குழந்தைகளைப் படம் எடுப்பதும் பறவைகளைப் படம் எடுப்பதும் சவால் நிறைந்த கலை. அதற்கு நாம் குழந்தையாகவும் பறவையாகவும் மாற வேண்டும். குழந்தைகளையாவது கொஞ்சிக் குலாவிப் படம் எடுத்துவிட முடியும். ஆனால், பறவைகளைப் படம் எடுக்க எல்லையில்லாப் பொறுமை வேண்டும்.
அப்படியான பொறுமை கைவரப் பெற்றதால் ராதிகா ராமசாமி, ‘இந்தியக் காட்டுயிர் ஒளிப்படத் துறையில் சுவடு பதித்த முதல் பெண்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
கணினிப் படிப்பும் கேமராவும்
ராதிகா எடுத்த பறவைகளின் ஒளிப்படங்கள் தனித்துவமானவை. பறப்பவை, இரையைப் பிடிப்பவை, சண்டையிடுபவை, காதலில் கிறங்குபவை, கூடு கட்டுபவை எனப் பறவைகளின் அரிதான தருணங்களை அவர் படம்பிடித்திருப்பார். அதுவே ராதிகாவுக்கு ‘ஆக்ஷன் போட்டோகிராஃபர்’ என்ற செல்லப் பெயரை, சக ஒளிப்படக் கலைஞர்களிடம் இருந்து பெற்றுத்தந்தது.
பல ஆண்டுகளாக டெல்லியில் வசித்தவர், சமீபத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.
“என் சொந்த ஊர் தேனி மாவட்டம் வெங்கடாசலபுரம். அப்பா ராமசாமி, ராணுவத்துல இருந்தார். அம்மா தாயம்மா, டீச்சர். அது 1986. பொண்ணுங்க இன்ஜினீயரிங் படிக்கறதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில அந்தப் பகுதியில இருந்து இன்ஜினீயரிங் படிக்கவந்த முதல் பொண்ணு நான். அதுவும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்” என்று புன்னகைக்கிறார் ராதிகா.
பொறியியல் முடித்ததும் எம்.பி.ஏ. படித்தார். விடுமுறை நாள் ஒன்றில் ஆக்ராவுக்குக் குடும்பத்தோடு சென்றார். அந்த இடத்தின் அழகைக் கண்டு பிரமித்தவருக்குத் தன்னிடம் ஒரு கேமரா இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியிருக்கிறது. அதை உடனே தந்தையிடம் சொல்ல, அவரும் ஃபிலிம் கேமராவை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
“அப்ப எங்க வீட்டுக்குப் பின்னாடி தோட்டம் இருந்தது. செடி, மரம், பூன்னு பார்க்கிறதை எல்லாம் போட்டோ எடுத்தேன். ஸ்கூல்ல பயாலஜி குரூப் எடுத்ததால, ‘ஹெர்பேரியம்’ பண்றதுக்காக அடிக்கடி தேக்கடிக்கு ஃபீல்ட் டிரிப் போவோம். அங்க யானைகள், குரங்குகளை எல்லாம் போட்டோ எடுத்தேன்” என்று சொல்லும் ராதிகா, 90-களின் மத்தியில் வேலை தொடர்பாகப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.
“அப்போ எல்லாம் ‘டிராவல் போட்டோகிராபி’யிலதான் கவனம் செலுத்தினேன். 2004-ல் டிஜிட்டல் கேமரா வர ஆரம்பிச்சது. அப்பவே யாஹூ குரூப்ஸ் எல்லாம் இருந்துச்சு. அதுல நிறைய போட்டோகிராபர்கள் உறுப்பினர்களா இருந்தாங்க. நாங்க அடிக்கடி டெல்லியில சந்திச்சிப்போம். ஒருத்தருக்கு ஒருத்தர் நிறைய ‘டிப்ஸ்’ கொடுத்துப்போம்” என்று சொல்லும் ராதிகா, ‘போட்டோகிராபர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ குழுவின் நிர்வாகியாக இருக்கிறார்.
காடு காலண்டர் கேமரா
ராஜஸ்தானில் இருக்கும் பரத்பூர் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்றது ராதிகாவின் வாழ்க்கையில் முக்கியமானது.
“அவ்ளோ பறவைகளை ஒரே இடத்தில் அப்போதான் முதன்முதலாப் பார்த்தேன். அந்த ஆர்வத்துல நிறைய படங்கள் எடுத்துத் தள்ளினேன். அப்புறம் ‘பிராசஸ்’ பண்ணிப் பார்த்தா, எல்லாப் பறவைகளும் படத்துல குட்டி குட்டியா இருந்தன. அப்போதான் பறவைகளைப் படம்பிடிக்க அதுக்காக இருக்கற லென்ஸ் வாங்கணும்னு தெரிஞ்சுது.
அப்ப எல்லாம் இந்தியாவுல ‘வைல்ட்லைஃப் போட்டோகிராபி’ அவ்வளவா பிரபலமாகலை. அன்னைக்குக் காட்டுயிர்களைப் படம் எடுக்குறதுன்னா, ஆப்பிரிக்காவுக்குத்தான் இந்தியர்கள் பலரும் போவாங்க. ஆனா, பல வெளிநாட்டுக்காரங்க இந்தியக் காடுகளைத் தேடி வருவாங்க. அவங்களுக்கு நம் காடுகளின் பெருமை பற்றித் தெரிஞ்சிருந்தது” என்கிறார் ராதிகா.
பிறகு, ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, லடாக் எனப் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அங்கு அவர் எடுத்த படங்களை ‘பிபேஸ்’ (PBase) இணையதளத்தில் வெளியிட்டுவந்தார். அதைப் பார்த்த ஒரு நிறுவனம் ‘கிளீன் கங்கா’ பிரசாரத்துக்குப் படம் எடுக்க ராதிகாவை அணுகியது.
“என்னோட முதல் ‘கமிஷண்டு புராஜெக்ட்’ அதுதான். கங்கையோட அழகை மட்டு மல்லாமல் அதோட சூழல் சீர்கேட்டையும் போட்டோ மூலமா சொல்லணும். அதுவும் அந்தப் பிரசாரத்தை நடத்துறவங்க திருப்தியடைகிற மாதிரி எடுக்கணும். அதைச் சவாலா நினைத்துப் படங்கள் எடுத்தேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்தது” என்கிறவருக்கு டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. அந்த வளாகத்தில் இருக்கிற பறவைகளைப் படம் எடுத்து, 2007-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடும் திட்டத்தின் ஓர் அங்கமாக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.
“அப்ப சுமார் 75 பறவை இனங்களுக்கு மேல அங்கே இருப்பது தெரிய வந்துச்சு. அதற்கு முன்னாடி அங்க என்னவிதமான பறவைகள் இருக்குங்கிறதைப் பத்தி யாரும் ஆய்வு செய்யலை. என்னோட படங்களைப் பார்த்துத்தான் பலரும் தெரிஞ்சிக்கிட்டாங்க. அப்பதான் ‘பெட்டர் போட்டோகிராபி’ங்கிற ஒளிப்பட இதழில் என்னைப் பற்றிய கட்டுரை முதன்முதல்ல வந்தது.
அதுலதான், என்னோட முதல் படமும் வெளியாச்சு. அதுக்கு முன்னாடிவரை நான் யாருங்கிறதை எங்கும் வெளிப்படுத்திக்கிட்டதே இல்லை” என்கிறார். ராதிகாதான் இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் என்ற தகவலை, தூர்தர்ஷன்தான் அவருக்குத் தெரிவித்தது. தவிர, ‘இணையதளத்தில் முதல் பிரபல ஒளிப்படக் கலைஞர்’ என்ற பெருமையையும் பல ஆண்டுகளாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ராதிகா.
காட்டுயிர் ஒளிப்பட சவால்கள்
ஆப்பிரிக்கா, மலேசியா என மாதத்தின் பல நாட்கள் ஏதோ ஒரு நாட்டில் உள்ள காட்டில் காட்டுயிர்களை கேமராவுடன் பின்தொடர்கிறார் ராதிகா.
“ஆப்பிரிக்காவுல எல்லாம் செல்போன் மூலமாகூட நல்ல படங்களை எடுத்துலாம். ஆனா, இந்தியாவுல அப்படி முடியாது. காரணம், இங்க அவ்வளவு சீக்கிரத்துல புலியோ சிங்கமோ வெளியே வந்துடாது. பறவைகளை போட்டோ எடுக்கிறதுக்குக் குளிர்காலம்தான் சரியான நேரம். அப்போ குளிர்ல நடுங்கிக்கிட்டுப் படம் எடுக்கணும். வெயில் காலத்துலதான் புலிகள் தங்களோட இருப்பிடத்தில இருந்து வெளியே வரும். அதுக்காக சுட்டெரிக்கும் வெயில்ல பல மணி நேரம் வியர்வையில நனைஞ்சு காத்துக்கிடக்க வேண்டியிருக்கும்.
இதை எல்லாம் தாண்டி பணம் ரொம்ப முக்கியமான விஷயம். எல்லோருமே ‘வைல்ட்லைஃப் போட்டோகிராபி’ செஞ்சிட முடியாது. ஒவ்வொரு லென்ஸோட விலையும் லட்சக்கணக்குல இருக்கு. அப்புறம் நீங்க நிறைய பயணிக்க வேணும். அதுக்கான செலவுகள் தனி. அதனால இந்தத் துறைக்கு வர்றவங்களுக்கு நான் எப்பவும் சொல்றது, ‘ஃபேஷன் போட்டோகிராபி, டிராவல் போட்டோகிராபின்னு வேற ஏதாவது ஒரு தொழிலை உங்களுக்கு ‘பேக் அப்’பா வச்சுக்கோங்க’ என்பதுதான்” என்று காட்டுயிர் ஒளிப்படம் எடுப்பதில் உள்ள சவால்களைப் பற்றிச் சொன்னவர், புதிதாக வருபவர்கள் காட்டில் பின்பற்ற வேண்டிய விதிகளையும் பகிர்ந்துகொண்டார்.
“காட்டுயிர்கள் தங்களை போட்டோ எடுக்க நம்மைக் கூப்பிடலை. நாம்தான் அவற்றைப் படம் எடுக்கிறோம். அதனால் அந்த உயிரினங்களை தொந்தரவு பண்ணக் கூடாது. அந்த உயிர்களோட பாதுகாப்புதான் எப்பவும் முதன்மையா இருக்கணும். போட்டோகிராபி இரண்டாவதுதான்” என்கிறவர், தன் ஒளிப்படங்களுக்காக தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார். இவர் எடுத்த ஒளிப்படங்கள், இயற்கை, காட்டுயிர் தொடர்பான பல சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago