ஊர் திருவிழாவைப் போல் மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது சென்னைப் புத்தகக் காட்சி. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் புத்தகத் திருவிழாக்களுக்கு வந்தால் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் மகத்துவத்தையும் உணர்த்திவிடுகின்றன இங்கு பரவிக் கிடக்கும் கடைகளும் கடைகளை நிறைக்கும் புத்தகங்களும்.
தமிழுக்கு 428
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி 40 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. 41-வது புத்தகக் காட்சி, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கி வரும் 22-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இங்கு 428 தமிழ்ப் புத்தக அரங்குகள், 234 ஆங்கிலப் புத்தக அரங்குகள், 24 பொதுக் கடைகள், 22 மல்டிமீடியா கடைகள் என மொத்தம் 706 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகக் காட்சியில் இலக்கியம், சமூகம், பெண்ணியம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், அரசியல், சாதியம், வரலாறு, சுற்றுச்சூழல், சினிமா, கல்வி உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் புத்தகக் காட்சியில் அதிக அளவு விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் பெண்கள் சார்ந்த புத்தகங்களுக்குத் தனியிடம் உண்டு. இந்த ஆண்டும் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தமிழ்ப் பண்பாட்டில் பெண்
மூத்த எழுத்தாளர் அம்பை எழுதிய ‘உடல் எனும் வெளி’ நூலைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொன்மை வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டில் பெண்கள் எப்படிப் பார்க்கப்பட்டுள்ளனர், பண்பாட்டிலிருந்து உருவாகும் பேச்சிலும் மொழியிலும் இலக்கியத்திலும் பெண்கள் எவ்வாறு அணுகப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. விலை ரூ.140.
இஸ்மத் சுக்தாய் படைப்புகள்
எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் இரண்டு புத்தகங்கள் எதிர் வெளியீடு பதிப்பில் இந்தப் புத்தகக் காட்சியில் இடம்பிடித்துள்ளன. ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ புத்தகம் (விலை ரூ.400) இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவரான இஸ்மத் சுக்தாய் போராட்டங்களுடன் கழித்த தன் இளமைக்காலம் குறித்தும் அவரது வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் விளக்குவதாகவும் உள்ளது. இந்தப் புத்தகத்தை சசிகலா பாபு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஜி. விஜயபத்மா மொழிபெயர்த்துள்ள ‘இஸ்மத் சுக்தாய் கதைகள்’ புத்தகம் (விலை ரூ.500), இஸ்மத் சுக்தாயின் முக்கியமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.
அரசியல், ஊடகம், நாட்டார் வழக்காற்றியல்
காலச்சுவடு பதிப்பகம், பெண்கள் தொடர்பாக மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதிய ‘ஜெயலலிதா: மனமும் மாயையும்’ புத்தகம் (விலை ரூ.195), ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்வையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மதவாத சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் எழுதியவற்றை அவருடைய நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான சந்தன் கெளடா தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ள கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது நவ்யானா பதிப்பகம். அதை ‘கௌரி லங்கேஷ்: மரணத்துள் வாழ்ந்தவர்’ (விலை ரூ.150) என்ற தலைப்பில் பொன். தனசேகரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் எழுதியுள்ள ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு’ (காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.225) என்ற புத்தகம் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மூலப் பகுதியில் இருந்து விலகிச் செல்லும் நாட்டார் வழக்காற்றியல் சம்பவங்களை மையப்படுத்துகிறது.
கவிதையின் பாதையில்
மைத்ரி புக்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் ‘கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்’ (விலை ரூ.140), தென்னிந்தியாவைச் சேர்ந்த 17 தலித் பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மூல மொழிகள் மற்றும் ஆங்கிலம் வழி வ.கீதா, சுகுமாரன், க.மாதவ், பிரேமா ரேவதி ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சாதியத்தை எதிர்க்கும் வலுவான குரல்களில் தலித் பெண்ணியக் குரல் முக்கியமானது. வீட்டிலும் சமூகத்திலும் கட்டவிழ்த்துவிடப்படும் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் குரலாகவும் இது வெளிப்படுகிறது என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் உணர்த்துகின்றன.
அணங்கு பெண்ணியப் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது மாலதி மைத்ரியின், ‘முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை’ (கவிதைகள், விலை ரூ.90) புத்தகம். பின்காலனிய நிலத்தின் பெண்ணுடல்களின் மொழியைப் பிரதியெடுக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பழைய உலகிலிருந்து வெளியேறிய பெண் உடலைக் கலைத்து அடுக்கும் கவிதைகள் இவை.
எத்தனையோ நவீன மாற்றங்களுக்குப் பிறகும் இரண்டாம்பட்சமாக நடத்தப்பட்டுவரும் பெண்கள் தங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கயிறுகளை அறுத்தெறியும்வரை பேனா என்னும் கூர்வாளால் அவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதைத்தான் இந்தப் புத்தகங்கள் உணர்த்துகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago