பெண் எழுத்து: அயன் ரேண்ட் - ஒளியும் விரலும்

By முகமது ஹுசைன்

மனிதனின் வாழ்வைப் பண்படுத்துவதில் வாசிப்புக்கு முக்கியப் பங்குண்டு. வாசிப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை நம்பிக்கை சார்ந்தது. அத்தகைய வாசிப்பு கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அது வாசகரின் உலகைச் சுருக்கி அந்த வாசிப்புக்குள் அடக்கிவிடும். இரண்டாம் வகை அவரவர் ரசனையையும் விருப்பையும் சார்ந்தது. அது ஒருவரது அறிவு வீச்சுக்கும் சிந்தனை ஆற்றலுக்கும் ஏற்ப அவரது உலகைப் பரந்து விரியச் செய்யும்.

அவ்வாறு நம் உலகைப் பரந்து விரியச் செய்த எத்தனையோ எழுத்தாளர்கள் இவ்வுலகில் வாழ்ந்துள்ளனர். ஆனால், அவர்களில் எவரையும் இவ்வுலகம் அயன் ரேண்டைப்போல் கொண்டாடியதும் இல்லை, தூற்றியதும் இல்லை. அவர் இவ்வுலகைப் பிரிந்து சென்று 35 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் அந்த நிலை அப்படியேதான் தொடர்கிறது.

அயன் ரேண்ட் மூன்றே நாவல்கள்தாம் எழுதியிருக்கிறார். ஆனால், அவற்றின் மொத்த விற்பனை நான்கு கோடிக்கும் மேல். அந்தப் புத்தகங்களும் அவை வெளிப்படுத்தும் சித்தாந்தங்களும் ஏறக்குறைய ஒரு இசமாகவே மாறியதால், அது மேற்கத்திய நாடுகளில் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

அயன் ரேண்ட்டின் இயற்பெயர் அலிசா சினாவியெவ்னா ரோசன்பாம். இவர் 1905 பிப்ரவரி 2-ல் ரஷ்யாவில் பிறந்தார். படித்து முடித்ததும் 1926-ல் அமெரிக்காவில் குடிபுகுந்தார். இவரை வெறும் நாவலாசிரியர் எனும் அடையாளத்துக்குள் சுருக்கிவிட முடியாது. நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், கட்டுரையாளர் எனப் பல அடையாளங்கள் உண்டு. சொல்லப்போனால் இவரது முதல் இரண்டு படைப்புகள் நாடகங்கள்தாம்.

தனி மனிதனுக்கும் சோவியத் நாட்டுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகளின் அடிப்படையில் விரியும் இவரது முதல் நாவலான ‘வி தி லிவ்விங்’ 1936-ல் வெளியானது. இதை அவரது சுயசரிதை என்றும் சொல்லலாம். அது பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில் 1943-ல் வெளியான ‘ஃபௌண்டன் ஹெட்’ அவருக்குப் பெரும் புகழையும் மதிப்பையும் பெற்றுத்தந்தது. அவரது படைப்பின் உச்சமான ‘அட்லஸ் ஸ்ரக்ட்’ 1957-ல் வெளியானது. அதன்பின் அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார். 1982-ல் அவர் மறையும்வரை தன் சித்தாந்தங்களைப் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

ஒரு நல்ல எழுத்தாளரின் நாவல்கள் இருளடைந்த பாதையில் பாயும் ஒளியாக மட்டுமே இருக்க வேண்டும், நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் விரல்களாக மாறக் கூடாது. ஆனால் அயன் ரேண்டின் எழுத்துகள் ஒளியாகவும் இருந்தன, இழுத்துச் செல்லும் விரல்களாகவும் இருந்தன. இதனால், வெளிச்சத்தின் தெளிவில் தம் வாழ்வை வாழ்வதற்குப் பதில் அந்த விரலை வடிவமைத்த அயன் ரேண்டின் வாழ்வைப் பலர் வாழ நேரிட்டது. இன்றும் பலர் அப்படி வாழ்கிறார்கள். தன் எழுத்தை ஒரு இசமாகவே மாற்றி வாசகர்களை அதைப் பின்பற்றும்படி செய்ய அயன் ரேண்டால் இது எப்படி முடிந்தது? வரும் வாரங்களில் பார்ப்போம்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்