பிரிக்க முடியாதது எதுவோ? தமிழ் சினிமாவும் காதலும் எனக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். சமீபத்தில் வெளியாகிப் பேசப்படுகிற படமாக பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கௌரி பிரியா நடித்த ‘லவ்வர்’ உள்ளது. தற்காலத்துக்கு அவசியம் தேவைப்படும் ஒரு கதைக்கருவை யதார்த்தத் துக்கு நெருக்கமாகச் சொல்ல முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்கள் பெருமளவு ரசிகர்களால் ரசிக்கப்படும் காலத்தில் ‘லவ்வர்’ மாதிரியான படங்களின் வரவு மிகப் பெரிய ஆசுவாசம்.
மிக முக்கியமானதொரு மாற்றத்தை இந்தப் படம் வெளிப் படுத்தியுள்ளது. காதலர்கள் பிரிவது என்பது தமிழ் சினிமாவில் அபூர்வம். எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் அல்லது இந்த உலகிலிருந்தே விடை பெற்றுவிடுவார்கள். மாறாக இந்தப் படத்தில் காதலர்கள் பிரிகிறார்கள். பிரிந்த பின்னர் வாளை எடுத்துக் காற்றில் சுழற்றிக்கொண்டு இருப்ப தில்லை. அதற்குப் பதிலாக மனிதர்களையும் வாழ்க்கை யையும் புரிந்துகொண்டு நகர்ந்து செல்கிறார்கள்.
பிரச்சாரமில்லை...
‘லவ்வர்’ படத்தில் அருணும் திவ்யாவும் கல்லூரிக் காலத்தில் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கல்லூரி முடித்த பின் திவ்யாவுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. அருணுக்கு வேலை கிடைக்கவில்லை. காதலிலும் வாழ்க்கையிலும் அருணுடைய போக்கு தடம்புரண்ட ஒன்றாகிறது. ‘பொசசிவ்’ என்கிற நிலையிலிருந்து தன் காதலியின் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பது, அதன் வழியாக அவளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்வதே அருணின் முழுநேர வேலையாகிறது. அருணின் இந்தப் போக்கை, முந்தைய தலைமுறை காதலர்களைப் போலவோ, தமிழ் சினிமாவில் ஆணி அடித்து இறக்கப்பட்ட பிம்பக் கதாநாயகி களைப் போலவோ திவ்யா ஏற்றுக் கொள்ளவில்லை.
» பாஜகவின் அடிமை ஜெகன்: ஷர்மிளா விமர்சனம்
» ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை: காங்கிரஸ் வாக்குறுதியும் பின்புலமும்
படத்தில் திவ்யாவின் கதாபாத்திரம், வெளிப்பூச்சுகள் இல்லாத சாதாரண பெண்ணாகவே காட்டப்பட்டிருக்கிறது. காதலைக் கையாள்வதில் தனக்குள்ள குழப்பத்தைக் குறித்து அலுவலக நண்பர்கள், அறைத் தோழிகளிடம் அவள் கலந்துரையாடுகிறாள். படத்தின் முக்கியமான கட்டங்களில் ‘உனக்கு இது ஒகேவா?’, ‘எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடு’ என்று அவளுக்கு அறிவுறுத்தவும் தோள் கொடுக்கவும் தோழிகள் இருக்கிறார்கள்.
காதலையோ காதலனின் கட்டுப்பாடுகள், வசை, எரிச்சல் போன்றவற்றையோ திவ்யா அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவள் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் எதிர்ப்புத் தெரிவிக்கிறாள். மேற்கண்ட அம்சங்கள் எல்லை மீறும்போது, அவளால் முடிந்த வகைகளில் எதிர்வினையாற்றுகிறாள். அது படிநிலைகளாகத் தீவிரம் பெறுகிறது. இந்தப் படம் கையில் மைக் எடுத்து, கத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. படத்தின் அடுக்குகளைச் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் போது, இந்தப் படைப்பின் மூலம் இயக்குநர் நமக்கு என்ன கடத்த நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
‘லவ்வர்’ என்கிற தலைப்பை ஒரு காரணத்துடன் நகை முரணாகவே இயக்குநர் வைத்துள்ளார். பொதுவாகத் தமிழ்ச் சூழலில் லவ்வர் என்று அறியப்படுபவன் எப்படிப்பட்ட ‘டாக்சிக்’கான, சக மனிதர்களை வாழ விடாமல் அழிப்பவனாக இருக்கி றான் என்பதை இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆணாதிக்கத்துக்கு அடி
இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்றி ருந்தாலும், கதைப்படி அவர்தான் வில்லன். தான் என்ன மாதிரியான மோசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தப்போகிறோம் என்பதைச் சரியாக உணர்ந்து அவர் பிரதிபலித்துள்ளார். அதேபோல் நாயகி, இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொருவரும் படத்தின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு தங்கள் பங்கைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை நிராகரித்தும் குற்றஞ்சாட்டியும் சமூக ஊடகங்களில் பலர் கருத்துத் தெரிவித்து வருகி றார்கள். ஒரு சமூகமாகவும் தனிப்பட்ட வகையிலும் நாம் எந்த அளவுக்கு மாறி யுள்ளோம் அல்லது மாறத் தயாராக உள்ளோம் என்பதையே இந்த எதிர் வினைகள் வெளிப்படுத்துகின்றன.
நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையற்ற, அறிவுக்கு ஒவ்வாத திமிரை எல்லா ஆண்கள் மனதிலும் இந்தச் சமூகம் ஏற்றிவைத்திருக்கிறது. பெண்கள் எவ்வளவு நெகிழ்வாக இருந்தாலும் ஆணா திக்கம், மதம், சாதி, பொருளா தார நிலை உள்ளிட்ட சமூகப் பின்புலங்கள் சமூகப் புரிதலின்மைகளையும் தேவை யற்ற சுமைகளையும் ஆண்கள் தலையில் ஏற்றி வைத் துள்ளன. காதலுக்காக அவற்றைக் கைவிடவோ மாறவோ அருண் போன்ற ஆண்கள் தயாராக இல்லை என்ப தையே படம் சொல்லிகிறது.
நம் சமூகம் ஆண்களை எப்படி வளர்க்கிறது என்கிற கேள்விக்கு விடை காணாமல், அருண் ஏன் இப்படி இருக்கிறான் என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. என்னதான் மனரீதியில் தன் அப்பாவிடமிருந்து அருண் விலகியிருந்தாலும், பொறுப்பற்ற தந்தையின் தாக்கம் வாரிசுகள் மீது மறைமுகமாக இருக்கவே செய்யும் என்றே உளவியல் மருத்துவமும் சொல்கிறது. அதை மீறித் தங்களைக் கண்டடைவதுதான் மனிதர்களுக்கு உள்ள சவால். ஆண்களை மாறச் சொல்லி வெவ்வேறு தரப்புகளிலிருந்து அழுத்தம் வந்தாலும், அறிவுக்கு ஒவ்வாதவற்றைக் கைவிடத் தயாராக இல்லாத ஆண்களை இந்தக் காலச் சாதாரணப் பெண்களும் ஏற்க மாட்டார்கள் என்பதையே இயக்குநர் கூறியுள்ளார்.
நுட்பமும் பக்குவமும்
வழக்கமான ஒரு சினிமாபோல், அருணின் சித்திரவதைகளைப் பொறுத்துக்கொண்டு வழக்கமான சினிமா நாயகிகள்போல திவ்யா வும் அருணை ஏற்றுக்கொண்டு விடுவாரோ என்கிற பதற்றம் அவளுடைய தோழிகளைப் போலவே நமக்கும் ஒரு கட்டத்தில் தொற்றிக்கொள்கிறது. இவர்கள் சேரக் கூடாது என நாமே நினைக்கத் தொடங்கி விடுகிறோம். அந்த வகையில் தான் கடத்த நினைத்த செய்தி யில் இயக்குநர் வெற்றி பெற்று விட்டார்.
சமமற்ற காதல் உறவு குறித்து ஒவ்வொரு தருணத்திலும் அருணுக்குப் பல்வேறு வகை களில் திவ்யா உணர்த்துகிறாள். அருண் தன்னைக் கட்டுப் படுத்துகிறான் என்பது புரியத் தொடங்கிய பிறகும், திவ்யா வின் கண்ணைக் காதல் சற்றே மறைக்கிறது. சற்று பொறுமை காக்கிறாள். ஆனால், அருணின் போக்கு தொடரும்போதும் தன் சுயத்தின் முக்கியத்துவத்தை அவள் உணரும்போதும் அருணை விட்டு விலகுகிறாள். காதலுக்காகத் தன்னைப் பலி கொடுக்க அவள் தயாராக இல்லை. உடல் வன்முறை மட்டும் வன் முறையல்ல, வார்த்தை வன்முறை யும் ஒருவரை நடத்தும் முறையும்கூட வன்முறைகளே என்பதை இந்தப் படம் தெளிவாகக் கூறியுள்ளது. திவ்யாவின் உள வியல் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டி ருக்கும் என்பதற்குள் இப்படம் செல்லவில்லை. அது அவசியம் காட்டப்பட்டிருக்க வேண்டும்.
படத்தின் கிளைமேக்ஸை முன்வைத்து அருணின் தவறுகளை திவ்யா ஏற்றுக் கொண்டுவிட்டது போலவும், அப்படியெல் லாம் ஒருவன் மாறுவது எப்படிச் சாத்தியம் என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். திவ்யாவிடம் இருந்து விலகிய பிறகு தன் கனவான ஒரு கஃபேவை அருண் ஆரம்பிக்கிறான், அதை வெற்றிகரமாகத் தொடர்கிறான். படத்தின் மையப்பொருள் காதலன் புரியும் இவ்வளவு தவறுகளுக்குப் பிறகும் காதலர்கள் சேர்ந்தார்களா என்பதுதான். கதைப்படி அவர்கள் சேர்வ தில்லை. காதலில் தோற்றதால், வாழ்க்கையின் மற்ற அம்சங் களிலும் அவன் வெற்றிபெறக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்?
‘லவ்வர்’ படம் ஆண்கள் தலையில் வலுவாக ஓர் அடி அடித்து, ‘முட்டாளே இப்படி இருந்து தொலைக்காதே’ என்றும், பெண்களிடம் ‘திவ்யா வைப் போல் மறுக்கப் பழகு - உறவில் சமமற்ற ஒரு காதலைத் தாண்டி வாழ்க்கை என்பது பெருசு’ என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இயக்குநருக்கு இது தான் முதல் படம். ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்கருவை மிக நுட்ப மாகவும் பக்குவமாகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago