பெண்கள் 2023 - நோபல் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்றின் போது அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் உதவின. அவற்றுள் எம்.ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தடுப்பூசியும் அடக்கம்.

எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்க உதவிய ஹங்கேரிய அமெரிக்கப் பேராசிரியர் கேத்தலின் கரிகோவுக்கும் அமெரிக்கப் பேராசிரியர் ட்ரூ வைஸ்மேனுக்கும் உடற்செயலியல், மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. உயிரி வேதியியலாளரான கேத்தலின், ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஈரான் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் பெண்ணுரிமைப் போராளியுமான நர்கீஸ் மொகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இவர் ஈரானில் பெண்கள் மீது சுமத்தப்படும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடியவர். அதற்காக ஈரான் அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. இவர் சிறையில் இருப்பதால் இவருடைய குழந்தைகள் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டனர். ஈரான் அரசு இவரை 13 முறை கைது செய்துள்ளது, ஐந்து முறை குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கு 31 ஆண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்குப் பொருளா தாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றிலும் நடப்பிலும் பணியிடங்களிலும் தொழில்துறையிலும் புறக்கணிக்கப் படுகிற – கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் பங்களிப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார் இவர். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற மூன்றாம் பெண், இந்தப் பிரிவில் நோபல் பரிசைக் கூட்டாகப் பெறாமல் தனித்துப் பெறும் முதல் பெண் ஆகிய பெருமைகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

இயற்பியலுக்கான நோபல் பரிசை பியர் அகுஸ்தினி, ஃபேரன்ஸ் கிரௌஸ் ஆகியோருடன் சேர்ந்து ஸ்வீடிஷ் பேராசியர் ஆன் லூலியே பெற்றார். அதிவேக எலெக்ட்ரான் களைப் படம்பிடிக்கும் வகையில் ஒளி சமிக்ஞைகளை உருவாக்கியதற்காக ஆன் லூலியேவுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE