இன்னைக்கு நான் ஆபீஸ்ல நுழைஞ்சதுமே ரம்யா என்னைப் புகழ ஆரம்பிச்சிட்டா.
“பெண் என்றால் உங்களைப் போல் இருக்கணும் மேடம். எவ்வளவு துணிச்சல்! ஒவ்வொரு செயலிலும் சும்மா தூள் கெளப்புறீங்க.”
“ரம்யா.. மேடமுக்குத் துணிச்சல் மட்டுமில்ல, அவங்க நெனச்சா எதையும் சாதிப்பாங்க.” - இது என் ஆபீஸ்ல வேலை பாக்குற லட்சுமி.
இப்படி ஆளாளுக்கு என்னை ரொம்பப் பெருமையாப் பேசுறது என்னை ஐஸ் வைக்கறதுக்கு மட்டுமில்ல, உண்மையும் கூட. நான் ரொம்ப தைரியசாலின்னு எனக்குத் தெரியும். ஜான்சி என்கிற பெயருக்கேற்ப நான் நடந்துகொள்வதாகப் பலரும் சொல்வார்கள்.
ரம்யாவும் லட்சுமியும் எந்தக் கூட்டமானாலும் என்னைப் பேச வைத்துவிடுவார்கள். நான் பேசுவது அந்தக் கூட்டத்தில் உள்ளோருக்குத் தைரியத்தையும் புத்துணர்வையும் தருவதாகச் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் என்னைப் பெண் என்று சொல்வதோ மேடம் என்பதோ எனக்குப் பிடிப்பதில்லை. ‘ஆணுக்கு நிகர்’ என்கிற வார்த்தை மட்டும் எனக்கு எப்போதும் சந்தோஷத்தைத் தருகிறது.
நானும் அவர்களிடம் நான் ஒரு திருநம்பி என்று சொல்லிவிட மனது தவிக்கும். ஆனால், உயரிய பொறுப்பில் இருக்கும் எனக்கு இதனால் எப்பேர்ப்பட்ட பிரச்சினை வருமோ என்கிற பயத்தில் சொல்ல மாட்டேன். அலுவலகப் பணியாளர்கள்எல்லாரும் என்னிடம் மதிப்போடு நடந்து கொள்வார்கள். அதிலும் ஆண்கள் என்னிடம் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். ஒரு முறை எல்லாரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா போயிருந்தோம். அப்போது ஆண் பணியாளர்களோடு பேசிக்கொண்டே இரவு முழுவதும் அவர்கள் ரூமிலேயே தூங்கியும் இருக்கிறேன். எனக்கு எந்த வேறுபாடும் தெரிந்ததில்லை. அவர்களும் என்னை வேறுபடுத்திப் பார்த்ததில்லை. என்னை ஒருவரும் திருநம்பி எனக் கண்டறிந்ததும் இல்லை.
கதையல்ல நிஜம்
ஒரு திருநம்பி தனது நிலையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் சூழலைத்தான் ஜான்சியின் கதை உணர்த்துகிறது. மனதளவில் பல குழப்பங்களோடு தவித்துவரும் ஜான்சியின் நிலையில்தான் இன்று பல திருநம்பிகள் வாழ்ந்துவருகின்றனர்.
l மாற்றுப் பாலினத்தவர் தன் நிலை குறித்து வெளியே சொல்லாமல் மறைத்து வாழும்போது மனது ஒரு பாலினமாகவும் உடல் வேறொரு பாலினமாகவும் இருக்கும். குறித்த காலத்தில் அவர்களின் மாற்றங்களை வெளிப்படுத்தவும் அவர்களுக்கான ஆலோசனைகள், சிகிச்சைகள் எளிதில் கிடைத்திடவும் வேண்டும்.
l இந்தக் கதையில் வரும் திருநம்பியைக் கண்டறிந்தாலும் அறியாவிட்டாலும் ஜான்சி மற்றவர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் நிலையில் இருப்பதால், அவளது பாலினம் குறித்துத் தெரிந்ததாகக்கூட யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
l இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் திருநம்பிகளை உள்ளடக்கிய திருநங்கைகள் நல வாரியத்தை முதலில் அமைத்தது. தமிழ்நாட்டில் இரண்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கான பால் மாற்று சிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றன.
l இந்தக் கதையில் வரும் திருநம்பி ஏங்குவது தாய் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்குத்தான். அது மட்டும் மாற்றுப் பாலின மக்களுக்கு மிகவும் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
என் அப்பா உயிரோடு இருந்தபோது ஒருநாள் அவரது வேட்டியை நான் யாருக்கும் தெரியாமல் அணிந்து கொண்ட போது எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். கண்ணாடி முன் வேட்டியோட நிக்கும்போது அமெரிக்காவுல இருக்குற என் பெரியப்பா பையன் மாதிரியே தெரிந்தேன்.
எனக்கு எனது கம்பெனியை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு. காரணம், என் அப்பா இந்த கம்பெனியை இரண்டு பேரை மட்டும் வைத்து ஆரம்பித்தார். உழைத்து உழைத்து 80 பேர் பணிபுரியும் அளவுக்கு உயர்த்தி ஒரு நாள் திடீரென்று மாரடைப்பில் இறந்துபோனார். ஆண் வாரிசு இல்லாத வீடு, இனி இந்த கம்பெனி அவ்ளோதான் என எல்லாச் சொந்தங்களும் சந்தோஷப்பட்ட நேரத்தில், நான் இந்தப் பொறுப்பை ஏற்றேன். ‘நான் எங்க அப்பாவின் மகன்’ என்கிற இறுமாப்பு எனக்கு எப்போதும் இருக்கும். அதுவே என் கம்பெனியின் வெற்றி. ஆனால், மனதளவில் நான் திருநம்பியாக வாழ்ந்தே இறந்து போய்விடுவேனோ என்கிற கவலை எப்போதும் எனக்கு உண்டு.
என் மனதில் உள்ள ஆண் உணர்வை அம்மாவிடம் சொல்லத் தோன்றும். சொன்னால் அம்மா எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று பயமாக இருக்கும். ஆனால், எத்தனை நாள்களுக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம். நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனியும் இப்படி மனவேதனையுடன் வாழ வேண்டாம். நேராக அம்மாவிடம் போனேன்:
“அம்மா உன்னிடம் பேசணும்.”
“என்னடி?”
“அம்மா நீ முதல்ல என்னை வாடி போடின்னு கூப்பிடாதே.”
“அப்போ என்னன்னு கூப்பிடறது?”
எங்கம்மா சிரிச்சிட்டே கேட்டாங்க.
“வாடா, போடான்னு கூப்பிடு.”
எங்கம்மா என்னை உத்துப் பார்த்துட்டு, “நீ எப்போ இப்படிச் சொல்லுவேன்னு காத்திருந்தேண்டா செல்லம். எனக்கு எல்லாம் தெரியும். உன்னைப் பெத்தவளாச்சே நான். நீ திருநம்பின்னு எனக்குத் தெரியுண்டா”
எனக்குப் பயங்கர ஆச்சரியம். எங்கம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தேன். ரொம்பச் சிரிச்சேன். சத்தமாச் சிரிச்சேன். உரக்கச் சிரிச்சேன். திடீர்னு முழிப்பு வந்தது. இப்போ மணி அதிகாலை 4.30.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago