எசப்பாட்டு 19: கவனத்தில் இருக்கிறோமா நாங்கள்?

By ச.தமிழ்ச்செல்வன்

 

ல்யாணம் ஆகி, அவளுடைய பெட்டியை முதன்முதலாக அவனுடன் ஒதுங்கவைத்துக்கொண்டிக்கும்போது “அய்யய்யோ அதையெல்லாம் பார்க்கப்படாது” என ஒளித்துவைத்த அவளுடைய சின்ன வயது போட்டோக்களுடன் ஒரு சாக்லேட் டப்பாவில் தலைவலி மாத்திரைகளும் இருந்தன. அது தலைவலி மாத்திரைகள் என்று உணர்ந்தபோது இவனுக்கு ஒரு நிமிஷம் அந்தப் புதிய சந்தோஷங்களுக்கு மத்தியிலும் ஒரு சீக்காளியுடன் வாழ நேர்ந்துவிட்டதுபோல ஒரு கணம் முகம் தொங்கிவிட்டது.

“உங்களுக்கு மண்டையிடி வருமா?”

வந்ததேயில்லை என்று அவன் மறுத்துச் சொன்னபோது,

“எனக்கு வரும். குழவிக்கல்லைத் தூக்கி நச்சுண்ணு தலையில் போட்டுக்கொள்ளலாம்கிற மாதிரிகூட வலிக்கும்”

அவளையே பார்த்துக்கொண்டிருப்பான் சொல்லச் சொல்ல.

“ஆமா, லேசு வலியிண்ணாத்தான் தாங்க முடியாது. வலி ஜாஸ்தியாக இருந்துச்சுண்ணாத் தேள் கொட்டினது மாதிரி விறுவிறுண்ணு சுகமா இருக்கும்”

- வண்ணதாசனின் ‘அன்பின் வழியது’ சிறுகதையிலிருந்து.

எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகியிருக்கும். என் இணையருக்கு ஒரு நாள் மாலையில் தொண்டைக்குள் மூச்சிழுக்கும் சத்தம். “எனக்கு வீசிங் உண்டு. தூசி இருந்தால் மூச்சுத் திணறல் வந்துவிடும்” என்று அவர் சொன்னார். “வெந்நீர் குடிச்சா சரியாகிவிடும்” என்று என் அம்மா சொன்னார். சரி என்று நான் சங்கக் கூட்டத்துக்குக் கிளம்பிவிட்டேன். இரவு வீடு திரும்பியபோது, “எனக்கு முடியாம இருக்கும்போது என்ன, ஏது, மாத்திரை மருந்து வேணுமான்னு எதுவுமே கேட்காம இவ்வளவு அலட்சியமா போயிட்டிங்க” என்று என் இணையர் பிடித்துக்கொண்டார். படித்த பெண் என்பதால் என் அம்மாவைப்போல மௌனத்தில் அமிழ்ந்துபோகாமல் கேள்வியோடு மேலெழும்பி வந்தார்.

குழந்தைகளுக்கும் வீட்டுத் தலைவருக்கும் உடம்பு முடியாமல் போனால் உடனே மருத்துவமனைக்குப் போவதும் மனைவிக்கு முடியாமல் போனால் பதறி ஓடாமல் கைப்பக்குவம் பார்ப்பதும் எங்கள் குடும்பத்தைப் போலவே பல குடும்பங்களின் பண்பாடாக இருப்பதைப் போகப்போக அறிந்துகொண்டேன். இளம் பெண்கள் கல்யாணமாகும்போது ‘ஒரு சீக்காளிப் பொண்ணோட வாழும்படி ஆச்சே’ என்று தம் கணவன்மார் நினைத்துவிடக்கூடாதே, அது தம் தாம்பத்திய வாழ்வுக்கு நெருடலாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காகத் தம் உடல்நலக் குறைவு பற்றி வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதுண்டு.

இது போன தலைமுறையின் பிரச்சினை, இந்தத் தலைமுறை அப்படி இல்லை என்று தலையை உதறிப் போய்விட முடியவில்லை. வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களின் உடல்நலக் குறைவு இன்றைக்கும் கடந்த தலைமுறையைப் போலவேதான் அவசரமின்றிக் கவனிக்கப்படுகிறது. ஆண்கள் வேலைக்குப் போவதால் உடனே வைத்தியம் பார்த்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் ரொம்ப முடியாமல் போனால் ஒழிய சாயங்காலம் வந்து பாத்துக்கலாமே என்ற யதார்த்தத்தில் இந்த அசட்டை தொடங்குகிறது.

சுனாமி உணர்த்திய பாடம்

2004 டிசம்பரில் தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கியபோது வீடு வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான துணிமணிகள், உணவுப் பொருட்களைத் தமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் உள்ளன்போடு லாரி லாரியாக அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். வாலிபர் சங்கத்தினர் நாகப்பட்டினம், குமரி மாவட்டங்களில் ஆற்றிக்கொண்டிருந்த பணிகளைப் பற்றி எழுதுவதற்காக நான் அவர்களோடு சில நாட்கள் இருந்தேன்.

எல்லா முகாம்களிலும் பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர்கள் சொன்ன ஒரு விஷயம், “சாப்பாடு கொடுத்தோம், துணிமணி கொடுத்தோம், தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்தோம். ஆனால், பெண்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை நாம் எல்லோரும் மறந்துவிட்டோம்” என்பதுதான்.

வாரக் கணக்கில் முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களுக்கு சானிடரி நாப்கின் தேவைப்படும் என்ற நினைவே எங்களுக்கு வரவில்லை. ஐ.டி. துறையிலிருந்து இளம் பெண்கள் வந்து அவர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கியபோதுதான் அந்தத் தேவையை உணர்ந்ததாக அந்த இளைஞர்கள் சொன்னார்கள். அடுத்தது சீப்பு, கண்ணாடி, எண்ணெய், பவுடர் போன்ற அம்சங்கள். இவையெல்லாம் அழகுசாதனப் பொருட்கள்தானே.

அத்தியாவசியத் தேவைகளின் பட்டியலில் வராதல்லவா என்ற கேள்விதான் நிவாரண முகாம்களில் பணியாற்றிக்கொண்டிருந்த எங்களுக்கு இருந்தது. எண்ணெய் தேய்த்துத் தலைவாரிக்கொண்டு, முகத்தைச் சீர் செய்துகொள்வது என்பது இயல்பு வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதி என்பதைப் புரிந்துகொள்ள ஒரு சுனாமி வர வேண்டியிருந்தது.

எப்போது கவனிக்கப் போகிறோம்?

இப்படி ஆண்களின் ‘கவனத்துக்கு’ வந்து சேராத பெண்களின் உடலியல், உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் பல இன்றைக்கும் இருக்கின்றன. பெண்கள் பணியாற்றும் இடங்களில் கழிப்பறைகள், குழந்தைகள் காப்பகங்கள், குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறைகள் போன்றவையெல்லாம் உத்தரவாதப்படுத்தப்படாத நிலை இன்றும் தொடர்கிறது. ஒரு கிராம வங்கி ஊழியர் மாநாட்டில் ஒரு பெண் ஊழியர், “எங்கள் கிளை சிறிய கிராமத்தில் இருக்கிறது. நாங்கள் இருவர் பணியாற்றுகிறோம். கடைநிலை ஊழியர்களையும் சேர்த்தால் நான்கு பேர்.

நான்கு பேரில் நான் ஒருத்தி மட்டும் பெண். எல்லோருக்குமாக ஒரே ஒரு கழிப்பறைதான் வங்கியில் இருக்கிறது” என்றார். நான்கு பேருக்கு ஒரு கழிப்பறை போதாதா என நிர்வாகம் கேட்கிறது. ஒரே ஒரு பெண் ஊழியருக்காக இன்னொரு கழிப்பறை கட்ட முடியுமா என்பது நிர்வாகத்தின் வாதம்.

இது ஒரு முகம். அந்தப் பெண் ஊழியர் மேலும் சொன்ன விஷயங்கள் இதைவிட முக்கியமானவை. “ஒரு கழிப்பறை என்பதால் பூட்டுப் போட்டு வைத்திருப்போம். இல்லாவிட்டால் பொதுமக்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் நான் பாத்ரூம் போக எல்லோருடைய முன்னிலையிலும் சாவியை எடுக்கவே கூச்சமாக இருக்கும். காலப்போக்கில் எங்களுக்கு இது மரத்துப்போகலாம் என்றாலும் ஏன் தனிக் கழிப்பறை கட்டக் கூடாது? அப்புறம் நம்ம ஆண் தோழர்களுக்குச் சொல்ல வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

கழிப்பறையில் சிகரெட் பிடித்துக்கொண்டு அதை அங்கேயே அணைத்துவிட்டு வருகிறீர்கள். உள்ளே போகும் பெண்களுக்கு அந்த வாடை பிடிப்பதில்லை என்பதைக்கூட விட்டுவிடுங்கள். ஒரு சிகரெட் துண்டின் இருப்பு ஓர் ஆணின் இருப்பாக எங்கள் மனதில் பிம்பங்களை உருவாக்கி எங்கள் கழிப்பறை சுதந்திரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. நிர்வாகம் அசைந்து கொடுப்பது அப்புறமாகக்கூட நடக்கலாம். நம் சக தோழர்கள் எங்கள் உளவியலைப் புரிந்துகொண்டு கொஞ்சம் ஒத்துழைக்கக் கூடாதா?” என வேண்டுகோள் வைத்தார்.

இப்படியெல்லாம் மைக் பிடித்துப் பொதுவெளியில் பெண்கள் பேச வருவதே அபூர்வம். அன்று அந்தப் பெண் ஊழியர் பேசிய பேச்சை என்னால் மறக்கவே முடியவில்லை. “ஆண்கள் எங்கே வேண்டுமானாலும் ஓரம் பார்த்துச் சிறுநீர் கழிக்கப் போய்விடுகிறீர்கள். எங்களுக்கான ஏற்பாடு பற்றிக் குடும்பமாகப் போகும்போது உங்களுக்கு இருக்கும் கவனம் பொது இயக்கங்களின்போது உங்களுக்கு வருவதில்லையே ஏன்?” என்ற குற்றச்சாட்டுடன் அவர் உரையை நிறைவு செய்தார். அவர் கையை ஆட்டி ஆட்டிப் பயமின்றிப் பேசினார். அவர் நீட்டிய சுட்டுவிரல் இன்னும் என்னை நோக்கி நீண்டிருப்பது போன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்