பக்கத்து வீடு: இஸ்ரேலை எதிர்க்கும் இளம் போராளி

By எல்.ரேணுகா தேவி

லக அளவில் இணையதளங்களில் தேடப்படுபவர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அஹது தமிமி (Ahed Tamimi) என்ற 16 வயதுச் சிறுமி. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் உள்ள நபி சாலி கிராமத்தில் பிறந்தவர் அஹத் தமிமி. விவசாயத் தொழிலில் ஈடுபடும் இவரது குடும்பத்தினர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராகவும் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அந்தக் குடும்பப் பின்னணியில் வந்த தமிமி தற்போது பாலஸ்தீனத்தின் முக்கியமான இளம் போராளியாக கவனம்பெற்றுவருகிறார்.

குழந்தைகளும் கைது

பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அரசு, அந்தப் பகுதி மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தங்கள் சொந்த நிலத்திலேயே அகதிகளைப் போன்ற நிலைமைக்குப் பாலஸ்தீனியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். ராணுவ வாகனங்களின் மீது கல் எறிவது இவர்களது முக்கியமான போராட்ட வடிவமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பத்து, பதினோரு வயதுள்ள குழந்தைகளையும்கூட கல் எறிந்தார்கள் எனக் குற்றம் சுமத்தி இஸ்ரேல் ராணுவத்தினர் கைதுசெய்வது தொடர்கதையாக மாறியுள்ளது. இப்படி கைதுசெய்யப்படுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை வழங்க இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தினர் ஆண்டுக்கு சராசரியாக 500 முதல் 700 பாலஸ்தீன இளைஞர்களைக் கைதுசெய்வதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தங்களுக்கு எதிராகச் செயல்படும் யாரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் சுட்டுத்தள்ளும் அதிகாரம் படைத்தவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். இந்நிலையில் தன் 14 வயது தம்பியைக் கைதுசெய்ய வந்த இஸ்ரேல் ராணுவத்தினரை எதிர்த்து தமிமி போராடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதுவே அவரது முதல் போராட்டமாகவும் அமைந்தது.

ஓங்கிய கை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிமியின் சகோதரர் ஒருவரை இஸ்ரேல் ராணுவ வீரர் ரப்பர் குண்டால் தலையில் தாக்கியதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார். இதை எதிர்த்து நபி சாலி கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஹத் தமிமியின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு வந்த இஸ்ரேல் ராணுவத்தினருக்கு எதிராகப் பலர் வீட்டின் மேல் நின்றுகொண்டு கோஷங்களை எழுப்பினர். இதைக் கண்ட ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கிச் சென்றனர். தன் வீட்டுக்குள் நுழையும் இஸ்ரேல் ராணுவ வீரர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டார் தமிமி. ஆனால், ராணுவத்தினர் அதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தமிமி அவர்களைத் தாக்க நேரிட்டுள்ளது. அப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத இஸ்ரேல் ராணுவத்தினர் அமைதியாக சென்றுவிட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினரைப் பெண் ஒருவர் துணிச்சலோடு எதிர்த்துத் தாக்குவது பாலஸ்தீனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவத்தினரை தமிமி தாக்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

ராணுவத்தின் அத்துமீறல்

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் தமிமியின் வீட்டினுள் இரவு மூன்று மணிக்கு அத்துமீறி நுழைந்தனர். வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் சேதப்படுத்தியும் தமிமியின் தாயார் நாரிமன்னைத் தாக்கியும் அவருடைய தம்பியைக் கீழே தள்ளியும் வலுக்கட்டாயமாக அஹத் தமிமியை விடியற்காலை நான்கு மணிக்கு கைதுசெய்தனர். மனித உரிமை வீதிகளை மீறி ஒரு இளம் பெண்ணை இஸ்ரேல் ராணுவத்தினர் கைதுசெய்திருப்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினரைத் தாக்கியது, ராணுவ வீரர்களைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் ராணுவத்தினர் தமிமி மீது சுமத்தியுள்ளனர்.

இஸ்ரேல் ஆதிக்கத்தை எதிர்க்க முயன்றால் பாலஸ்தீன இளைஞர்களுக்கு என்ன விபரீதம் ஏற்படும் என்பதைத் தனது மகளின் கைது நடவடிக்கை மூலம் ராணுவத்தினர் தெரியப்படுத்த முயல்வதாகக் கூறியுள்ளார் தமிமியின் தந்தை. இந்நிலையில் தன் சொந்த நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் அஹத் தமிமி, பாலஸ்தீனத்தின் ‘ஜோன் ஆப் ஆர்க்’காகக் கருதப்படுகிறார். அவரை விடுதலை செய்யக் கோரி சர்வதேச அளவில் இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் தரப்பட்டுவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்