வாசிப்பை நேசிப்போம்: ‘கதை புக்கு படிச்சி என்ன பண்ணப்போறே?’

By Guest Author

“நீமாறிட்ட, முன்னல்லாம் இப்படி இல்ல, இப்படிலாம் பேச மாட்ட” என்று என் உறவுகள் சொன்னபோதுதான் நிதானித்துப் பார்த்தேன். அதை ஏற்றுக்கொண்டேன். காரணம், புத்தக வாசிப்பு.

கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் வகுப்பா சிரியர் கட்டாயத்தின் பேரில், இருப்பதிலேயே விலை குறைந்த சிறிய புத்தகமான மு.சுயம்புலிங்கத்தின் ‘நீர்மாலை’ என்கிற சிறு கதைத் தொகுப்பை வாங்கி னேன். சில நாள்களிலேயே அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித் தேன். ‘பிறகு’ என்னும் பூமணியின் நாவல் பாடத்திட்டத்தில் இருந்ததால் கல்லூரி நூலகத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி வகுப் பாசிரியரிடம் சில நாவல்களை வாங்கிப் படித்தேன்.

நாள்கள் நகர நகர உள்ளே சென்ற வார்த்தை கள் வெளியேறின. நான் யார் என்பதை உணர்த்தியதோடு, சக மனிதர்களிடம் எனது கருத்துகளைச் சொற்களால் கோத்து வாக்கியங்களாகப் பேசவும் புத்தக வாசிப்பே எனக்கு உறுதுணையாக இருந்தது. வாழ்க்கைப் பயணத்தை ரசிக்கவும் பல்வேறு இக்கட்டான சூழலையும் நிதானமாகக் கையாளும் தன்மையையும் புத்தக வாசிப்பே எனக்குக் கொடுத்தது.

சு.தீபிகா

“கதை புக்கு படிச்சி என்ன பண்ணப்போற?” என்று தோழிகள் கேட்கும்போது, “நீங்க ஏன் டி.வி. சீரியல் பார்க்குறீங்க?” என்று கேட்பேன். தோழிகளின் கேள்விக்கு, “என்னைப் புரிந்துகொள்ளத்தான் புத்தகங்களைப் படிக்கிறேன்” என்று பதிலளிக்காமல் விட்டு விட்டோமே என்று இப்போது தோன்றுகிறது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தி.ஜானகிராமன், சோ.தருமன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைமாந்தர்களுடன் பழகியதால் நடப்பில் என்னுடன் பயணிக்கும் மனிதர்களையும் அவர்களை அவர்க ளாகவே எற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறது.

- சு.தீபிகா, மாளந்தூர், திருவள்ளூர் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE