பெண்கள் 360: இளம் பழங்குடியின நீதிபதி

By ப்ரதிமா

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ஸ்ரீபதி, உரிமையியல் நீதிபதிக்கான தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் சாதிப்பதற்கு இனம், பொருளாதாரச் சூழல் போன்ற எதுவும் தடையல்ல என நிரூபித்திருக்கிறார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதிக்கான தேர்வை, குழந்தை பிறந்து சில நாள்களே ஆகியிருந்த நிலையில் இவர் எழுதினார். அடிப்படைத் தேவைகள்கூட எட்டாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண், கல்லூரிப் படிப்பை எட்டுவதே பெரும் சாதனையாக இருக்கும் நிலையில் நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஸ்ரீபதிக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இவர் நீதிபதியாகப் பொறுப்பேற்பார்.

பாலியல் குற்றத்தில் முன்னாள் டி.ஜி.பி.க்குத் தண்டனை

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது தமிழகத்தின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் 2021 பிப்ரவரியில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ராஜேஷ் தாஸ், கட்டாய ஓய்வில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 2023 ஜூன் 16 அன்று தீர்ப்பளித்தது. அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் பெண் அதிகாரி புகார் செய்வதைத் தடுக்கும் நோக்கில் அவரைச் சென்னைக்கு வர விடாமல் தடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தின் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

​​​​​​​

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தனது வழக்கை விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ராஜேஷ் தாஸ் வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிப்ரவரி 12, 2024 அன்று உறுதிசெய்து தீர்ப்பளித்தது. ராஜேஷ் தாஸ் வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரிய மனு அதே நாளன்று மாலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் காலையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாது என அறிவிக்கும்படி ராஜேஷ் தாஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்யக்கோரி மட்டும்தான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனால், தீர்ப்புக்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனக்கூறி மூன்று ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் காவல் பணியில் உயரிய பதவியில் இருப்பவர் மீதான பாலியல் புகாரில் இறுதிவரை உறுதியாக நின்ற பெண் அதிகாரியின் துணிவு பாராட்டுக்குரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE