கேற்ற ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலைக்கான அங்கீகாரம் போன்றவற்றிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. உரிமைகளைப் போராடிப் பெற்றதைக் குறிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மே 1-ம் தேதியை உலகம் முழுவதும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். உழைப்பாளர்களைக் கொண்டாடும்விதமாக நம் மாநிலத் தலைநகர் சென்னையிலும் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை உண்டு. ஆனால், அதில் ஓர் ஓரமாகக்கூடப் பெண்ணுக்கு இடமில்லை.
கல் பிளந்து, மலை பிளந்து, கருவியெல்லாம் செய்தவை ஆணின் கரங்கள் மட்டும்தானா? இப்படியொரு சிறு கேள்விக்கே எதற்கெடுத்தாலும் பெண்கள் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதாக நினைத்துப் புறந்தள்ளுகிறவர்களும் கேலியாகப் புன்னகைக்கிறவர்களும் உண்டு. ஆனால், ஆண்டாண்டு காலமாக ஆண்களின் மனதில் மட்டுமல்ல, பெண்களின் மனதிலும் ஆழமாக உழப்பட்டுவிட்ட பெண்ணடிமைச் சிந்தனை நம்மை வேறெப்படியும் சிந்திக்கத் தூண்டாது. ஆசிரியர் பணி, செவிலியர் பணி நீங்கலாக வேறெந்தப் பணியைச் சொன்னாலும் நம் மனங்களில் விரிவது ஓர் ஆணின் பிம்பம்தானே! பிறகெப்படி உழைப்பாளர் என்றால் மட்டும் பெண்ணின் சித்திரம் நினைவுக்கு வரும்?
உழைப்புச் சுரண்டல்
சூரியன் கிழக்கில் உதிப்பது எத்தனை இயல்போ அத்தகைய இயல்போடுதான் பெண்களின் உழைப்பு காலங்காலமாகச் சுரண்டப்பட்டுவருகிறது. வீட்டில் தொடங்கி சமூகம்வரை அவர்களது பங்களிப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளப் படாமல் புறக்கணிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் குரல்கள்கூட, ‘இதெல்லாம் பெண்ணின் அடிப்படைக் கடமையல்லவா?’ என்ற கேள்வியில் நசுக்கப்படுகின்றன.
கேள்வி கேட்டவர்களையே குன்றிப்போகச் செய்யும் அளவுக்குப் பெண்கள் மீது பல்வேறு மாண்புகளை ஏற்றிவைத்திருக்கிறோம். உழைத்து உழைத்து கிஞ்சித்தும் பலனில்லாமல் போவதற்கென்றே பெரும்பாலான பெண்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரம் இருக்கட்டும், உரிய ஊதியம் கிடைக்கிறதா? இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயத்தில் 70 சதவீதப் பணிகளைப் பெண்களே செய்கிறார்கள். கட்டிட வேலை, வீட்டு வேலை போன்ற முறைசாராத் தொழில்களிலும் பெண்களின் பங்களிப்பே அதிகம்.
குறிப்பாகக் கட்டிடத் தொழிலில் மேஸ்திரி எனப்படும் ஆணைவிடச் சித்தாளாகப் பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகம். ஆனால், பெண்களுக்குக் கொடுக்கப்படும் கூலி, ஆண்களைவிட பல மடங்கு குறைவு. மேஸ்திரியின் வேலையைப் பெண் செய்தாலும் மேஸ்திரியாக அவள் அங்கீகரிக்கப்படுவதில்லை.
ஊதியப் பாகுபாடு
உடலுழைப்பைக் கோருகிற தொழில்களில்தாம் இந்த ஊதியப் பாகுபாடு என்றில்லை, பெரு நிறுவனங்களிலும் இந்தப் பாகுபாட்டைக் காணலாம். விதிவிலக்காகச் சில நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஆண் – பெண் பாகுபாடின்றி சம ஊதியம் வழங்கலாம். சமூக அவலங்களைத் தோலுரித்துக்காட்ட வேண்டிய ஊடகத்துறையிலும் ஊதியப் பாகுபாடு இருப்பதை பிபிசியில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளரான கிரேஸி, வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.
பிபிசி நிறுவனத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், தன்னுடன் ஒரே தகுதி நிலையில் வேலைபார்க்கும் ஆண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிக அதிகமாக இருப்பதை அறிந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். பாலினப் பாகுபாட்டு அடிப்படையிலான சட்டத்துக்குப் புறம்பான இந்தச் செயல்பாட்டைக் கண்டிக்கும்விதமாக பிபிசியின் சீனப் பிரிவு ஆசிரியர் பதவியைத் துறந்தார்.
சம வாய்ப்பையே பெண்கள் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. அரசுப் பணி தவிர்த்து தனியார் நிறுவனங்களிலும் முறைசாராத் தொழில்களிலும் சம ஊதியம் எப்போது கிடைக்கும் எனத் தெரியாது. பெரு நிறுவனமோ சிறிய அளவில் செயல்படும் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் ஊதியப் பாகுபாட்டையும் உழைப்புச் சுரண்டலையும் சகித்தபடிதான் பெண்கள் பணிபுரிய வேண்டியிருக்கிறது. இல்லையெனில் வேலையைவிட்டு விலக வேண்டும். இந்த இரண்டைத் தவிர வேறெதுவும் தீர்வு இருக்கிறதா?
சமையலறை எனும் பெரும்சொத்து
வேலைக்குச் செல்லும் பெண்களின் தோள்களில் சுமத்தப்படும் இரட்டைச் சுமை குறித்து அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பல நேரம் கவலைப்படுவதில்லை. வீட்டு வேலைகளோடு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டுதான் அவர்கள் வேலைக்குச் சென்றாக வேண்டும். இந்தியக் குடும்ப அமைப்பில் சமையலறை என்னும் புறக்கணிக்கப்பட்ட பகுதியை பெண்களின் பெயரிலேயே எழுதிவைத்துவிடுவார்கள்.
சமைக்கத் தெரியாத அல்லது கணவனைச் சமைக்கச் சொல்லும் பெண்கள், மாதர் குல மாணிக்கங்களாகக் கருதப்படுவதில்லை. பெண்களின் பெருமைக்குக் களங்கம் விளைவித்துவிட்டதாக அவர்களை வசைபாடுகிறவர்களும் பல நேரம்பெண்களாகவே இருப்பது நகைமுரண். அவர்களை அப்படி வசைபாடும்படி மிக நேர்த்தியாக இந்தச் சமூகம் தயார்செய்துவைத்திருக்கிறது.
வேலைக்குப் போகும் பெண்களின் நிலையே இப்படியென்றால் வீட்டிலிருக்கும் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம். கணவன் ஏதோ போர்க்களத்துக்குச் சென்று களமாடிவிட்டு வருவது போலவும் தான் வீட்டில் எதுவுமே செய்யாமல் பூமிக்குப் பாரமாக இருப்பது போலவும் நினைத்துக்கொள்வார்கள். அல்லது அப்படி நினைத்துக்கொள்ளும்படி நிர்பந்திப்படுவார்கள். பெண்கள் வீட்டில் செய்கிற வேலைக்குக் கூலி நிர்ணயித்தால் நிச்சயம் அவர்களும் கணிசமான ஊதியத்தை மாதந்தோறும் பெறுவார்கள்.
ஆனால், அவர்களை அப்படியெல்லாம் சிந்திக்கவிட்டால்தானே? சாலை விபத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இல்லத்தரசிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்தது. ஆனால், அது அந்த ஒரு வழக்குக்கு மட்டுமாகிவிட்டது. மற்றபடி வீட்டு வேலைக்குக் கணக்குப் பார்ப்பது குடும்பப் பெண்களுக்கு அழகாகக் கருதப்படுவதில்லை.
அதிகபட்சமாக இல்லத்தரசிகளின் அங்கீகாரமும் ஊதியமும் இல்லாத வேலைகள் குறித்து குறும்படம் எடுக்கலாம், கவிதை எழுதலாம். மற்றபடி நம் வீட்டுப் பெண்கள் செய்யும் வேலைகளைத் துச்சமாக மதித்து, ‘சோறாக்கி, பாத்திரம் கழுவுறதெல்லாம் ஒரு வேலையா?’ எனக் கேட்டு இழிவுபடுத்துவதே அதிகம் நடக்கிறது.
புறக்கணிக்கப்படும் அடிப்படைத் தேவைகள்
உழைக்கும் பெண்கள் பற்றிப் பேசும்போது பணியிடப் பாதுகாப்பு முதன்மையானது.ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் அதிகமாகப் பெண்களே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். காரணம் குறைந்த ஊதியத்தை வாங்கிக்கொண்டு கேள்வி கேட்காமல் அவர்கள்தானே வேலைசெய்வார்கள்? ஆனால், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெரும்பாலான நிறுவனங்கள் செய்து தருவதில்லை.
போதுமான கழிப்பறைகளோ ஓய்வறைகளோ இல்லாத நிலையில், பெரும்பாலான பெண்கள் நாள் முழுவதும் இயற்கை உபாதையை அடக்கியே வைத்திருப்பார்கள். மாதவிடாய் நாட்களில் அவர்களின் வேதனை பன்மடங்காகிவிடும். தவிர மாதவிடாய் குறித்துப் பெண்கள் பேசுவதே ஒழுக்கக்கேடு என்று நினைக்கும் சமூகத்தில் மாதவிடாய் நாட்களில் ‘சம்பள விடுப்பை’ எதிர்பார்ப்பதெல்லாம் பகல் கனவு.
20 பெண்கள் பணியாற்றுகிற ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல் வன்முறை குறித்துப் புகார் செய்யும் வகையில் குழு அமைக்க வேண்டும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பெண் ஒருவரை விசாரணை அதிகாரிகளுள் ஒருவராக நியமிக்க வேண்டும் என்பது சட்டப் புத்தகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. அதை எக்காரணம் கொண்டும் அமல்படுத்திவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இருக்கும் நிறுவனங்கள் நம் நாட்டில் பல உண்டு.
இருவரும் சமமா?
வேலை செய்வதில் ஆண்களைப் போல் பெண்கள் இல்லை என்ற வாதமும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. மாதவிடாய், மகப்பேறு, மெனோபாஸ் எனத் தன் வாழ்நாளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு உடல்ரீதியான, மனரீதியான மாறுதல்களுக்கு ஆட்படும் பெண்களை ஆண்களுக்கு நிகராகப் பணியாற்றச் சொல்வதே தவறு. பெண்ணுடலில் ஏற்படுகிற இந்த மாற்றங்கள் எல்லாம் அவளது பலவீனமல்ல, இயற்கை நிகழ்வு எனப் புரிந்துகொண்டவர்கள் ஆணுக்கு நிகராகப் பெண்கள் பணியாற்றுவதில்லை எனப் பிதற்ற மாட்டார்கள்.
மூத்த எழுத்தாளர் அம்பையின், ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதையில் வருகிற ஒரு பெண், திருமணமானது முதல் தினமும் 300 சப்பாத்திகளுக்கும் குறையாமல் இடுகிறார். 40 ஆண்டுகளில் அவர் சுட்டிருக்கும் சப்பாத்திகளின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். ஆனால், நம் வீட்டுப் பெண்கள் பலரும் இப்படிக் கணக்குப் பார்ப்பதில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்று சொல்வார்கள். உழைக்கும் பெண்கள் கணக்குப் பார்த்தால் கடைசியில் எதுவுமே மிஞ்சுவதில்லை என்பதுதான் காலங்களைக் கடந்த நிதர்சனமாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago