இது நடந்து சில ஆண்டுகளாகிவிட்டது. இலக்கியம் பேசும் எங்கள் நண்பர் ஒருவருடைய இணையர் கர்ப்பம் தரித்திருந்தார். அப்போது அவருக்குப் பல மனக்குழப்பங்கள் ஏற்பட்டதாக நண்பர் சொல்வார். அவருக்கு வினோதமான கனவுகளெல்லாம் வருவதாகவும் சொன்னார். ஒருநாள் நண்பர் வேலைக்குப் போயிருந்த வேளையில் வீட்டில் தனியாக இருந்த அவருடைய துணைவியார், உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டார். இறந்துபோன இளம் பெண்ணின் பெற்றோர் கதறிக்கொண்டு ஓடிவந்தனர். ‘இது வரதட்சணைக் கொலை’ என்று காவல்துறையில் புகார் அளித்தனர். நண்பர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
வரதட்சணை கொலை
வரதட்சணையாக கார் வாங்கித்தரச் சொல்லிக் கேட்பதாக தங்கள் மகள் எழுதிய கடிதத்தை நண்பரின் மாமனார் கோர்ட்டில் சமர்ப்பித்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ‘அடப்பாவி’ என்று நாங்கள் அவரைச் சிறைக்குச் சென்று பார்க்கக்கூட மனமின்றி வெறுப்பாக இருந்துவிட்டோம். அந்த நாட்களில் மருமகள் பற்ற வைத்தால் மட்டும் ரிமோட் சென்சிங்கில் கண்டுபிடித்து உடனே வெடிக்கிற ஸ்டவ்வுகள் பரவலாக அறிமுகம் ஆகியிருந்த நேரம். அவர் அப்படிச் செய்திருப்பாரா என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்தாலும் போன உயிருக்கு என்ன பதில் என்கிற கேள்வியும், ‘வாங்க’ என வரவேற்று எங்களுக்கு காபி கொடுக்கும் அந்தப் பெண்ணின் அப்பாவி முகமும், அந்தப் பெண் பெற்றோருக்கு எழுதிய கடிதங்களும் எங்கள் மனங்களை ஆக்கிரமித்து நின்றன. நண்பருக்கு இன்னொரு முகமும் இருந்திருக்கிறது என்கிற கருத்து எங்கள் மனங்களில் வளரத் தொடங்கியிருந்தது. கடைசிவரை அவரைப் பார்க்கவோ அவருக்கு உதவவோ நாங்கள் யாரும் போகவில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று மௌனம் காத்துவிட்டோம்.
வழக்கு போய்க்கொண்டிருந்தது. நண்பரின் அப்பாவைக்கூட கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்ததாக நினைவு. திடீரென்று ஒருநாள் நண்பரின் அம்மா தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாங்கள் உண்மையில் ஆடிப்போய்விட்டோம். தன் ஒரே செல்ல மகன் சிறையிலிருப்பதும், ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் அவமானமும் கொலைப் பழியும் என தாங்க முடியாத மன உளைச்சலில் சிக்கிக் கடைசியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஒரு மரணம் உண்டாக்கிய துக்கத்தையும் குடும்பத்துக்கு உண்டான அவமானத்தையும் இன்னொரு மரணத்தின் மூலம்தான் சரிசெய்ய முடியும் என்று நினைத்தாரா என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இளம்பெண்ணின் மரணம் உண்டாக்கிய அதிர்வலைகளுக்கு எதிரலையாக அம்மாவின் மரணம் அமைந்தது என்னவோ உண்மைதான்.
ஆணுக்குப் பாதுகாப்பு
தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி நண்பர் ஏதோ ஒரு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். வசதியாக இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். நன்றாக இருக்கட்டும். இன்றுவரை அவரைச் சந்திக்கவில்லை. ஒரு நண்பனுக்கு ஆபத்துக் காலத்தில் உதவவில்லையே என்கிற உறுத்தலைவிட ‘நம்மகூடவே இருந்த ஒருத்தன் இப்படி செஞ்சிட்டானே’ என்கிற கோபம்தான் இப்போதும் தூக்கலாக இருக்கிறது.
அந்த நாட்களில் ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கம்’ எல்லாம் தோன்றியிருக்கவில்லை. இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் எங்கள் நண்பரின் பக்கம் நின்று, “இது வரதட்சணை சாவு அல்ல. மனக்குழப்பத்தால் விளைந்த சாவு” என்று வாதிட்டு வழக்காடி இருப்பார்கள். சந்தேகத்தின் பலனை பாதிக்கப்பட்ட இந்த ஆணுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருப்பார்கள். இதெல்லாம் என் ஊகமல்ல. இப்போது இந்தியாவில் இயங்கும் ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கங்கள்’ எல்லாம் இதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றன. வரதட்சணை குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட ஆண்களைக் காப்பாற்ற சட்ட உதவியெல்லாம் செய்வது இந்த ஆண்கள் சங்கங்கள்தான்.
பலியாவது பெண்களே
பெற்று வளர்த்த செல்ல மகளை நெருப்புக்குப் பலி கொடுத்துவிட்டுக் கதறி நிற்கும் அந்தப் பெண்ணின் பெற்றோரைப் பற்றி இவர்கள் யோசிப்பதில்லை. ‘அந்த ஆணின் அம்மா சாகவில்லையா? அது உங்கள் மனங்களை உலுக்கவில்லையா?’ என்று மட்டும்தான் கேட்பார்கள். வலுவான சட்டங்கள் இல்லாத கடந்த காலம் முழுவதிலும் வரதட்சணைக் கொலையாளிகள் இப்படித்தான் மனக்குழப்ப மரணம், அது இது என்று சொல்லித் தப்பித்துக்கொண்டிருந்தார்கள்.
எப்படிப் பார்த்தாலும் இரண்டு பெண்களைத்தான் காவு வாங்கி நிற்கிறது இந்தக் கதை. இந்தக் கதை மட்டுமல்ல எல்லாக் கதைகளுமே இப்படித்தான். ஆணின் மனைவியானால் என்ன, ஆணின் அம்மா ஆனால் என்ன? சாவது பெண்ணாகத்தானே அமைகிறது? அதற்காக ஆண் சாக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்த உறுத்தல், உளைச்சல், குற்ற மனம், அவமான உணர்ச்சி இதெல்லாம் ஆணுக்கல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.
தான் செய்வது குற்றம் என்கிற தன்னுணர்வே இங்கு ஆணுக்கு இல்லை என்பதுதான் இந்தியாவின் குரூர யதார்த்தம். டெல்லி ‘நிர்பயா’ பாலியல் வன்முறை வழக்கின் குற்றவாளி முகேஷ்சிங்கும், வழக்கறிஞர் ஏ.பி.சிங்கும் ‘இந்தியாவின் மகள்கள்’ என்கிற (இந்தியாவில் தடை செய்யப்பட்ட) ஆவணப் படத்துக்கு அளித்த நேர்காணல்கள் இந்திய ஆண் மனதின் அசலான பதிவுகள். நிர்பயாவைப் பாலியல் வல்லுறவு செய்தவன் எந்தக் கூச்சமும் குற்ற உணர்வும் இல்லாமல், “ராத்திரி நேரத்தில் அவளுக்கு வெளியில் என்ன வேலை? ஒருத்தன் தன்னைக் கெடுக்கிறான் என்று சொன்னால் அவள் பேசாம அவனுக்கு ஒத்துழைக்கணும். அப்படி ஒத்துழைச்சிருந்தா வேலை முடிஞ்சதும் அவளை அப்படியே விட்டிருப்போம். சாகடிச்சிருக்க மாட்டோம், தாக்கியிருக்க மாட்டோம். கூட வந்த பையனை மட்டும்தான் அடிச்சிருப்போம்” என்று சொல்கிறான். அவளுக்கு அந்த ‘அறிவு’ இல்லையே என்பதுதான் அந்தக் கொடூரனின் குரல்.
தன் தங்கைக்கு இப்படி நடந்திருந்தால், “சத்தமே இல்லாம அவளைப் பண்ணை வீட்டுக்குக் கொண்டுபோய் எல்லோர் முன்னிலையிலும் பெட்ரோல் ஊத்திக் கொளுத்தியிருப்பேன்” என்பது அவனது வக்கீல் ஏ.பி.சிங்கின் பேட்டி. பல சாமியார்களும் ஆளும் கட்சிக்காரர்களும் எந்தக் குற்ற உணர்வுமின்றி, “இளம்பெண் ராத்திரி நேரம் பையன்களோடு சுத்தலாமா?” என்று ஒழுக்க நியாயம்தான் பேசினார்கள்.
ஆண்களுக்கு என்ன ஆச்சு?
அந்தக் காலத்தில் ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதா பாடுவதாக ஒரு பாடல் வரும்.
“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது”
என்று தொடங்கும் அந்தப் பாடல், செய்த குற்றத்தை உணர்ந்து வருந்திப் புலம்பும் கதாநாயகனின் குரலாக வந்தது. ஆனால் அப்படித் திருந்தி வருந்திய தலைமுறையும் காலமும் போய்விட்டது. குற்றம் புரிந்த ஆண்களுக்குக் குஷ்டரோகம் வந்து ‘அடியே காந்தா…’ என்று புலம்பும் காட்சியும் இல்லை. மனைவியைக் கொன்றவன், மாதரை வன்கொடுமை செய்தவர்கள் எல்லாம் அதிகாரத்திலும் மதவாத அமைப்புகளிலும் சௌகரியமாக இருக்கிறார்கள். இதுதான் இந்தியா. இது ஆண் இந்தியா.
தாம்சன்-ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஆய்வுக்குப் பின் வெளியிட்ட ‘பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகள்’ பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான், இந்தியா, சோமாலியா என்கிற வரிசையில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு என்றால் என்ன அர்த்தம்? பெண்களை நல்லபடியாக வைத்து வாழ வக்கற்ற ஆண்களின் நாடு என்பதுதானே?
இந்திய ஆண்கள் ஏன் பெண்கள் விஷயத்தில் இப்படி மனச்சாட்சியும் குற்ற மனமும் அற்றவர்களாக ஆனார்கள்?அவர்களை மீட்டெடுக்க வழியே இல்லையா? ஆண் மனதின் உள்ளடுக்குகளில் என்னதான் இருக்கிறது?
(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago