எசப்பாட்டு 21: ஆண்கள் எழுதிய பெண்களின் வரலாறு

By ச.தமிழ்ச்செல்வன்

ல்வியாளர் பாவ்லோ ஃபிரையரின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்று, ‘எல்லா உயிரினங்களையும் போல மனிதரும் இயற்கையின் குழந்தைகள்தாம். ஆனால், நாம் இயற்கையின் குழந்தைகள் மட்டுமல்ல; வரலாற்றின் குழந்தைகளாகவும் இருக்கிறோம்’ என்பது. ஆனால், “இந்த வரலாறு, ஆண் எழுதிய வரலாறு. அதில் பெண்ணின் பாத்திரம் உண்மையாகவும் முழுமையாகவும் சொல்லப்படவில்லை. ஹிஸ்டரி என்பதே ‘ஹிஸ்’ (His) ஸ்டோரிதான். அவன் சொன்ன கதை, அவனுடைய கதை. அதில் அவளது கதைக்கு அவன் என்ன இடம் கொடுத்தானோ அதுதான் மிஞ்சியிருக்கிறது” என்பது பெண்ணியவாதிகள் அழுத்தமாக முன்வைக்கும் கருத்து.

சார்பற்ற வரலாற்றின் அவசியம்

உண்மையில் வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது இன்றும் நம் நினைவுகளையும் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வழிநடத்திக்கொண்டிருக்கிற சம காலம். இன்றைய வயிற்றுவலிக்கு நேற்று நாம் சாப்பிட்ட உணவின் வரலாறு தேவைப்படுவது போல, இன்றைய நம் சில வியாதிகளுக்கு நம் குடும்பத்தில் யாருக்கேனும் அது இருந்ததா எனப் பாரம்பரியத்தின் வரலாற்றைத் தேடுவது போல, இன்றைய சமூகச் சிக்கல்களுக்கு நேற்றைய வரலாற்றில் அவற்றின் வேர்களைத் தேடுவதும் தேவையானது. ஆனால், எல்லாவற்றையும்போல வரலாறும் சார்புடையது என்பதுதான் சிக்கல். எழுதுபவரின் காலம், வர்க்கம், பாலினம் போன்றவற்றைச் சார்ந்ததாகவே அது இருக்கும்.

இன்று நிலவுகிற பெண் அடிமைத்தனம் அல்லது ஆணைவிடப் பெண் தாழ்ந்தவள் என்ற கருத்தாக்கம் வரலாறு நெடுகிலும் காலம்காலமாக மட்டுமல்ல, வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும்கூட இருந்துவந்த ஒன்று. இது இயற்கையின் சித்தம் என்று நம் மனங்களில் ஒரு வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். இயற்கைக்குச் சித்தம் ஏதும் கிடையாது என்பதுதான் அறிவியல். மனிதப் பிறவியின் மூலமாகத்தான் இயற்கை தன்னைத் தானே அறிந்துகொள்கிறது.

ஜாரெட் டைமண்ட், யுவல் நோவா ஹராரி உள்ளிட்ட பல அறிவியல் எழுத்தாளர்களின் கணிப்பின்படி வரலாற்றையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையும் வாசிப்பவர்களுக்கு ஆணுக்குச் சாதகமான உலகமாக இது உறுதிப்படுவது, விவசாய வாழ்க்கை தொடங்கிய பிறகுதான் என்பது புரியும். ஆகவே, பெண்ணடிமை என்பது கடந்த 10,000-லிருந்து 15,000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் உருவானதுதான். இந்த அடிமைத்தனம் எப்போதும் இருந்துகொண்டிருந்தது என்றால் அதை மாற்ற முடியாது என வாதிட வாய்ப்பிருக்கும். ஆனால், நிமிர்ந்து நடந்த இன்றைய மனிதகுலமாகிய ஹோமோ சேப்பியன்ஸின் வரலாறு 1,70,000 ஆண்டுகள் என்கிறபோது, பெண்ணடிமைத்தனத்தின் 10,000-15,000 ஆண்டுகள் என்பது மிக மிக சமீபத்தில், நேற்று வந்து சேர்ந்த ஒன்றுதான். இடையில் வந்த ஒன்றுதான். எனவே, அதை மாற்ற முடியும், முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த சரியான, அறியியல்பூர்வமான, சார்பற்ற, மனிதகுல வரலாற்றை நாம் கற்பது அவசியமாகிறது.

எது இயற்கை நியதி?

ஆண்கள் வெளி வேலைக்கானவர்கள், பெண்கள் வீட்டு வேலைக்கானவர்கள் என்பது இயற்கையின் நியதி என்பதாக ஒரு கருத்து நம் மனங்களில் ஆழமாக இருக்கிறது. இன்றைய யதார்த்தமாகவும் இது இருக்கிறது. இது போலவேதான் என்றென்றும் இருந்தது எனப் பின்னோக்கி வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றிக்கொண்டிருக்கிறோம். ஆண்கள் வேட்டைக்குப் போனார்கள், பெண்கள் குகைகளில் காத்திருந்தார்கள். மாலையில் அத்தான் வேட்டையாடிக் கொண்டுவரும் விலங்குகளை வாங்கிச் சமைத்து அனைவருக்கும் அவள் வழங்கினாள் என்பதுபோல ஒரு சித்திரத்தை நம் மனதில் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். இன்றைய சித்திரத்தை நேற்றைய ஆணியில் தொங்கவிடுவது எப்படிச் சரியாகும்?

மனித குல வரலாற்றில் வேட்டையாடியும் இரை தேடியும் வாழ்ந்த கட்டத்தில் மக்கள் சின்னச் சின்ன இனக் குழுக்களாக வாழ்ந்தனர். தமிழகத்திலும் சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான இனக் குழுக்கள் குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. இனக் குழு வாழ்க்கையிலிருந்து நிலவுடைமை வாழ்க்கை முறைக்கு மாறிச்சென்ற ஒரு ‘நகரும் காலம்’தான் சங்க காலம். ஒரு இனக் குழுவில் சுமார் ஐம்பது பேர் இருக்கலாம் என்கிறார்கள் அறிவியலறிஞர்கள். நாடோடிகளாகத் திகழ்ந்த அந்தக் குழுக்கள் வேட்டையாடிக்கொண்டே, இரை தேடிக்கொண்டே நகர்ந்தபடி இருந்தார்கள். ஆண்களும் பெண்களும் சமமாக வேட்டையாடிய காலமாக அது இருந்திருக்கும். சம பலமுள்ளவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். ‘வீக்கர் செக்ஸ்’ கதையெல்லாம் அப்போது இல்லை.

தாய்வழிச் சமூகம்

‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற நூலில் ரோஸலிண்ட் மைல்ஸ் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “வேட்டையாடுதல் ஒரு முழுக் குழுவின் நடவடிக்கையாக இருந்தது. மந்தை மந்தையாகப் பயணம் செய்யும் விலங்குகளை வெற்றிகரமாக வேட்டையாடுவதற்குக் குழுவாக ஒத்துழைத்துச் செல்வது அவசியமாக இருந்தது. பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்டு இயல்பாக அனைவருமே வேட்டையாடுதலில் ஈடுபட்டனர்.”

கருத்தடை முறைகள் அறிமுகமாகியிருக்காத அந்த நாட்களில் பெண்கள் மீண்டும் மீண்டும் கருத்தரிப்பது தொடர் நிகழ்வாக இருந்தது. அதன் காரணமாகக் குழுவின் தேவைகளுக்காக நடக்கும் அன்றாடப் போராட்டத்தில் ஆண்களைவிடச் சற்றுக் குறைவான வேகத்தில் பங்கேற்றனர். ஆனாலும், இனக் குழுச் சமூகத்தில் பெண்கள் தாழ்வாக நினைக்கப்படவில்லை. குழுவாக வேட்டையாடி, குழுவாக இரை தேடி குழுவுக்குள் பகிர்ந்துண்டு வாழ்ந்த காலம் அது.”

குழந்தைப் பராமரிப்பும் குழுப் பாதுகாப்புமே அன்றைக்கு இருந்த ஆண், பெண் வேலைப் பிரிவினை. அவரவர் வேலையை அவரவர் செய்தனர். ஏற்றத்தாழ்வு என்பது இல்லை. குழுவின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கான போராட்டத்தில் முழுமையாகப் பங்கெடுத்தவர், சற்றுக் குறைவாகப் பங்கெடுத்தவர் என்ற ஏற்ற இறக்கம் மட்டுமே இருந்த காலம் அது. குழந்தையின் தாய் தெரியும், தந்தை தெரியாது என்ற படியால் அது தாய்வழிச் சமூகமாக, குழந்தைப்பேறு என்னும் அதிசயத்தை நிகழ்த்தும் மாயசக்தி உள்ளவளாகப் பெண் மதிக்கப்பட்ட காலம்.

கட்டமைக்கப்பட்ட வரலாறு

ஆனாலும், மனித உடலின் பரிணாம வரலாற்றில் ‘மெனோபாஸ்’ எனப்படுகிற மாதவிடாய் நின்றுபோன காலம் (குழந்தைப்பேறு இனி இல்லை என முடிவுக்கு வந்த நிலை) சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஏற்பட்டது என ஒரு அறிவியல் கருத்து உள்ளது. பெண்ணின் வரலாற்றில், பெண் விடுதலையின் வரலாற்றில் இந்த மெனோபாஸுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. இறக்கும் தறுவாய்வரை, இடைவெளி இல்லாமல் கருவுற்றும் பிள்ளைகள் பெற்றும் சீரழிந்துகொண்டிருந்த அவள் வாழ்வில் மெனோபாஸ் மிகப் பெரிய திருப்புமுனை. தன் உடல் மீதே தீவிர கவனம் வைத்திருந்த தன் கண்களைப் பிறவற்றின் மீதும் பெண் செலுத்த அவகாசம் கிடைத்தது. ஆனாலும், அந்தக் காலத்தையும் அவள் தன் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பராமரிக்கும், வளர்த்தெடுக்கும் பணிக்காகச் செலவிடும் நிர்ப்பந்தமும் கூடவே வந்தது. மாதவிடாய் நின்றுபோன பிறகும் நீண்டகாலம் உயிர்வாழும் சாத்தியம் மற்ற பாலூட்டிகளைவிட மனித உடலுக்குச் சாத்தியமானதும் பெண் விடுதலையில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆகவே, வெளி வேலை ஆணுக்கு, வீட்டு வேலை பெண்ணுக்கு என்பது இயற்கையின் நியதியல்ல. வரலாற்றினூடாக கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அவள் தலைமையேற்றிருந்த வேட்டைக் காலத்து வசந்தத்தை இன்னும் மேம்பட்ட வடிவில் திருப்பித் தர முடியும். அதற்காக வரலாற்றைக் கற்பதும் வரலாற்றை நேர் செய்வதும் அவசியம்.

சமமான புஜபலத்தோடு இருந்த பெண், ‘அழகுப் பதுமை’ ஆக்கப்பட்டதன் வரலாற்றை இனி பார்க்கலாம்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்