பெ
ண்கள் எப்போது விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார்கள்? உலகின் விளையாட்டுத் திருவிழா என்றழைக்கப்படும் ‘ஒலிம்பிக்’ போட்டிகளில் இருந்துதான் பெண்களின் விளையாட்டு வரலாறும் தொடங்குகிறது.
பண்டைக் காலத்திலேயே ஒலிம்பிக் விளையாடப்பட்டாலும், 19-ம் நூற்றாண்டில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள்தான் நவீனகாலத்தில் பெண்களை மைதானத்துக்கு அழைத்துவந்தன. ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸில் 1896-ல் முதல் ஒலிம்பிக் போட்டி நடந்த மைதானம் ஆண்களால் மட்டுமே நிரம்பியிருந்து. வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஒலிம்பிக் போட்டி, பெண்களின் பங்கேற்பு இல்லாமல்தான் தொடங்கியது.
1900-ல் பாரிஸில் நடந்த இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால், 1,066 பேர் பங்கேற்ற அந்த ஒலிம்பிக்கில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்கள் இருந்தனர் - வெறும் 12 பேர் மட்டுமே. கோல்ஃப், வில்வித்தை ஆகிய இரு பிரிவுகள் மட்டுமே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவுகளும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு மாறாக கூடுவதும் குறைவதுமாகவே இருந்தன.
தடை பல கடந்து
அந்தக் காலத்தில் பெண்களின் பங்கேற்பு விளையாட்டுகளில் குறைவாக இருந்ததற்குப் பழமைவாதத்தில் ஊறியிருந்ததும் ஒரு காரணம். இன்றும்கூட அடிப்படைவாதம் கோலோச்சும் நாடுகளில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரத்தடை உள்ள நிலையில், அந்தக் காலத்தில் இருந்த தடைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனால், இதுபோன்ற தடைகளை உடைத்துதான் விளையாட்டில் பெண்கள் களம் கண்டார்கள்.
அந்த வகையில் ஜப்பான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் முன்முயற்சி முக்கியமானது. ஒலிம்பிக்கைத் தாண்டி தொடர்ச்சியாக மகளிர் விளையாட்டுகளில் பங்கேற்பதை இந்த நாடுகள் ஊக்குவித்தன. மேலை நாடுகளில் சர்வதேச பெண்கள் விளையாட்டு தொடர்பான மாநாடுகள் நடந்தேறின. இது பெண்கள் அதிக அளவில் விளையாட்டில் ஈடுபட உதவியது. 1960-க்குப் பிறகு பெண்கள் பங்கேற்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமல்லாமல் பொதுவாகவே விளையாட்டுகள் இருபாலருக்கும் சொந்தமாயின.
118 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம்பிக்கில் தொடங்கிய இந்த வரலாறு, இன்று பெண்கள் பிரிவுகளும் அணிகளும் இல்லாத விளையாட்டுகளே இல்லை எனும் அளவுக்கு ஆலமரம்போல் கிளைபரப்பி நிற்கிறது. 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் வீராங்கனைகளின் பங்கேற்பு ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருந்ததே இதற்கு சாட்சி. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த வீரர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பு 45 சதவீதமாக இருந்தது. அதேபோல பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவுகளும் ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருந்தன.
இந்தியாவின் வெற்றி முகங்கள்
சர்வதேச அளவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு தொடங்கியது என்றால், இந்தியாவில் அது தலைகீழாக உள்ளது. 1950-களுக்குப் பிறகுதான் ஆடுகளங்களில் பெண்களைப் பார்க்க முடிந்தது. 1952-ல் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடந்த ஒலிம்பிக்கில்தான் இந்தியா சார்பில் ஒரு பெண் களம் கண்டார். அவர், மேரி டிசோசா. தடகளப் பிரிவில் பங்கேற்ற அவர், ஹாக்கி வீராங்கனையும்கூட.
அன்று ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பெண் என்ற அளவில் தொடங்கிய இந்திய வீராங்கனைகளின் பயணம் இன்று வேகமெடுத்திருக்கிறது. 2016 ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்குமா என நாடே எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில், பி.வி. சிந்து, சாக்ஷி மாலிக் இருவரும் அந்தக் கனவை நிறைவேற்றிக் காட்டினார்கள். அவர்களால்தான் இந்தியா பதக்கப் பட்டியலில் இடமே பிடித்தது.
புத்தாயிரம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவில் பி.டி. உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் என சில பெண்ளே விளையாட்டின் முகங்களாக இருந்தனர். இன்றோ தனிநபர் விளையாட்டுகள், குழு விளையாட்டுகள் என இரு பிரிவுகளிலும் முத்திரை பதிக்கும் வீராங்கனைகள் ஏராளம். இந்தியாவுக்காக அவர்கள் வெற்றிகளைக் குவித்தவண்ணம் இருக்கிறார்கள். இளம் பெண்கள் தொடர்ச்சியாக விளையாட்டில் அணிவகுத்துவர அவர்கள் தூண்டுகோலாகவும் இருக்கிறார்கள்.
விளையாட்டு மைதானத்திலும் பெண்கள் தங்கள் திறமையைப் பறைசாற்றிவரும் இந்த வேளையில் முத்திரை பதித்த வீராங்கனைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். அப்படித் தடம் பதித்தவர்களின் வெற்றி வரலாற்றைச் சொல்வதே ‘ஆடும் களம்’ பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றிப் பாய்ச்சலைப் பார்ப்போம்.
(வருவார்கள் வெல்வார்கள்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago