வழிகாட்டிகளே திசைமாற்றலாமா?

By ரீனா ஷாலினி

ல்வித் துறையில் மலிந்திருக்கும் ஊழல் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவருவது உண்டு. அதேநேரம், ஊழலுக்குக் கொஞ்சமும் குறையாமல் நடந்துகொண்டிருக்கும் பாலியல் கொடுமைகள் பற்றிப் பலரும் பேசத் துணிவது இல்லை.

இப்போது ‘ஆடியோ’ வடிவில் வெளியாகி அது அம்பலத்துக்கு வந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கும் விடுதியில் தங்கியிருந்தேன். அங்கிருந்த மற்ற மாணவிகள் எல்லாரும் என்னைவிட இளையவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் இளநிலை பயின்றவர்கள். அச்சு அசலாக இப்போது நடந்தது போலவே மூளைச்சலவை செய்ய முயன்ற தங்கள் கல்லூரி ஆசிரியை ஒருவரைச் சமாளிக்க முடியாமல், அவர்களுள் இருவர் என்னிடம் உதவி கேட்டார்கள்.

உயிரைக் குடித்த பேராசிரியர்

அவர்கள்தாம் ‘புனித’ கல்வித் துறையின் இன்னொரு முகத்தை எனக்குக் காட்டினார்கள். அந்த மாணவிகள் யாரிடமும் புகார் கொடுக்கப் பயந்து போய் இருந்தனர். கிராமத்தில் இருந்து வந்திருந்த முதல் தலைமுறை மாணவர்கள் அவர்கள். வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்கள். நேர்ப்பேச்சு தவிர, எந்த ஆதாரமும் இல்லை. வெளியே தெரிந்தால் அவமானம். ரொம்ப நாட்களாக அவர்களுடன் பழகி, அவர்களது வறுமையான பின்புலத்தைத் தெரிந்துகொண்ட, அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஆசிரியைதான் இதற்குத் தூண்டியவர். இந்தச் சம்பவத்தைப் போலவே செய்முறைத் தேர்வில் கைவைக்க மாட்டேன் என ‘அன்பாக’ எடுத்துச் சொல்லியுள்ளார். எனக்குக் கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டாலும் தப்பிக்கச் சில தந்திரங்களை மட்டும்தான் என்னால் சொல்லிக் கொடுக்க முடிந்தது. தந்திரங்கள் வேலையும் செய்தன.

முழு நேர பி.ஹெச்.டிக்காகப் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்த தோழியின் தோழி ஒருவர், ஏற்கெனவே திருமணமான ஆய்வு வழிகாட்டியுடன் கிட்டத்தட்ட ‘லிவிங்டுகெதர்’ வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டது இன்னொரு வேதனைச் சம்பவம். ஆய்வுக் காலம் முடிந்ததும் கிளம்பிவிடுவார் என்பதால் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கவிடாமல் வெளிப்படையாகத் தடைகளை ஏற்படுத்திவந்தார் அந்தப் பேராசிரியர். தொடர்ந்து தன்னுடன் உறவைத் தொடர அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். இயலாமையாலும் குற்றவுணர்வாலும் அந்த மாணவி இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். சக மாணவர்களுக்கு உண்மை தெரிந்தும் எங்கும் புகார் செய்யப்படவில்லை.

தடைபட்ட ஆய்வுப் படிப்பு

இதுபோல முழுநேர பி.ஹெச்.டிக்காகப் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்த என் தோழி, ஆய்வு வழிகாட்டியின் பாலியல் சீண்டல்களிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஆய்வைக் கைவிட முடிவுசெய்தார். திருமணம் நிச்சயம் ஆனதாகவும் கணவர் வீட்டாருக்கு ஆய்வைத் தொடர விருப்பம் இல்லை என்று பொய் சொல்லிப் பார்த்தார். ஆனால், வருங்காலக் கணவரிடம் பேசிப் புரியவைத்து ஆய்வைத் தொடர வழிசெய்வதாக, அந்த வழிகாட்டி சொல்லியுள்ளார். வேறு வழியில்லாமல் தோழி தன் அம்மாவிடம் மட்டும் உண்மையைச் சொல்லி, அவரை அழைத்துப்போய் வழிகாட்டியைச் சந்தித்து, மாப்பிள்ளை வீட்டார் உறுதியாக மறுப்பதாகச் சொல்லி ஆய்வு வழிகாட்டியின் சம்மதத்துடன் ஆய்வைக் கைவிட்டார். சில ஆண்டுகள் கழித்து அதே பல்கலைக்கழகத்தில் பெண் பேராசிரியர் ஒருவரிடம் இப்போது ஆய்வுப் படிப்பை அவர் தொடர்கிறார்.

கல்லூரிக் காலத்தில் பெருமதிப்பு வைத்திருந்த பேராசிரியர் ஒருவரைப் பற்றி என் சீனியர் மாணவி சொன்னதைக் கேட்டுத் தலையே சுற்றியது. அந்த அக்காவை நான் சந்தித்தபோது இருவரும் குறிப்பிட்ட கல்லூரியிலிருந்து வெளியேறி மேற்படிப்புக்காக வேறு ஊருக்குச் சென்றிருந்தோம். ஒரு கருத்தரங்கில் சந்தித்துக்கொண்டோம். அவரது படிப்பில் தனிப்பட்ட அக்கறை காண்பித்த அந்த ஆசிரியர், அவரது குடும்ப நண்பராக மாறி தொந்தரவு செய்த கதையை அப்போது எனக்குச் சொன்னார். அவருக்கு உள்ளே இருந்த வேதனையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பது போல கடகடவென என்னிடம் கொட்டினார். விடுமுறை நாட்களிலும் தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்தப் பேராசிரியர் மீது அந்த அக்காவின் வீட்டாருக்கோ பெருமதிப்பு, பூரித்துப் போனார்கள். ஆசிரியர்கள் அனைவருக்கும் சில மாணவர்கள் செல்லப் பிள்ளைகளாக இருப்பது உண்டு. அதனால் அவர் காண்பித்த தனிப்பட்ட அக்கறை பற்றித் துறையிலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. வார விடுமுறைத் தொலைபேசி அழைப்புகள், தினசரி அழைப்புகளாக மாறத் தொடங்கியதும் அந்த அக்கா அசவுகரியமாக உணரத் தொடங்கினார். உள்ளுக்குள் ஏதோ ஒன்று நெருடத் தொடங்கியிருக்கிறது. ஆசிரியரின் அழைப்பைத் தவிர்த்ததால் வீட்டினரும் அந்த அக்காவைத் திட்டி அறிவுரை சொல்லியிருக்கின்றனர். மகளுக்கு நல்லது என அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

மதிப்பெண் மிரட்டல்

இனி வீட்டுக்குத் தொலைபேச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவரிடம், ஆசிரியர் வெளிப்படையாகவே தன் முகத்தைக் காட்டினார். ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என அவர் சொன்னதைக் கேட்டு அக்கா அதிர்ச்சி அடைந்தார். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை அவர். அந்த அக்கா அவரிடம் இடைவெளியை ஏற்படுத்த முயன்றதும், தன் தொல்லையை அந்த பேராசிரியர் அதிகப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ‘என் மனைவியை நெருங்கும் போதெல்லாம் உன் நினைப்புதான் வருகிறது’ என்று அவர் சொன்னதும், அவர் மேல் இவருக்கு அருவருப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கல்வியாண்டு முடிந்ததும் அந்த அக்காவைத் தொடர்புகொள்ள முடியாது என்பதால், தன் வீட்டுக்கு வரவழைக்கத் திட்டமிட்டார். மனைவியும் வேலைக்குச் சென்றுவிட கல்லூரி விடைத்தாள்கள், அது இதென்று சாக்கு சொல்லி வீட்டுக்கு வரவழைத்தார். இவரோ தோழிகளுடன் செல்ல, அவர் ஏமாந்துபோயுள்ளார்.

“பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி என் கீழ்தான் நடக்கும். உன்னைத் தோற்கடிப்பேன். என் தற்கொலைக்கு நீதான் காரணம் என எழுதிவைத்து சாவேன், உனக்குக் கல்லூரியில் காதலன் இருப்பதாக வீட்டில் சொல்வேன்” என மிரட்டித் தனியாக வீட்டுக்கு வரவழைப்பதில் அந்தப் பேராசிரியர் வெற்றி கண்டார். ஒரு மதிய வேளையில் வீட்டுக்குச் சென்ற தன் மாணவியிடம் அந்த ஆசிரியர் நடந்துகொண்டதை இங்கு பதிவுசெய்ய முடியாது.

மருத்துவக் கல்லூரி ஒன்றில் ஆசிரியரின் பாலியல் தொல்லையை நிர்வாகத்திடம் புகார் செய்தும், ஆசிரியர் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மருத்துவ ஆசிரியர் தன் அரசியல் பின்புலம் தந்த தைரியத்தில், தொடர்ந்து அந்த மாணவியை வெளிப்படையாகத் தொந்தரவு செய்துகொண்டிருந்தார். பொறுத்துப் பார்த்த சக மாணவ மாணவிகள், அவரைத் தாக்கி ஓர் அறைக்குள் பூட்டி வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த மருத்துவ ஆசிரியரைத் தற்காலிக விடுப்பில் அனுப்பி இடமாற்றம் செய்தது நிர்வாகம். மீண்டும் அவர் பணிக்குத் திரும்ப முயன்றபோது, ஊடகங்களில் அவரது பாலியல் தொந்தரவுகளைச் சொல்லிவிடுவதாக மிரட்டி, அவரை வெளியேற்றினர் மாணவர்கள். இதுபோன்ற உதாரணச் சம்பவங்கள் அபூர்வமாகத்தான் நடக்கும்.

மாணவர்களின் நல்ல எதிர்காலத்துக்குப் பாடுபடும், ஒரு நண்பனைப் போல் அவர்களது சுகதுக்கங்களில் பங்குகொள்ளும், தனது சொந்தப் பணத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைச் செலுத்தும் பேராசிரியர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், தன் வழிகாட்டுதலின் கீழ் ஆய்வுசெய்யும் மாணவிகளைத் தனியறைக்குள் வைத்துப் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கும் பேராசிரியர்கள் இப்போதும் பணியில் இருக்கவே செய்கிறார்கள். ஆய்வுக் காலம் முழுவதும் இதைச் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்தான் பெரும்பாலான மாணவிகள் இருக்கிறார்கள். இதற்கு எப்போதுதான் தீர்வு வரும்?

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: svsreena@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்