உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றதன் மூலம் தமிழகத்திலிருந்து அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் ஆர். பானுமதி. தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். 1981-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார்.
இந்தியா சுதந்திரம்பெற்ற பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள பானுமதியின் பதவிக் காலம் ஆறாண்டுகள். முப்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் இவர் உட்பட இப்போது இரண்டு பெண் நீதிபதிகள் உள்ளனர்.
தீர்க்கமான தீர்ப்புகள்
கோயம்புத்தூர், சென்னை, வேலூர், புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இவர் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதிபதியாகப் பணியாற்றியபோதுதான், பிரேமானந்தா வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார். பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியது குறிப்பிடத்தக்கது. பானுமதி வழங்கிய திட்டவட்டமான தீர்ப்பை, உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, கல்விக் கட்டண நிர்ணய வழக்கு, சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுக்கொன்ற சிறப்பு போலீஸ் படையினருக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு ஆகிய வழக்குகளில் பானுமதி தீர்க்கமான தீர்ப்புகளை வழங்கினார்.
அனைவருக்கும் சம நீதி
பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவரான இவர், இந்துவாகப் பிறந்து கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர். இரண்டு வயதிலேயே, தம் தந்தையை இழந்துவிட்டார். இவருடைய கணவர் கிருஷ்ணகிரியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார். இவர் உடன்பிறந்த சகோதரிகள் மூவர்.
“தொழில்ரீதியில் குற்றம் குறையற்றவர். சட்டத் துறை சார்ந்த அனைத்து வழிமுறைகளையும், ஒழுங்குக் கட்டுக்கோப்பையும் கொஞ்சமும் பிறழாமல் கடைப்பிடிப்பவர். நேர்மைக்கும் பாரபட்சமற்ற தன்மைக்கும் பெயர்போனவர். அடிப்படையில் ஒரு சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர், எளிமையானவர். முழுக்க முழுக்க கடுமையான உழைப்பு, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம், இன்று இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார். உண்மையிலேயே பகட்டற்ற, தன்னடக்கம் கொண்ட வாழ்க்கை நெறிமுறைக்கு இலக்கணமாக விளங்குகிறார்” என்று கூறுகிறார் இவரை நன்கறிந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. ராஜா.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான வழக்குகளில் உரிமைக் கோரிக்கைகள் போன்ற பலவித விஷயங்கள் குறித்தும், நீதித்துறை அதிகாரிகளுக்கு யோசனைகளை வழங்கி அறிவூட்டும் பல நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் ஏற்பாடுசெய்தவர் பானுமதி. 2013-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டச் சேவைகள் அமைப்பின் நிர்வாகத் தலைவராகப் பானுமதி பணியாற்றியுள்ளார். சேரிவாழ் மக்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுக்கான தமிழ்நாடு சட்டச் சேவைகள் ஏற்பாடு செய்த பல்வேறு திட்டங்களிலும் இவருடைய பங்களிப்பு பளிச்சிடும் வகையில் ஏராளமாகவே தென்படுகிறது. பல மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
பணிமூப்பு அடிப்படையில், பானுமதியை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் குடியரசுத் தலைவர் நியமித்தார்.
இந்தக் கட்டுரைக்காக அவரைத் தொடர்புகொண்டபோது, “கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நான் எந்த ஒரு பத்திரிகைக்கோ நிருபருக்கோ பேட்டி எதுவும் கொடுத்ததேயில்லை. எனவே என்னிடம் எதுவும் கேட்கப்படுவதை நான் விரும்பவில்லை; மன்னிக்கவும்” என்று நீதிபதிக்கே உரிய அழுத்தத்துடன் குறிப்பிட்டார் பானுமதி. நீதிபதிகள் குறித்த ‘கொலீஜியம்’ எனப்படும் நீதிபதிகள் நியமனக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் செய்யப்படும் நியமனங்கள் தொடர்பாகத் தற்போது அரசு சில முக்கியமான மாற்றங்களையும் திருத்தங்களையும் கொண்டுவரவிருப்பதே, இவரது இந்தப் பதிலுக்குக் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
விழிப்புணர்வு தந்த முகாம்கள்
மாவட்ட நீதிபதி என்ற முறையில் லோக் அதாலத் மற்றும் சட்டரீதியிலான எழுத்தறிவிப்பு திட்டங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார். புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், சென்னை ஆகிய இடங்களில் முகாம்களுக்கும் லோக் அதாலத்களுக்கும் ஏற்பாடுகள் செய்து நடத்திமுடித்துள்ளார்.
அரசியல் அரங்கிலும் சமூக அளவிலும் பல சர்ச்சைக்குரிய வழக்குகள் இவரிடத்தில் வந்திருக்கின்றன. ஜல்லிக்கட்டு, சம்பந்தப்பட்ட வழக்குகளை சாமர்த்தியமாகக் கையாண்டவர் இவர். 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் சிதம்பரத்தில், ஐந்தாம் நூற்றாண்டுக் காலத்திய பிரசித்திபெற்ற நடராஜர் ஆலய நிர்வாகத்தை, அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது சரியானதே என்று தீர்ப்பளித்தார்.
“ஆலய நிர்வாகம் முற்றிலும் சமயச் சார்பற்ற நடவடிக்கை. இந்த அமைப்பின் சமயச் சார்பற்ற நடவடிக்கைகள் தவறாக நிர்வகிக்கப்பட்டால், மாநில அரசு இது விஷயத்தில் குறுக்கிட்டு ஒழுங்குபடுத்திச் சீர்செய்யலாம்” என்று பானுமதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பை இவ்வாண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது என்பது வேறு விஷயம்.
2009-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மூண்ட மோதல்கள் மற்றும் கலவரங்களை அடுத்து, துணிச்சலான, பாரபட்சமற்ற முறையில் தீர்ப்பளித்தவர் பானுமதி. இந்த வழக்கு தொடர்பாக மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும் இவர் உத்தரவிட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த, ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட விரைவுப் பதவி உயர்வு சரியானதே என்று தீர்ப்பளித்ததார் பானுமதி. திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப்படுகைமீது நடந்த மணல் கொள்ளை, பானுமதி பிறப்பித்த உத்தரவால்தான் தடைசெய்யப்பட்டது.
நீதித்துறை சார்ந்த கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், நீதித்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றத்துக்கு உகந்த கருத்துகளையும் விஷயங்களையும் தொடர்ந்து கற்றுத்தருவதிலும் இவர் மிகுந்த ஈடுபாடு உடையவர். 1998-ம் ஆண்டு, சிவில் நீதிபதிகளுக்கான (ஜூனியர் பிரிவு) பயிற்சித் திட்ட அமைப்பின் இயக்குநராக இவர் பணியாற்றியிருக்கிறார். லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விரைவாக பைசல் செய்து, பிரச்சினைகளைக் கால தாமதமின்றித் தீர்த்துவைப்பதில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
எழுத்துப் பணி
தாய்மை!!! முதுமை!!! ஆனந்தம்? என்ற தலைப்பிலான பானுமதியின் 64 பக்கங்கள் கொண்ட நூலை எஸ்.எஸ். பப்ளிகேஷன் [2010] வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் தாய்மை, மெனோபாஸ், முதுமை ஆகிய விஷயங்களைப் பற்றி முக்கியமான பல விஷயங்களை இவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள், நிர்வாகம் மற்றும் கணினி உபயோகம் குறித்த வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு மாநில நீதித்துறை சார்ந்த மாஜிஸ்ட்ரேட் ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்கள் போன்றவையும் இவர் எழுத்தில் இடம்பெற்றுள்ளன.
“தமிழ்நாட்டுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் பெருமையையும் புகழையும் சேர்த்துத் தருவேன்”
என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கும் பானுமதி அதற்கேற்பச் செயல்படுவார் என்று நம்பும் விதத்தில் அவர் கடந்து வந்த பாதையின் தடங்கள் உள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago