பெ
ண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் கொஞ்சமும் குறைந்தவையல்ல குழந்தைகள் மீதான வன்முறை. பெற்றோர்கள் நம்புகிற நெருக்கமான உறவினர்களால்தான் குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறு வயதில் பாலியல் வன்முறையைச் சந்திக்காத பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இப்படியொரு மோசமான சூழலில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கப் பள்ளிகளில் இலவச விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திவருகிறார் மதுரையைச் சேர்ந்த ஜோதி.
சென்னையில் தனக்குக் கிடைத்த தனியார் செவிலியர் பணியை விடுத்துத் தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சைல்டு ஹெல்ப்லைன் 1098 அமைப்புக்கு உதவிவருகிறார். தன் கணவருடன் இணைந்து ‘கிரேஸ்’ அறக்கட்டளையை இதற்காக அவர் நடத்திவருகிறார்.
சேவையே வேலை
சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவுவதே குறிக்கோளாக இருந்தது எனச் சொல்லும் ஜோதி, அதற்காகவே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியில் சேர்ந்தார். நல்ல சம்பளம், மனதுக்குப் பிடித்த வேலை என நாட்கள் மகிழ்ச்சியாக நகர்ந்தன.
“அப்போ போரூர் மவுலிவாக்கத்தில் சிறுமி ஹாசினி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என்னை ரொம்ப பாதித்தது. அந்தச் சிறுமிக்கு நடந்த துயரத்தை என்னால மறக்கவே முடியலை” எனச் சொல்லும் ஜோதி, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளில் இருந்து அவர்களை விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காகத் தன் செவிலியர் வேலையை விட்டு விலகினார்.
“என் முடிவுக்குப் பக்கபலமாக இருந்த என் கணவருடன் இணைந்து இதற்காகவே ஒரு அமைப்பைத் தொடங்கினேன்” என்று சொல்லும் ஜோதி அந்த அமைப்பின் மூலம் சிறு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறார்.
உறவினர்களால் உண்டாகும் பாதிப்பு
“தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையைப் பல பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிக்கத் தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட பத்துக் குடும்பங்களிடம் பேசி அவர்களைக் காவல் துறையினரிடம் புகார் அளிக்கவைத்தோம். பாதிக்கப்பட்ட குழந்தையும் பெற்றோரும் தங்களுடைய நிலையை வெளியே சொல்லாமல் சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என எங்களுடைய கள ஆய்வில் தெரியவந்தது. பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்படியொரு சூழலில் ஆசிரியர், பெற்றோர் இருவரின் அரவணைப்பு குழந்தைகளுக்கு மிக அவசியம். குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தைக் குறைக்கச் சிறு கருவியாக இது இருக்கும்” என்கிறார் ஜோதி.
அதிகரிக்கும் குற்றங்கள்
கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த 38,170-க்கும் அதிகமான குற்றச் சம்பவங்களில் பாலியல்ரீதியான குற்றச் செயல்கள் 8,500-க்கும் அதிகம் என தேசியக் குற்றப் பதிவேட்டின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கச் சட்டங்கள் இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவற்றைக் குறைக்க முடியாத சூழல் தொடர்வதாக ஜோதி சொல்கிறார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சட்டரீதியான நடவடிக்கைக்கு உதவ இவருடன் ஆறு பெண்கள் இருக்கின்றனர்.
“அவர்கள் பகுதி நேரமாக உதவுகின்றனர். ஆர்வமுள்ள, சேவை மனப்பான்மைகொண்ட பெண்கள் யாராக இருந்தாலும் இதுபோன்ற செயல்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். அந்த எண்ணிக்கை அதிகமாகும்போது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தீர்க்கலாம்” என நம்பிக்கையோடு சொல்கிறார் ஜோதி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago