ஒவ்வொரு விடியலும் பெண்கள் எதிர்கொள்வதற்காகப் புதுப்புது சவால்களைத் தாங்கி நிற்கும். சவால்களுக்கு இடையே பெண்களுக்கான வெற்றிக்கனிகளும் காத்திருக்கும். அந்த வகையில் 2023-இல் பெண்கள் சந்தித்த சவால்களும் சோதனைகளும் அதிகம். அவற்றில் சில இவை:
சர்ச்சை கருத்து: பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட தன் 17 வயது மகளது வயிற்றில் வளரும் ஏழு மாதக் கருவைக் கலைக்க அனுமதி வழங்குமாறு சிக்கந்தர் சயீத் என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் தாவே, தீர்ப்பின்போது சொன்ன கருத்துகள் விவாதத்தை எழுப்பின. “இது 21 ஆம் நூற்றாண்டு. உங்கள் அம்மாவிடமோ பாட்டியிடமோ கேட்டால் அவர்கள் காலத்தில் அதிகபட்ச திருமண வயது 14 – 15 என்று சொல்வார்கள். அதனால், 17 வயதுக்குள் குழந்தை பிறப்பது இயல்புதான். மனுஸ்மிருதியை ஒரு முறை படித்தால் இது புரியும்” என்று பாதிப்புக்குள்ளான பெண்ணின் தந்தையிடம் நீதிபதி தெரிவித்தது சர்ச்சையானது.
» செங்கடலில் 25 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: கடற்படை தகவல்
» “கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” - முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
நாட்டையே உலுக்கிய கொடூரம்: இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் உலகையே உலுக்கியது. குறிப்பாக, மே 4 அன்று இரண்டு பெண்கள் ஆடையின்றி ஆண்கள் சூழ அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூன் 12 அன்றே தேசிய மகளிர் ஆணையத்துக்குப் புகார் அளிக்கப்பட்டதாகவும் அது தொடர்பாக ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. ஜூலை 19 அன்று அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியான பிறகே கலவரத்தின் தீவிரம் பிற பகுதி மக்களுக்குத் தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பழிவாங்க அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியது உலக அளவில் இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது.
குற்றமும் தண்டனையும்: சென்னையில் உள்ள நடனப்பள்ளியான கலாக்ஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகக் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்தது. உதவிப் பேராசியர் ஹரி பத்மன் உள்ளிட்டோர் மீது மாணவியர் பாலியல் புகார் தெரிவித்ததோடு நீதி கேட்டு உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஹரி பத்மன் கடந்த ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒப்பந்த ஊழியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், நாத் ஆகிய மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஹரி பத்மன் மீதான குற்றத்தை விசாரணை குழு உறுதிப்படுத்தியதுடன் கடுமையான தண்டனை வழங்கவும் பரிந்துரைத்தது. கலாக்ஷேத்ராவின் நிர்வாகப் பிரிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் குழு வலியுறுத்தியது.
அத்துமீறிய அரசியலர்கள்: சென்னையில் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், மேயர் பிரியாவிடம் நடந்துகொண்ட விதம் பல்வேறு தரப்பிலும் கண்டனங்களை எழுப்பியது. மேயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கு முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற அநீதி குறித்து திமுகவைச் சேர்ந்த பெண்கள்கூட வாய்திறக்காமல் இருந்ததும் விமர்சிக்கப்பட்டது. அமைச்சர் சேகர் பாபு பிரியாவை எதுவும் தெரியாத ‘குழந்தை’ என்று சொன்னதும், அமைச்சர் கே.என்.நேரு பிரியாவை ஒருமையில் அழைத்ததும் விமர்சனத்துக்குள்ளாகின.
மூடத்தனத்தால் பறிபோன உயிர்: வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதில் 27 வயது லோகநாயகி என்பவர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரும் இவருடைய கணவர் மாதேஷும் முதுகலைப் பட்டதாரிகள். இயற்கை விவசாயத்திலும் ஆரோக்கிய உணவிலும் ஆர்வம் கொண்ட இவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவெடுத்துள்ளனர். ஆகஸ்ட் 22 அதிகாலை லோகநாயகிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆண் குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி முழுவதும் வெளியேறாத நிலையில் அதை வெளியேற்ற குடும்பத்தினர் முயன்றுள்ளனர். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு லோகநாயகி உயிரிழந்தார்.
யூடியூப் காணொளியின் வழிகாட்டலில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது. அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கையும் இயற்கை வாழ்க்கை மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையும் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டன.
பெண்களுக்கான திட்டங்கள்: பெண்கள் செய்கிற வீட்டு வேலைகளை அங்கீகரிக்கும் விதமாகத் தமிழக அரசு செயல்படுத்திய ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’மும் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. வீட்டுப் பராமரிப்பு, குழந்தை - முதியோர் பராமரிப்பு எனக் குடும்பத்துக்குள் பெண்கள் செய்யும் வேலைக்கான உரிமைத்தொகை இது. வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 11 மகளிர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில் மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம்.
திருநர்களுக்கு இட ஒதுக்கீடு: கேரள அரசு செவிலியர் படிப்பில் திருநர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. திருநர் சமூகத்துக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் ‘ப்ரைட் புராஜெக்ட்’ என்கிற திட்டத்தை கேரள அரசு அறிவித்தது. இப்போது அளிக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீடு மற்ற துறைகளிலும் விரிவாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணாதிக்கப் பேச்சு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்த விஜய லட்சுமியைத் தரக்குறைவாகப் பேசியதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. சீமானின் மனைவி கயல்விழியும் தன் கணவனின் பேச்சை ரசித்தார். அதையும் பலர் சமூக ஊடகங்களில் கண்டித்தனர்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு: புதிய நாடளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக் கீட்டு மசோதாவை செப்டம்பர் 19 அன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.பெருவாரியான ஆதரவுடன்மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றங்களிலும் நாடாளு மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் இந்த மசோதா ‘நாரி சக்தி வந்தன்’ (பெண் சக்திக்கு வணக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2024 தேர்தலில் நடைமுறைக்கு வராது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பிறகே நடைமுறைக்கு வரும்.
காலம் தாழ்த்திய தீர்ப்பு: சந்தன மரக் கடத்தல் தொடர்பாக வாச்சாத்தி மலைக் கிராமப் பகுதிகளில் தமிழக வனத்துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர் 1992வில் தேடுதலில் ஈடுபட்டபோது நடத்திய வன்முறைகள் கொடூரமானவை. வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த வழக்கில் தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வனத்துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 215 பேருக்கு 2011இல் தண்டனை வழங்கியது. அதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீருடைப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago