போராட்டம்: உழைத்தவர்கள் உரிமை கோருகிறார்கள்

By எல்.ரேணுகா தேவி

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம், நகரின் பல இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன, பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் அவதி’ என்பன போன்ற வரிகள் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்த செய்திகளில் தவறாமல் இடம்பெற்றன. ஆனால், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அந்த ஊழியர்கள், பொதுமக்களின் ஓர் அங்கம் இல்லையா என்ற கேள்வியும் எதிரொலிக்கவே செய்தது. தற்போது நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறித் தம் அன்றாடப் பயணங்களுக்கு அரசுப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் எளிய மக்களை அல்லலுக்கு ஆளாக்கியிருக்கும் போராட்டத்தை அவர்கள் ஏன் கையிலெடுத்தனர் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

வந்து சேராத வைப்பு நிதி

போக்குவரத்து ஊழியர்களின் ஏழாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது நிர்வாகப் பணிகளுக்குச் செலவு செய்துள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாகத் தங்களுடைய நிலுவைத் தொகை ‘இன்று வரும், நாளை வரும்’ எனக் காத்துக்கொண்டிருந்த பல ஊழியர்கள் அதைப் பெறுவதற்கு முன்பு முதுமை மற்றும் உடல்நிலைப் பாதிப்பின் காரணமாக இறந்துவிட்டனர். தற்போது அவர்களுடைய குடும்பத்தினர் அந்தத் தொகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இரவு, பகலெல்லாம் போக்குவரத்துத் துறையில் உழைத்த தன்னுடைய கணவரின் நிலுவைத் தொகைக்காகச் சுமார் 12 ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த சுசீலா. வாடகை வீடு, இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் பிள்ளை என 53 வயதாகும் அவரது வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்.

“கணவர் இறந்த பிறகு நடுத்தெருவுக்கு வந்துவிட்டது என் குடும்பம். ஒரு பிள்ளையையாவது படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். ஊர்ல இருக்கறவங்களோட அவச்சொல்லுக்கு நடுவுல நாங்க வாழ்வதே பெரும்பாடா இருந்தது. ஒரு நாளைக்கு முப்பது ரூபாய் சம்பளத்துக்கு நாங்க மூணு பேரும் வேலைக்குப் போனோம். எப்பவும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு இருந்த என் கணவர் திடீர் மாரடைப்பால இறந்துட்டார்.

அவருக்கு முறையா சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதி (PF) இப்போ வரைக்கும் வழங்கப்படலை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பி.எஃப் பணத்தை வழங்கணும்னு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதுக்குப் பிறகு போக்குவரத்துக் கழக அதிகாரிங்ககிட்ட எத்தனை முறை போய் கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை. போக்குவரத்துக் கழக ஆபீஸுக்கு எப்போ போனாலும் பணம் இல்லைங்கற பதில் மட்டும்தான் வருது” என்று வருத்தத்தோடு சொல்கிறார் சுசீலா.

நிறுத்திவைக்கப்பட்ட ஓய்வூதியம்

தற்போதைய போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்குக் காரணமான பிரச்சினைகள் இன்றோ நேற்றோ முளைத்தவையல்ல. இறந்துவிட்ட பல ஊழியர்களின் குடும்பத்துக்குச் சென்றுசேர வேண்டிய ஓய்வூதியம் முறையாகக் கிடைக்காமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல லட்சம்வரை நிலுவையில் உள்ளது. “பல நேரம் வேறு ஓட்டுநர்கள் வேலைக்கு வரலைன்னா ராத்திரி எத்தனை மணி ஆனாலும் கதவைத் தட்டி என் கணவரைச் சேலத்திலிருந்து சென்னைக்கு வண்டி ஓட்ட போக்குவரத்து அதிகாரிங்க கூட்டிக்கிட்டுப் போவாங்க. இப்படிப் பல நாள் ஓய்வே எடுக்காம தொடர்ச்சியா வேலை செய்ததாலேயே அவர் உடல்நிலை சரியில்லாம 2006-ல் இறந்துட்டார். ஆனால், எனக்கு 2014-ல் இருந்துதான் மாதம் ஏழாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்குது.

இந்த ஓய்வூதியம்கூடப் பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் கிடைச்சுது. ஆனாலும், அவர் இறந்த 2006-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை எங்களுக்குத் தர வேண்டிய ரூ.5,68,000 குடும்ப ஓய்வூதியத்தைத் தராமல் போக்குவரத்துக் கழகத்தினர் நிறுத்தி வைத்திருக்காங்க” என்கிறார் விருத்தாசலத்தைச் சேர்ந்த லதா குமார். மாதம் கிடைக்கும் ஏழாயிரம் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு குடிசை வீட்டில் வசித்துவரும் லதா, திருமண வயதில் இருக்கும் மகளின் எதிர்காலத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டிருப்பதாக வேதனைப்படுகிறார்.

பாரபட்சம் ஏன்?

மறைந்த ஊழியர்களின் குடும்ப நிலை இப்படியென்றால் பணியில் இருக்கும் பெண் போக்குவரத்து ஊழியர்களின் நிலை இன்னும் மோசம். சென்னையில் நடத்துநராகப் பணிபுரிந்துவரும் பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஊழியர் ஒருவர், “நான் காலைல நாலு மணிக்கு டிப்போவுக்கு வந்து வண்டி எடுத்தால்தான் வேலை முடிச்சி வீட்டுக்கு நைட்டு பத்து மணி சுமாருக்கு போக முடியும். இதுக்காகவே ஒவ்வொரு நாளும் விடியக்காலைல புறநகர் மாவட்டத்துல இருந்து சென்னைக்கு ஓடி வர்றேன். குடிச்சிட்டு வர்றவங்க பலர் பெண் கண்டக்டர்னுகூடப் பார்க்காம பக்கத்துல நெருங்கி நிக்கப் பார்ப்பாங்க. அந்த மாதிரி ஆட்களுக்கு மத்தியில்தான் நாங்க வேலை செய்துட்டு வர்றோம்.

பல பஸ் ஸ்டாண்டுல பெண் டிரைவர்களும் கண்டக்டர்களும் தனிக் கழிப்பறை இல்லாம அவதிப்பட்டுக்கிட்டு இருக்கோம். இதனாலேயே நாங்க வேலை பார்க்குற பத்து மணி நேரமும் ரொம்ப கம்மியாதான் தண்ணீர் குடிக்கிறோம். இதய நோயாளியான நான் பலமுறை எனக்குப் போக்குவரத்து துறையில் வேறு ஏதாவது வேலை கொடுங்கன்னு அதிகாரிகங்ககிட்ட முறையிட்டிருக்கேன். ஆனால், அந்தக் கோரிக்கை கவனிக்கப்படவில்லை. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் வேலை பார்க்கும் எங்களுக்குத் தரப்படும் சம்பளம் ரொம்பக் குறைவு.

ஆனால், அரசின் மற்ற துறைகளில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையா ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுவருது. மக்களுக்கான அத்தியாவசிய சேவைத் துறையில் பணிபுரியும் எங்களை மட்டும் பணியில் இருக்கும்போதும் ஓய்வு பெற்ற பிறகும் எங்களுக்குச் சேர வேண்டிய தொகையைத் தராமல் இந்த நிர்வாகமும் அரசும் வஞ்சிக்குது” என்று தன் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தார்.

மக்களுக்கான அரசு என ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் உரக்கச் செல்லும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் அதை உளப்பூர்வமாகக் கருதி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பேருந்துகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்